கமல்ஹாசனை தொடர்ந்து பிரைவேட் ஜெட்டை தவிர்க்கும் அல்லு அர்ஜுன்
பிரபல முன்னணி ஹீரோக்கள் தங்கள் படப்பிடிப்பு நடைபெறும் இடங்களுக்கு தனி பிரைவேட் ஜெட்டுகளில் செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் கமல்ஹாசன், தான் நடித்து வரும் 'கல்கி 2898 ஏடி' படத்தின் படப்பிடிப்பிற்காக தனி விமானத்தை தவிர்த்து விட்டு சக பயணிகளை போல பலரும் பயணிக்கும் எகனாமி கிளாசில் பயணம் செய்தார். இது குறித்த புகைப்படம் ஒன்றும் வெளியாகி வைரலானது. தயாரிப்பாளர்களின் செலவை குறைப்பதற்காகவே கமல் இந்த நடவடிக்கையை மேற்கொண்டார் என்று சொல்லப்பட்டது.
இந்த நிலையில் கமலை போலவே நடிகர் அல்லு அர்ஜுனும் தனது படப்பிடிப்பு பணிகளுக்காக தனி பிரைவேட் ஜெட் விமானத்தை பயன்படுத்துவதை தவிர்த்து வருகிறார் என்றும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அட்லி இயக்கத்தில் 'ராக்கா' என்கிற படத்தில் நடித்துவரும் அல்லு அர்ஜுன், அந்த படத்தின் படப்பிடிப்பிற்காக ஹைதராபாத்தில் இருந்து மும்பை உள்ளிட்ட சில இடங்களுக்கு பிரைவேட் ஜெட்டில் பயணிப்பதை தவிர்த்து விட்டார் என்றும், எல்லோரும் பயணிக்கும் விமானத்திலேயே தானும் பயணிக்கப் போவதாக கூறியுள்ளார் என்றும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. பட தயாரிப்பு செலவை குறைக்கும் விதமாகவே அவர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார் என்று தெரியவந்துள்ளது.