ரயில் பயணியர் முன்பதிவு அட்டவணை... இனி 10 மணி நேரத்துக்கு முன் வெளியாகும்!
ரயில் பயணியர் டிக்கெட்டுகளை இரண்டு மாதங்களுக்கு முன்னரே முன்பதிவு செய்யும் வசதி தற்போது நடைமுறையில் உள்ளது.
அவ்வாறு முன்பதிவு செய்த டிக்கெட்டுகளின் நிலை, ரயில் புறப்படுவதற்கு நான்கு மணி நேரத்துக்கு முன் வெளியிடப்பட்டு வந்தது.
கடைசி நேரத்தில் காத்திருப்பு பட்டியலிலுள்ள டிக்கெட்டுகள் ரத்தாவதால், பயணத்தை மாற்றியமைக்க பயணியர் சிரமப்பட்டனர்.
இதையடுத்து, முன்பதிவு அட்டவணையை எட்டு மணி நேரத்துக்கு முன் வெளியிட வேண்டும் என பயணியர் சங்கங்கள் பரிந்துரைத்தன.
அந்த கோரிக்கையை ஏற்று, கடந்த ஜூலையிலிருந்து எட்டு மணி நேரத்துக்கு முன் அட்டவணை வெளியிட்டு வந்த நிலையில், தற்போது 10 மணி நேரமாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இனி காலை 5:00 முதல் மதியம் 2:00 மணி வரை புறப்படும் ரயில்களுக்கு, முந்தைய நாள் இரவு 8:00 மணிக்கு அட்டவணை தயாரிக்கப்பட்டு, பயணியருக்கு அறிவிப்பு செல்லும்.
இதர ரயில்களுக்கு, அவை புறப்படும் நேரத்துக்கு 10 மணி நேரம் முன் முன்பதிவு அட்டவணை தயாரிக்கப்படும். இதை உடனடியாக அமல்படுத்த ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.
இதனால், காத்திருப்போர் பட்டியலிலுள்ள பயணிகள், தங்கள் டிக்கெட் உறுதியாகவில்லை என்ற நிலையில் மாற்று ஏற்பாடுகளை செய்ய கூடுதல் அவகாசம் கிடைக்கக்கூடும்.
இதன்படி, பிஎன்ஆர் எண்ணைப் பயன்படுத்தி கீழ்கண்ட வழிகளில் தங்களின் நிலையை தெரிந்து கொள்ளலாம்.
ஐஆர்சிடிசி அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட செயலிகளில் செக் பிஎன்ஆர் ஸ்டேட்டஸ் பகுதிக்குச் சென்று சரி பார்க்கலாம்.
உங்கள் 10 இலக்க பிஎன்ஆர் எண்ணை 139 அல்லது 5676747 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பலாம். எந்தவொரு போனிலும் 139 என்ற எண்ணை அழைத்து நிலையை அறியலாம்.