ஆர்பி சவுத்ரிக்கு கண்ணீர் மல்க விஜய் இறுதி அஞ்சலி : கதறி அழுத ஜீவாவிற்கு ஆறுதல்
ராஜஸ்தானில் நடந்த சாலை விபத்தில் பிரபல தயாரிப்பாளர் சூப்பர் குட் பிலிம்ஸின் ஆர்பி சவுத்ரி உயிரிழந்தார். அவரது இழப்பு திரையுலகினர் இடையே கடும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. நேற்று மரணம் அடைந்த சவுத்ரி உடல் இன்று சென்னை வந்தது. முதலில் அவரது மகன், நடிகர் ஜீவாவின் தி.நகர் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்ட சவுத்ரி உடலுக்கு விஷால், கார்த்தி உள்ளிட்ட திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர்.
நடிகரும், தவெக., தலைவருமான விஜய்யும், சவுத்ரி உடலுக்கு நேரில் சென்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அதிக தொகுதிகளை வென்று ஆட்சியமைக்க போகும் விஜய், அதற்கான ஏற்பாடுகள் நடந்து வரும் பரபரப்பான சூழலில் தனக்கு சினிமாவில் திருப்புமுனை தந்த தயாரிப்பாளருக்காக தனது இறுதி அஞ்சலியை செலுத்தினார். சவுத்ரியின் மகனும், நடிகருமான ஜீவா, விஜயை பார்த்ததும் கண்ணீர் விட்டு கதறினார். அவரை கட்டியணைத்து ஆறுதல்படுத்திய விஜய்யும் கண் கலங்கினார்.
விஜய்க்கு சினிமாவில் திருப்புமுனை தந்த படம் ‛பூவே உனக்காக'. விக்ரமன் இயக்கிய இப்படத்தை ஆர்பி சவுத்ரி தயாரித்தார். தொடர்ந்து இவர்களின் நிறுவனத்தில் ‛லவ் டுடே, துள்ளாத மனமும் துள்ளும், சிவகாசி, ஜில்லா' போன்ற படங்களிலும் நடித்தார். சூப்பர் குட் பிலிம்ஸின் 100வது படத்தில் விஜயை நடிக்க வைக்க பேசி வந்தனர். ஆனால் அவரின் சம்பளம், பட பட்ஜெட், குறிப்பாக அவர் அரசியலுக்கு பயணமானது போன்ற காரணங்களால் நடக்கவில்லை.
சவுத்ரியின் இறுதிச்சடங்கு நாளை சென்னையில் காலை 10:30 மணியளவில் நடக்கிறது.