மாமா செல்வராகவனுடன் நடித்த அனுபவம் : மருமகன் பவிஷ் சொன்ன தகவல்
நடிகர் தனுஷ், இயக்குனர் செல்வராகவனின் சகோதரி மகன் பவிஷ், தனுஷ் இயக்கிய நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆனார். இப்போது லவ் ஓ லவ் படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். பிரபல குச்சிப்புடி டான்சர், தெலுங்கானா யூடியூப் பிரபலம் நாகாதுர்கா ஹீரோயின். மகேஷ் ராஜேந்திரன் இயக்கியுள்ளார்.
இதில் பவிஷ் மாமாவான இயக்குனர் செல்வராகவன் போலீஸ் ஆக நடித்துள்ளார். வனிதா விஜயகுமாருக்கும் முக்கியமான வேடம். கே.எஸ்.ரவிக்குமார் அப்பாவாக வருகிறார்.
டீசர் வெளியீட்டு விழாவில் பவிஷ் பேசுகையில், ''ஒரு நாள் படப்பிடிப்புதளமே அமைதியாக இருந்துது. என்னாச்சு என்று கேட்டேன். செல்வராகவன் சார் நடிக்க வருகிறார் என்றார்கள். வீட்டில் மாமாவை அப்படி பார்த்தது இல்லை. நான் பயந்ததும் இல்லை. அவர் அன்பாக பேசுவார். ஆனால், படப்பிடிப்பு தளத்தில் போலீசாக வேறுமாதிரி நடித்தார். நான் மிரண்டுவிட்டேன். எப்போதும் என் குரு தனுஷ் தான். அவர் தான் என்னை சினிமாவில் அறிமுகப்படுத்தினார் அவரை மறக்கவே மாட்டேன்' என்றார்.
விழாவில் பேசிய இயக்குனர் கே..எஸ்.ரவிக்குமார், ''இப்போது பல படங்களில் நடிக்கிறேன். நிறைய படத்தில் அப்பாவாக வருகிறேன். நடிப்பு சிலசமயம் போராடிக்கிறது. நான் வேலை முடிந்தவுடன் அமைதியாக இருக்க வேண்டியதுதான். ஆனால், படத்தை இயக்கும்போதும் சுறுசுறுப்பாக இருப்பேன். நம் மண்டைக்குள் அடுத்து என்ன என ஆயிரம் யோசனை வரும். அது பிடித்து இருக்கிறது. கடந்த சில மாதங்களில் ஆர்.பி.சவுத்ரி, பாரதிராஜா, கே.ராஜனை தமிழ் சினிமா இழந்துவிட்டது. இப்போது இரவு நேரத்தில் அதிக படப்பிடிப்பு நடத்துகிறார்கள். அப்படியொரு படப்பிடிப்பில் இருந்ததால் பாரதிராஜா உடலுக்கு அஞ்சலி செலுத்த முடியவில்லை. மறுநாள் செல்லலாம் என நினைத்தேன். அதற்குள் அவர் உடலை தேனிக்கு கொண்டு சென்றுவிட்டார்கள்'' என்றார்.