ஜூன் 1ல் இளையராஜாவின் ‛சிம்பொனி' வெளியீடு
ADDED : 1 days ago
இந்திய சினிமாவில் கொண்டாடப்படும் இசையமைப்பாளர் இளையராஜா. அன்னக்கிளி தொடங்கி சமீபத்தில் கார்த்திக் சுப்பராஜின் படம் வரை 1500க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
இவரின் நீண்டநாள் ஆசை சிம்பொனி இசை. இதையும் கடந்தாண்டு லண்டனில் ‛வேலியன்ட்' எனும் தலைப்பில் அரங்கேற்றினார். ஆசியாவில் இப்படியொரு சாதனையை செய்த முதல் இசையமைப்பாளர் இளையராஜா என்ற பெருமையை இவர் பெற்றார். தொடர்ந்து கடந்தாண்டு தமிழக அரசு சார்பில் இளையராஜாவிற்கு பாராட்டு விழா நடந்தபோது அந்த நிகழ்விலும் சிம்பொனியை நேரலையில் வழங்கி ரசிகர்களை மகிழ்வித்தார்.
இந்நிலையில் இளையராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் இசையமைத்த வேலியண்ட் சிம்பொனி இசை வருகிற ஜூன் 1ம் தேதி அனைத்து ஆடியோ தளங்களிலும் வெளியாகும் என அவரது இசை நிகழ்ச்சிகளை நடத்தும் மெர்குரி நிறுவனம் அறிவித்துள்ளது.