நான்கே நாட்களில் 50 கோடியை நெருங்கும் 'வாழ 2'
மலையாளத்தில் கடந்த 2024ல் 'வாழ' என்கிற திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றியைப் பெற்றது. முற்றிலும் புதுமுகங்களை வைத்தே உருவாகி இருந்த இந்த படத்தை குருவாயூர் அம்பல நடையில் படத்திற்கு இயக்குனர் விபின் தாஸ் கதை எழுதி அந்த படத்தை தயாரித்தும் இருந்தார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது அதன் இரண்டாம் பாகம் 'வாழ 2' என்கிற பெயரில் உருவாகி வந்தது. இந்த நிலையில் கடந்த வியாழனன்று வெளியான இந்த படம் முதல் பாகத்தைப் போலவே ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
குறிப்பாக கடந்த மூன்று நாட்களில் உலக அளவில் 42 கோடி வசூலித்துள்ளது. நான்காம் நாளான இந்த ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளையும் சேர்க்கும் போது எளிதாக நான்கு நாட்களில் 50 கோடி என்கிற இலக்கை தாண்டி விடும் என தெரிகிறது. படத்தின் கதை ரசிகர்களுக்கு பிடித்துவிட்டால் சிறிய படங்கள் கூட மிகப் பெரிய வெற்றியை பெரும் என்பது சமீப காலமாக மலையாளத்தில் தொடர்ந்து நிரூபிக்கப்பட்டு வருகிறது. அந்த பட்டியலில் 'வாழ 2' படமும் தற்போது இணைந்துள்ளது.