உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பாடகி சுசீலாவின் ஓட்டு பறிப்பு : 90 வயதிலும் ஜனநாயக கடமையாற்ற வந்தவருக்கு ஏமாற்றம்

பாடகி சுசீலாவின் ஓட்டு பறிப்பு : 90 வயதிலும் ஜனநாயக கடமையாற்ற வந்தவருக்கு ஏமாற்றம்

தென்னிந்திய சினிமாவின் ‛இசையரசி' பாடகி பி சுசீலா. வட இந்தியாவில் லதா மங்கேஷ்கர் போன்று தென்னிந்தியாவின் பாடும் வானம்பாடி என பெயர் எடுத்தவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி, இந்தி, ஒரியா, சமஸ்கிருதம், சிங்களம் என 9 மொழிகளில் சுமார் 40,000-க்கும் அதிகமான பாடல்களை பாடியிருக்கிறார். 17,695 பாடல்களை தனியாக பாடியதற்காக சுசீலாவின் பெயர் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. பத்மபூஷன், தேசிய விருது, மாநில விருதுகள் வாங்கி உள்ளார்.

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நேற்று நடந்தது. ஓட்டளிப்பதற்காக 90 வயதை கடந்த சுசீலா, ஐதராபாத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்துள்ளார். இவரது தொகுதி சென்னை, மயிலாப்பூர். ஆழ்வார்பேட்டை, உதவி பொறியாளர் அலுவலகத்தில் இவரது ஓட்டுச்சாவடி உள்ளது.



90 வயதை கடந்தவர் என்பதால் தபால் ஓட்டு மூலம் இவரது ஓட்டை வாங்க சில தினங்களுக்கு முன் அதிகாரிகள் சென்றுள்ளனர். ஆனால் நேரில் வந்து ஓட்டளிக்கிறேன் என சுசீலா கூறிவிட்டார். அதன்படி நேற்று மாலை 3 மணியளவில் ஓட்டளிக்க சென்றுள்ளார். அவரை காரில் இருந்து கூட கீழே இறக்காமல் உங்கள் ஓட்டு முத்திரையிடப்பட்டு அதிகாரிகளுக்கு அனுப்பியாச்சு என கூறி உள்ளனர். எனது அனுமதி இல்லாமல் எப்படி நீங்கள் அனுப்பலாம் என கேட்டுள்ளார். ஆனால் சரியான பதில் இல்லை. இவரது ஓட்டை அதிகாரிகளே போட்டு அனுப்பிவிட்டார்களா அல்லது ஓட்டு போடாமல் அதை அப்படியே முத்திரையிட்டு அனுப்பினார்களா என்பது தெரியவில்லை. இதனால் மன உளைச்சலில் வீட்டிற்கு வந்துவிட்டார்.

இதுபற்றி சுசீலா கூறுகையில், ‛‛என்னுடைய இத்தனை ஆண்டுகளில் ஒருமுறை கூட ஓட்டு போடாமல் இருந்தது இல்லை. எந்த ஊரில் இருந்தாலும் ஓட்டு போட வந்துவிடுவேன். 90 வயதிலும் ஐதராபாத்தில் இருந்து ஓட்டு போட சென்னை வந்தேன். ஆனால் என்னால் ஓட்டு போட முடியவில்லை. மிகுந்த வேதனையாக உள்ளது. இதைபற்றி யாரிடம் தெரிவிப்பது என தெரியவில்லை'' என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !