தவறுதலாக கிரிக்கெட்டை கால்பந்தாக மாற்றிய ராம்சரண் ; கிரிக்கெட் வீரர் பும்ராவிடம் மன்னிப்பு கேட்டார்
தெலுங்கில் ராம்சரண் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பெத்தி'. இயக்குனர் புச்சிபாபு சனா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஜான்வி கபூர் கதாநாயகியாக நடித்துள்ளார். வரும் ஜூன் நான்காம் தேதி படம் வெளியாக இருக்கிறது. இதற்காக மும்பை உள்ளிட்ட பல இடங்களில் இதன் புரமோஷன் நிகழ்ச்சிகளை படக்குழுவினர் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் போபாலில் இதன் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.
இந்த படம் கிரிக்கெட் மற்றும் மல்யுத்த விளையாட்டு தொடர்பான படம் என்பதால் இந்த நிகழ்ச்சியின் போது மேடையில் ராம்சரணிடம் அவருக்கு பிடித்த கிரிக்கெட் வீரர்கள் குறித்து ஒரு வார்த்தையில் கமெண்ட் செய்யும்படி கேட்கப்பட்டது. அதற்கு ராம்சரண் சச்சின், தோனி, ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோரை பற்றி ஒன் லைன் பஞ்ச் கூறி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.
அதே சமயம் கிரிக்கெட் வீரர் ஜஸ்பிரித் பும்ரா பற்றி அவர் பேசும்போது, “நான் உங்கள் மிகப்பெரிய ரசிகன். நீங்கள் கால்பந்தை மிக உயரத்திற்கு கொண்டு செல்கிறீர்கள்” என்று வாய் தவறி சொல்லிவிட்டார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்ததுடன் ராம்சரணின் பேச்சால் அரங்கத்தில் சிரிப்பலையும் எழுந்தது. இது குறித்த வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் பயங்கரமாக பரவி வருகிறது.
இதனை தொடர்ந்து ராம்சரண் உடனடியாக இதற்காக மன்னிப்பு கேட்டு ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “சில நேரங்களில் பெயர்களை நான் மறந்து குழப்பிவிடுவேன். அந்த உற்சாகமான சூழ்நிலையில் நடந்த மனிதத் தவறு இது. பும்ரா ஜி, இந்த குழப்பத்திற்கு மன்னிக்கவும். உங்கள் விளையாட்டுக்கு நான் மிகப்பெரிய ரசிகன். நீங்கள் ஒவ்வொரு இந்தியரையும் பெருமைப்பட வைக்கிறீர்கள்” என்று பதிவிட்டுள்ளார். ஒரு பக்கம் ராம்சரண் இப்படி வெளிப்படையாக மன்னிப்பு கேட்டதை பலர் வரவேற்றாலும், வழக்கம் போல சிலர் இதை மீம்ஸ் போட்டு கிண்டல் செய்து வருகின்றனர்.