உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிரேம் நசீர் நூற்றாண்டு : யாராலும் வெல்ல முடியாத சாதனைகளைப் படைத்த மகா கலைஞன்

பிரேம் நசீர் நூற்றாண்டு : யாராலும் வெல்ல முடியாத சாதனைகளைப் படைத்த மகா கலைஞன்

மலையாள சினிமாவின் முடிசூடா மன்னனாக திகழ்ந்து, யாராலும் இனி படைக்கவே முடியாத மகத்தான சாதனைகளை படைத்த பிரேம் நசீரின் 100வது பிறந்த நாள் இன்று. 600 மலையாளப் படங்களில் நாயகனாக நடித்தார். நடிகை ஷீலாவுடன் மட்டும் இணைந்து 120 படங்களில் நடித்தார். 80 நடிகைகளுடன் ஜோடி சேர்ந்து நடித்தார். 1979ம் ஆண்டில் மட்டும் 30-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். 33 படங்களில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்.

பிரேம் நசீர் அறிமுகமானது தமிழ் படத்தில்தான். 'இருளுக்குப் பின்' என்பதுதான் இவரது முதல் தமிழ்த் படம். வண்ணக்கிளி, தந்தை, தை பிறந்தால் வழி பிறக்கும், சகோதரி, திலகம், பாலும் பழமும், தங்கம் மனசு தங்கம், முரடன் முத்து, உலகம் சிரிக்கிறது, தங்கரங்கன் ஆகியவை அவர் நடித்த முக்கியமான தமிழ் படங்கள்.

1951ம் ஆண்டு 'அச்சன்' என்ற மலையாளப் படத்தின் மூலம் அறிமுகமானார். இதே படம் தமிழில் 'தந்தை' என்ற பெயரில் வெளிவந்தது. தமிழ்ப் படங்களிலும் சொந்தக் குரலிலேயே பேசி நடித்தார். 'மருமகள்' என்ற மலையாளப் படம் பெரிய வெற்றி பெற்று அவரை நடிகராக அடையாளம் காட்டியது. அதே ஆண்டிலேயே 'விசப்பின்றெ விளி' படத்தில் நடித்தார். அப்போதுதான் இவரது பெயர் பிரேம் நசீர் என மாற்றப்பட்டது. மலையாளத்தில் தொடர்ந்து வாய்ப்புகள் வந்ததால், தமிழில் கவனம் செலுத்த இயலவில்லை.

பத்மஸ்ரீ, பத்மபூஷண் விருதுகளை வென்றுள்ளார். இறுதிவரை இளமை குன்றாத எழில் தோற்றத்துடன் கதாநாயகனாக நடித்ததால், மலையாள ரசிகர்களால் 'நித்ய ஹரித நாயகன்' (எவர் க்ரீன் ஹீரோ), 'நித்ய வசந்தம்' என்று போற்றப்பட்டவர். 1989ம் ஆண்டு தனது 59-வது வயதில் மறைந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !