/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பிளவக்கல் பெரியாறு அணை திறக்கப்பட்டது
/
பிளவக்கல் பெரியாறு அணை திறக்கப்பட்டது
ADDED : அக் 20, 2025 11:14 PM

வத்திராயிருப்பு: விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த மழையால் பிளவக்கல் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நேற்று முன் தினம் நள்ளிரவில் அணை திறக்கப்பட்டது.
சில நாட்களாக வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியிலும், பிளவக்கல் பெரியாறு,கோவிலாறு அணை நீர் பிடிப்பு பகுதிகளிலும் மழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் நாளுக்கு நாள் உயர்ந்து வந்தது.
நேற்று முன்தினமும் மாலை முதல் இரவு வரை விட்டு விட்டு பலத்த மழை பெய்தது. பிளவக்கல் பெரியாறு அணையில் 57.6 மில்லி மீட்டர் மழை பதிவான நிலையில் அணைக்கு வினாடிக்கு 392.33 கன அடி தண்ணீர் வரத்து ஏற்பட்டு அணையின் நீர்மட்டம் 41.67 அடியை தொட்டது.
மேலும் தண்ணீர் வரத்து காணப்பட்டதால் அணையின் பாதுகாப்பு கருதி நள்ளிரவு 11:30 மணிக்கு அணை திறக்கப்பட்டு வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
கோவிலாறு அணை நீர்பிடிப்பில் 65.6 மில்லி மீட்டர் மழை பதிவான நிலையில் அணைக்கு வினாடிக்கு 81.86 கன அடி தண்ணீர் வந்தது. அணையின் நீர்மட்டம் 16.73 அடியாக உயர்ந்தது.
வத்திராயிருப்பில் 49.8 மில்லி மீட்டர் மழை பதிவானது கண்மாய்களுக்கு தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூரில் 25 மி. மீட்டர் மழை பெய்த நிலையில் மம்சாபுரம், வாழைக்குளம் நிரம்பி பெரியகுளம் கண்மாய்க்கு தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது. வேப்பங்குளம், முதலியார் குளம் உட்பட பல்வேறு கண்மாய்களுக்கும் தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது.
செண்பகத் தோப்பு மலையில் பெய்த மழையின் காரணமாக பேயனாற்றில் நீர்வரத்து ஏற்பட்டு மறவன் குளம், மொட்ட பெத்தான் கண்மாய்க்கும் தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

