உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தேனியில் பாரதிராஜா உடலுக்கு அஞ்சலி செலுத்திய திரையுலகினர்

தேனியில் பாரதிராஜா உடலுக்கு அஞ்சலி செலுத்திய திரையுலகினர்

இயக்குனர் பாரதிராஜா சென்னையில் நேற்று உடல்நலக் குறைவால் காலமானார். சென்னையில் அரசியல் பெருமக்கள், திரையுலகினர் அஞ்சலி செலுத்திய பின்னர் அவரது உடல் தேனி, காட்ரோட்டில் உள்ள அவரது தோட்டத்திற்கு கொண்டு வரப்பட்டது. இங்கு காலை முதல் பொதுமக்களும், உறவினர்களும் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து திரையுலகினர் சிலரும் அஞ்சலி செலுத்தினர். நடிகை சுபாஷினி, இயக்குனர் பொன்ராம், நடிகர் வடிவேலு, இயக்குனரும், நடிகருமான இளவரசு உள்ளிட்டோர் பலர் அஞ்சலி செலுத்தினர்.

நடிகை சுஹாசினி
தேனியில் பாரதிராஜா உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் நடிகை சுஹாசினி. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‛‛சில வருடங்களுக்கு முன்பு வாழ்நாள் சாதனை விருது பெற்ற போது அவருடன் சேர்ந்து பேச வாய்ப்பு கிடைத்தது. தமிழ் சினிமாவில் எதார்தத்தை கொண்டு வந்தது பாரதிராஜா, இனி அவர் இல்லாமல் எதார்தம் இருக்காது. தமிழ் சினிமாவின் நிறத்தையும், குணத்தையும் மாற்றியது அவர் தான். என்னை தெலுங்கு சினிமாவில் அறிமுகப்படுத்தியதும் அவர் தான். அவரோட 3 படங்களில் நடித்துள்ளேன், அவருடன் உதவி இயக்குநராக பணியாற்றி இருக்கிறேன்.

எங்க அப்பா, என் மீது கொண்ட பாசத்தை காட்டிலும் என் கணவர் (மணிரத்னம்) மீது அதிக பாசம் கொண்டவர். அவர் இறந்தது வருதமா இருக்கு, அவர் தமிழ் சினிமாவிற்கு கொடுத்தது பெருமையா இருக்கு. எங்க குடும்பத்தில் ஒருத்தர், அவரது மனைவிக்கும், அவரது மருமகளுக்கும், மகளுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன்.

இயக்குனர் பொன்ராம்
திரைப்பட இயக்குனர் பொன்ராம் இன்று தேனியில் பாரதிராஜாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‛‛பாரதிராஜாவின் இழப்பு மிகப்பெரியது. அவரின் படங்கள் எங்களுக்கு புத்தகங்கள் போன்று வழிகாட்டியாக இருந்தது. இந்த நாள் மறக்க முடியாத தவிர்க்க வேண்டிய நாள், அவர் உயிரிழந்ததை ஏற்றுக் கொள்ள முடியவில்லை .எப்படி படம் எடுக்க வேண்டும் என்று அவரின் மூலமாக தெரிந்து கொண்டோம். அவரது குடும்பத்திற்கு எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !