உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கர்ணபரம்பரையாக கேட்டு மகிழ்ந்த “கண்ணகி” கதையின் கலையுலக சாதனை

கர்ணபரம்பரையாக கேட்டு மகிழ்ந்த “கண்ணகி” கதையின் கலையுலக சாதனை

இளங்கோ அடிகள் “சிலப்பதிகாரம்” என காப்பியமாக வடித்து, தமிழன்னைக்கு பெருமை சேர்த்த ஓர் இலக்கியப் பதிவுதான் 'கண்ணகி'யின் கதை. மன்னர் குலத்து மாந்தர்களை மட்டுமே காப்பிய நாயகர்களாகக் கொண்டிருந்த இலக்கிய உலகு, முதன் முறையாக வணிக குலத்து மாந்தர்களை கதையின் நாயகர்களாகக் கொண்டிருந்ததாலோ என்னவோ கோவலனும், கண்ணகியும் மக்களிடையே ஐக்கியமாகி இன்று வரை வாழ்ந்தும் வருகின்றனர்.

சினிமா பேசத் தொடங்கிய மூன்றாவது ஆண்டில் வெளிவந்தது ஒரு “கோவலன்”, நான்காம் ஆண்டில் ஒரு “கோவலன்” என இந்தக் கதை திரை வடிவம் பெற்று, திரளான ரசிகர்களின் வரவேற்பினையும் பெற்றிருந்தது. முதல் படத்தில் நரசிம்மராவ் என்பவர் கோவலனாகவும், லீலா என்பவர் கண்ணகியாகவும் நடிக்க, இரண்டாவது படத்தில் வி ஏ செல்லப்பா கோவலன் வேடத்திலும், டி பி ராஜலக்ஷ்மி கண்ணகி வேடத்திலும் நடித்திருந்தனர்.

1942ல் “ஜுபிடர் பிக்சர்ஸ்” தயாரிப்பில் வெளிவந்த “கண்ணகி” திரைப்படம் பெரும் வெற்றியை பெற்ற திரைப்படமாக அறியப்பட்டது. இந்தப் படம் பெற்ற வெற்றியை அப்போது வெளிவந்த வேரெந்த திரைப்படமும் பெறவில்லை என்பது செய்தி. நடிகர் பியு சின்னப்பா கோவலனாகவும், பி கண்ணாம்பா கண்ணகியாகவும், எம்எஸ் சரோஜா மாதவியாகவும், யுஆர் ஜீவரத்தினம் கவுந்தி அடிகளாகவும் நடித்திருந்த இத்திரைப்படத்தில், ஆர் பாலசுப்ரமணியம், என்எஸ் கிருஷ்ணன், டிஏ மதுரம், எஸ்வி சகஸ்ரநாமம், டிஆர் ராமச்சந்திரன் என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்தனர்.

பொம்மன் இரானி என்ற இயக்குநர் இத்திரைப்படத்தை இயக்க ஆரம்பித்து, பின்னர் அவர் படத்திலிருந்து நீக்கப்பட்டு, இயக்குநர் ஆர்எஸ் மணி படத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டார். அன்றைய நாளில் மிகவும் பிஸியான வசனகர்த்தாவாக இருந்து வந்த இளங்கோவன்தான் இத்திரைப்படத்திற்கும் வசனம் எழுதியிருந்தார். ஒவ்வொரு நாளும் ஸ்டூடியோவில் படப்பிடிப்பு ஆரம்பமாகும் முன்புதான் வசனம் எழுதப்பட்ட காகிதங்களே காரில் வந்து இறங்குமாம்.

“பத்தினி தெய்வம்” என்ற பெயரில் வந்த கோவலன் நாடகக் கதை, இளங்கோ அடிகளின் “சிலப்பதிகாரம்”, “சிலம்புக் காப்பிய நாடகக் காட்சிகள்”, “நாடோடிக் கதைகள்”, “கர்ணபரம்பரைக் கதைகள்”, மற்றும் “கோவலன்-மாதவி”, “கோவலன்-கண்ணகி” தெருக்கூத்துக்கள் என அனைத்தையும் ஆராய்ந்து, திரைக்கதை வசனம் எழுதி இத்திரைப்படத்தை இயக்கியிருந்தார் இயக்குநர் ஆர்எஸ் மணி. படத்தில் பரமசிவனாக நடித்திருந்த நடிகர் எஸ்வி சகஸ்ரநாமம்தான்; படத்தின் உதவி இயக்குநராக பணியாற்றியிருந்தார்.

நடிப்பு, வசனம், பாடல், படப்பிடிப்பு என அனைத்திலும் முத்திரைப் பதித்து, வெற்றிக் கொடி நாட்டியது இந்த “கண்ணகி” திரைப்படம். இதனைத் தொடர்ந்து 1964ம் ஆண்டிலும் “பூம்புகார்” என்ற பெயரில் நடிகர் எஸ்எஸ் ராஜேந்திரன், விஜயகுமாரி, ராஜஸ்ரீ, கே பி சுந்தராம்பாள் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த அந்த திரைப்படமும் கோவலன், கண்ணகி, மாதவியை சித்தரிக்கும் கதையாகவே வந்து, ரசிகர்களிடம் வரவேற்பினைப் பெற்றிருந்தது. இவ்வாறு நம் தமிழ் திரையுலகில் இந்த “கண்ணகி” கதை, காலங்காலமாக கலைஞர்களை மட்டுமே மாற்றி, காலம் கடந்தும் பேசப்பட்டு வரும் ஒரு காவியப் படைப்பாகவே பயணித்து வந்திருக்கிறது என்பதே இந்தக் கதைக்கான ஒரு தனிச்சிறப்பு என்பதில் எந்த ஐயமும் இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !