ADDED : ஜன 09, 2025 02:57 PM

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
மாண்டலே சிறையில் சுபாஷ் சந்திர போஸின் உடல் நலம் குன்றியது. இதன்பின் 'சுபாஷ் சிறையிலேயே இறந்து விட்டார்' என வதந்தி பரவியது. இந்தியர்கள் அனைவரின் குற்றச்சாட்டும் தங்களை நோக்கித் திரும்புவதைக் கண்டு அதிர்ந்த பிரிட்டிஷ் அரசு அவரை விடுதலை செய்தது. கூடவே அவர் சிகிச்சைக்காக வெளிநாட்டுக்குச் செல்ல வேண்டும் என்றும், மூன்று ஆண்டுகளுக்கு இந்தியா பக்கம் வரக் கூடாது என்றும் நிபந்தனை விதித்தது. ஆனால் சுபாஷ் மசியவில்லை. 'நான் போக மாட்டேன். மக்களிடம் ஏற்பட்ட எதிர்ப்பை திசை திருப்பவே இப்படி சொல்கிறீர்கள்; இந்தியாவில் தான் இருப்பேன்' என திட்டவட்டமாக தெரிவித்தார்.
ஆனால் தன் உடல்நலனுக்காக 1930ல் சிகிச்சை செய்ய ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றார் சுபாஷ். அப்போது அங்குள்ள அரசியல்வாதிகளைச் சந்தித்து இந்திய விடுதலைக்கு உதவுமாறு கேட்டுக் கொள்ள முடிவு செய்தார். அந்த வகையில் 1935ல் முசோலினியை சந்தித்தார். அவரும் உதவி செய்வதாக வாக்களித்தார்.
பயணத்தின்போது ஆஸ்திரியாவைச் சேர்ந்த எமிலி என்ற பெண்ணைத் உதவியாளராகச் சேர்த்துக் கொண்டார். பின்னாளில் அவரைத் தன் மனைவியாகவும் ஏற்றார்.
இரண்டாவது உலகப்போர் மூண்டது. தங்கள் படையில் சேர்ந்து போரில் ஈடுபடவேண்டும் என இந்தியர்களை நிர்ப்பந்தம் செய்தது பிரிட்டிஷ் அரசு. ஆனால் சுபாஷ் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். அதோடு ஆரம்ப கட்டத்தில் பிரிட்டிஷ் படைகளுக்குப் போரில் தோல்வியும், பின்னடைவும் ஏற்பட்டது. இதை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, இங்கிலாந்துக்கு எதிரான நாடுகளுக்கு ஒத்துழைப்பை நல்கி, அதன் பலனாக விடுதலை பெறும் முயற்சியில் சுபாஷ் இறங்கினார்.
இதைத் தடுக்கும் முயற்சியாக அவரை 1940ல் மறுபடியும் சிறையில் அடைத்தது பிரிட்டிஷ் அரசு. தன் முயற்சி வெற்றி பெற வேண்டுமானால் தான் சிறையிலிருந்து வெளியே வரக் கூடாது என தீர்மானித்த சுபாஷ், அங்கே உண்ணாவிரதம் மேற்கொண்டார். ஏற்கனவே மாண்டலே சிறையில் அவர் உடல் நலம் குன்றியதன் விளைவாக, பிரபலமாகிவிட்டதால், மீண்டும் அதே போன்ற ஒரு சந்தர்ப்பத்தை அவருக்குக் கொடுத்து விடக் கூடாது எனக் கருதிய அரசு, அவருடைய போராட்டத்தைக் கைவிடுமாறு கெஞ்சியது. அவர் மறுத்து விட்டார். அதனால் தங்கள் செல்வாக்கு தரைமட்டமாவதை உணர்ந்த பிரிட்டிஷார் அவரை விடுதலை செய்தனர். ஆனால் 24 மணிநேரமும் அவரைக் கண்காணித்தனர்.
அதையும் மீறி, மாறுவேடத்தில் இந்தியாவிலிருந்து தப்பிச் சென்ற சுபாஷ், ஜெர்மானிய தலைநகரான பெர்லினுக்குச் சென்று ஹிட்லரைச் சந்தித்தார். இவருடைய வீர உணர்வை மதிக்கும் வகையில், இந்திய விடுதலைக்குத் தன் ஆதரவையும் தருவதாக ஹிட்லர் உறுதி அளித்தார்.
அதே பெர்லின் நகரில், 1941ல் சுதந்திர இந்திய மையம் என்ற அமைப்பைத் தொடங்கிய சுபாஷ், 'ஆசாத் ஹிந்த்' என்ற வானொலி சேவையை உருவாக்கினார்.
வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களை சுதந்திரத்துக்காக உதவுமாறும், போராடுமாறும் கேட்டுக் கொண்டார். அப்போது தான் 'ஜனகணமன...' பாடலை இந்திய தேசிய கீதமாக அறிவித்து, சுதந்திர இந்தியாவுக்கான கொடியையும் அவர் அறிமுகப் படுத்தினார். 'ஆசாத் ஹிந்த்' வானொலியால் சுதந்திர வேட்கை உலகெங்கும் பரவியது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு பல முனைகளில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின.
கொடூரமான பிரிட்டிஷ் அரசை அகிம்சை, சாத்வீகம், ஒத்துழையாமை என்றெல்லாம் மென்மையாக அணுகினால் அவர்கள் இன்னும் உச்சாணிக் கொம்பில் போய் ஏறிக் கொள்வார்கள் என்பதை உணர்ந்தார் சுபாஷ். ஆகவே ஆயுதம் ஏந்தி ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போரிட்டால்தான் சுதந்திரம் கிடைக்கும் என உறுதியாக நம்பினர். அதனால் ராஷ் பிஹாரி போஸால் துவக்கப்பட்டு, நாளடைவில் செயல்படாமல் போன 'இந்திய தேசிய ராணுவத்தின் தலைவர் பொறுப்பை ஏற்று அதற்குப் புத்துயிர் ஊட்டினார். தன் கருத்துடன் உடன்பாடு கொண்டுள்ள இளைஞர்களை தன்னுடன் இணைத்துக் கொண்டார்.
இளமையின் வேகத்தை இந்திய விடுதலையை நோக்கிப் பாயவிட்டார். இதற்காக இந்தியாவின் பல பாகங்களில் இருந்தும் இளைஞர்களைத் திரட்டி அவர்களுக்குப் போர்ப் பயிற்சியும் அளிக்க ஏற்பாடு செய்தார். தமிழகத்தில் இருந்தும் பங்களிப்பு இருந்தது. ஆமாம், இந்தப் படையில் சேருவதற்காக 600 வீரர்களை அனுப்பி வைத்தார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்.
இந்த ராணுவத்தில் பெண்கள் படையும் இடம் பெற வேண்டும் என்று விரும்பினார் சுபாஷ். அதாவது மென்மையானவர்களே ஆனாலும், அடிமைத்தளையை ஒழிக்க வேண்டும் என்ற கனலும் அவர்களின் உள்ளங்களில் வெம்மைப் பரப்பிக் கொண்டிருந்ததை அவரால் உணர முடிந்தது.
இதுபோன்ற தேசியம் சம்பந்தப்பட்ட இயக்கங்களில் தமிழ்ப் பெண்கள் எப்போதுமே முன்னணியில் இருந்திருக்கிறார்கள் என்பதற்கு ஓர் உதாரணம் லட்சுமி சுவாமிநாதன் என்ற பெண்.
'ஜான்சி ராணி படை' என்றழைக்கப்பட்ட பெண்கள் படையின் தலைவியாக விளங்கிய இவர், 'கேப்டன் லட்சுமி' என்றே அழைக்கப்பட்டார். அப்போது அவர் சிங்கப்பூரில் வாழ்ந்து வந்தார்.
இவரைப் போன்றே சுபாஷின் அபிமானத்தை பெற்ற இன்னொரு பெண் கோவிந்தம்மாள். இவர், மலேசியாவில் வசித்தபோது, அங்கே ஆதரவு திரட்டுவதற்காக வந்திருந்த நேதாஜியின் வீர உரையைக் கேட்டு அங்கேயே தன் ஆறு சவரன் வளையல், தனக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் ரப்பர் தோட்டத்தை இந்திய தேசிய ராணுவத்துக்கு நிதியாக அளித்தார். இவர் துப்பாக்கிச் சுடுதலிலும் வல்லவர். இவரைப் போல 1500 பேர் கொண்ட அந்த 'ஜான்ஸி ராணி' படையில் வீராங்கனைகளாக பலர் விளங்கியதோடு, தமக்குச் சொந்தமான நகைகள் எல்லாவற்றையும் இந்திய விடுதலை நிதியாக அளித்தனர்.
இந்தியா மட்டுமல்லாமல், உலகம் முழுவதிலும் பிரபலமாகி விட்ட சுபாஷ், அவருடைய தேசிய விடுதலை உணர்வைப் பாராட்டும் வகையில் 'நேதாஜி' என்று அழைக்கப்பட்டார். கூடுதல் ஆதரவு திரட்டுவதற்காக மீண்டும் வெளிநாடுகளுக்குச் சென்றார் சுபாஷ்.
அதற்குப் பிறகு ஆக. 23, 1945 அன்று ஜப்பான் வானொலி ஒரு செய்தியை ஒலிபரப்பியது. தைவான் நாட்டில் தாய்பெயிங் விமான நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் நேதாஜி இறந்து விட்டார் என்பதுதான் அது. அந்தச் செய்தியை யாராலும் நம்ப முடியவில்லை. அவர் மரணமடைந்தார் என்றால் அவர் உடலை இந்தியாவுக்கு அனுப்பி வைக்க வேண்டியதுதானே என லட்சக்கணக்கில் சந்தேகக் குரல்கள் எழுந்தன.
ஆனால் அவருடன் பயணம் செய்த ஹபிப் வுர் ரஹமான் என்பவர், விபத்தில் நேதாஜியின் உடல் எரிந்து விட்டதைத் தான் பார்த்ததாகச் சொல்ல மக்கள் குழம்பித் தவித்தார்கள். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரோ, 'நேதாஜி உயிருடன்தான் இருக்கிறார்' என்றே இறுதிவரை சொல்லி வந்தார்.
இவருடைய கூற்றுக்கு, தைவான் அரசு, அப்படி ஒரு விமான விபத்து நிகழவே இல்லை என்றும் அதனால் சுபாஷ் இறந்திருக்க வாய்ப்பே இல்லை என்றும் அறிவித்ததுதான் முக்கிய காரணம். ஆனால் நேதாஜியின் மரண முடிச்சு மர்மம் மட்டும் இன்னும் அவிழவே இல்லை.
சுவாமி விவேகானந்தரின் சர்வசமய வாதம், அவருடைய தேசியவாதம், சமூக சிந்தனை, சீரமைப்பு எண்ணங்கள் எல்லாம் சுபாஷின் சிறு வயதிலிருந்தே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின.
ஆனாலும் இறுதிவரை இவரிடம் மதவெறியோ, பழமைவாதமோ ஒருபோதும் இருந்ததேயில்லை. அதோடு பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான போராட்டத்துக்குத் தனக்கு மிகவும் ஊக்கமளித்ததாக பகவத் கீதையைக் குறிப்பிட்டிருக்கிறார் நேதாஜி. அவர் கையில் வைத்திருக்கும் பையில் பகவத் கீதை புத்தகம், துளசி மாலை, மூக்குக் கண்ணாடி இடம் பெற்றிருந்தன.
-தொடரும்
பிரபு சங்கர்
72999 68695

