தன் குரலை பயன்படுத்தி மோசடி : கோர்ட் உதவியை நாடிய அல்லு அர்ஜுன்
தன் பெயர், குரல் மற்றும் வடிவமைப்பு போன்றவற்றை பயன்படுத்தி, மோசடி செயல்கள் நடத்தப்படுகின்றன என்பதால், தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நீதிமன்றத்தின் நடவடிக்கையை நாடியுள்ளார்.
பாலிவுட் பட உலகின் நட்சத்திரங்களான ஐஸ்வர்யா ராய் பச்சன், அபிஷேக் பச்சன், சல்மான் கான் மற்றும் வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், பத்திரிகையாளர் சுதிர் சவுத்ரி போன்ற பலர், தங்கள் குரல், பெயர், உருவம் போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது என நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து, தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு பெற்றுள்ளனர்.
அந்த வரிசையில் இப்போது தெலுங்கு மொழியின் பிரபலமான நடிகர் அல்லு அர்ஜுனும் சேர்ந்துள்ளார். டில்லி உயர் நீதிமன்றத்தில் அவர் தொடர்ந்துள்ள வழக்கில், அனுமதியில்லாமல் தன் பெயர், குரல், வடிவமைப்பு போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது என தெரிவித்துள்ளார். அவரின் மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், விரைவில் நல்ல தீர்ப்பு வழங்கப்படும் என உறுதியளித்துள்ளது.
மொபைல் போன் செயலி ஒன்றில் 'புஷ்பா' என்ற பெயரில் செய்யப்பட்ட மோசடி செயல், சமீபத்தில் கண்டறியப்பட்டதை அடுத்து, தன் குரல், பெயர் போன்றவற்றை பயன்படுத்த தடை கோரி, அல்லு அர்ஜுன் மனு தாக்கல் செய்துள்ளார்.
சமீபத்தில், பாலிவுட் நட்சத்திரங்கள் சோனாக்சி சின்ஹா, விவேக் ஒபராய் போன்றோர், டில்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து, தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு பெற்றுள்ளனர்.