திரிஷாவாக இருப்பது அத்தனை எளிதல்ல: 'கருப்பு' பட விழாவில் ஆர்.ஜே.பாலாஜி பேச்சு
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா, திரிஷா நடித்துள்ள படம் 'கருப்பு'. இதன் பாடல் வெளியீட்டு விழா, மதுரையில் நேற்று நடைபெற்றது. விழாவில் இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜி எப்போதும் போல கிண்டலாகவும் கலகலப்பாகவும் பேசினார். அவர் பேசியதாவது: இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே நான் மதுரையில் உள்ள கருப்புசாமி கோவிலுக்கு வந்திருந்தேன். அப்போதே தயாரிப்பாளர்களிடம் இந்தப் கருப்பு ஆடியோ வெளியீட்டு விழா மதுரையில் தான் நடக்க வேண்டும் என்று சொன்னேன்.
இந்தத் திரைப்படம் முழுவதுமே கருப்புசாமி என் கையைப் பிடித்துக்கொண்டு என்னுடனேயே பயணித்திருக்கிறார். அதுதான் இப்போது எனது மிகப்பெரிய பலம் என்று நான் நம்புகிறேன். இசையமைப்பாளர் சாய் அபயங்கர் எங்களோடு இணையும்போது ஒரு படம் வைத்திருந்தார். இப்போது 73 படங்களில் ஒப்பந்தமாகியிருக்கிறார். நான் அவர் வீட்டுக்குச் சென்றபோது அங்கே ஒரு ஹெலிகாப்டரே நிற்கிறது. அவர் ஒரு வரப்பிரசாதமான இசையமைப்பாளர், அவரை இந்தத் திட்டத்திற்குள் கொண்டு வந்தது எங்களது 'மாஸ்டர் ஸ்ட்ரோக்' என்று இப்போது உணர்கிறோம். ஒரு பாடல் வெளியானதும் சில சமயம் மக்கள் அவரை வம்பிழுப்பார்கள், ஆனால் 15 நிமிடங்களிலேயே அவரது பாடல் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கிவிடுகிறது.
நடிகர் இந்திரன்ஸ் இந்தப் படத்தில் மிகச்சிறந்த பணியைச் செய்திருக்கிறார். அவருடைய நடிப்பைப் பார்த்து நான் வியந்து போனேன். இந்த விழாவில் திரிஷாவால் இன்று எங்களோடு இணைய முடியவில்லை, ஆனால் அவருக்கு எனது நன்றிகள். 'திரிஷா'வாக இருப்பது அத்தனை எளிதல்ல, 23 ஆண்டுகளாகத் திரையுலகின் உச்சத்தில் இருப்பது சாதாரண காரியம் கிடையாது. சமீப காலங்களில் அவர் நடித்ததில் இது ஒரு சிறந்த கதாபாத்திரமாக இருக்கும்.
ஒரு பெரிய படத்தையும், பெரிய ஸ்டாரையும் எப்படி கையாள்வது என்று எனக்குத் தெரியவில்லை. நான் யோசித்துக் கொண்டிருந்தபோது, ஒரு மனிதர் என் கையைப் பிடித்து என்னை வழிநடத்தினார். அவர்தான் ஒளிப்பதிவாளர் ஜி.கே. விஷ்ணு. ஒரு ஹீரோவை எப்படி மாஸாகக் காட்ட வேண்டும் என்று அவருக்குத் தெரியும்.
'வலிமை' அப்டேட்டிற்குப் பிறகு, அதிகமாகக் கேட்கப்பட்ட ஒன்று 'கருப்பு' அப்டேட் தான். ஆனால் வெளியே இருந்து முதலில் அடி வாங்குவது தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு தான். ரசிகர்கள் அவரைத் தான் குறிவைப்பார்கள். இந்த இரண்டு ஆண்டு பயணம் மிகவும் கடினமாக இருந்தது, ஆனால் அவர்கள் எனக்கு ஆதரவளித்தனர். சில எதிர்பாராத விஷயங்களும் நடந்தன.
கோடிக்கணக்கான ரூபாயை முதலீடு செய்து எனக்கு முழு ஆதரவையும் வழங்கினர். நானும் இந்தப் படத்திற்காக 100% நேர்மையாக உழைத்திருக்கிறேன். எனக்கும் எஸ்.ஆர். பிரபுவுக்கும் இடையில் சண்டைகள், விவாதங்கள் எல்லாம் நடந்தன. ஆனால் இப்போது நாங்கள் ஒரு நல்ல புரிதலில் இருக்கிறோம். 'கருப்பு' படத்தின் மூலம் எனக்கு ஒரு குடும்பமே கிடைத்துள்ளது
நாங்கள் ஐந்து பேர் சேர்ந்து தான் இந்தப் படத்தின் கதையை எழுதியுள்ளோம். இந்த டீம் கடந்த இரண்டு ஆண்டுகளாக என்னுடன் இருக்கிறது. இந்தப் படத்திற்காக நான் 32 மாதங்களைச் செலவிட்டுள்ளேன். இது எல்லாம் நடக்கக் காரணம் ஒரே ஒரு மனிதர் - சூர்யா சார். நான் அவருக்கு 45 நிமிடங்கள் தான் கதை சொன்னேன், ஆனால் அவர் உடனடியாக சம்மதித்தார். 'சூர்யா சார் உன் படம் பண்றாரா?' என்று என் மனைவியே ஆச்சரியப்பட்டார். என் மீது அவர் வைத்திருக்கும் நம்பிக்கைக்காக அவருக்குச் சிறந்ததைக் கொடுக்க நினைத்தேன்.
சூர்யா திரையில் மகிழ்ச்சியாக, ஜாலியாக இருக்க வேண்டும், அதே சமயம் மாஸாகவும் தெரிய வேண்டும் என்று விரும்பினேன். பொதுவாகப் பெரிய ஹீரோக்கள் படம் என்றால் எல்லா காட்சிகளிலும் ஹீரோ இருப்பார். ஆனால் 'கருப்பு' படத்தில் அவர் இல்லாத பல காட்சிகள் உள்ளன, கதையின் போக்கில் பல கிளைக்கதைகள் உள்ளன. அதற்கு அவர் சம்மதித்து நடித்தார். திரையில் அவருடைய கண்கள் மட்டுமே பேசும். நான் அதிகம் சொல்ல விரும்பவில்லை - முதல் பாதி கமர்ஷியலாகவும், இரண்டாம் பாதியில் ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் ஒரு 'ஹை' ஆக இருக்கும். ஒரு அரசன் தனது சிம்மாசனத்தை நோக்கி வருகிறான்.
போஸ்டர்களில் ஏன் ரிலீஸ் தேதியைப் போடவில்லை என்று ரசிகர்கள் கேட்கிறார்கள், ஆனால் அப்படிப் போட்டால் சென்சார் போர்டு ஒரு குத்து குத்துறாங்க. சீக்கிரம் போடுவோம். பட்டாசு எடுத்து வைங்க, பண்டிகை வரப் போகுது. இவ்வாறு அவர் பேசினார்.