பிரித்விராஜின் 'தாய்ரா' ஹிந்தி படம் செப்டம்பர் 18ல் ரிலீஸ்!
தற்போது ராஜமவுலி இயக்கி வரும் 'வாரணாசி' படத்தில் மகேஷ்பாபு, பிரியங்கா சோப்ராவுடன் இணைந்து கும்பா என்ற ஒரு வில்லன் வேடத்தில் நடித்து வருகிறார் மலையாள நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன். தற்போது விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வரும் இந்த படம் 2027ம் ஆண்டு ஏப்ரல் ஏழாம் தேதி திரைக்கு வருகிறது. இதற்கு முன்னதாக, ஹிந்தியில் பிரித்விராஜ் நாயகனாக நடித்து முடித்துள்ள படம் 'தாய்ரா'. இப்படத்தில் அவருடன் கரீனா கபூர் கான் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
கிரைம் திரில்லர் கதையில் உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு பல மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இப்படத்தில் பிரித்விராஜ் தனக்கான காட்சிகளில் நடித்து முடித்திருக்கிறார். இதையடுத்து படக்குழு இந்த படம் வருகிற செப்டம்பர் 18ம் தேதி திரைக்கு வருவதாக ஒரு பிடிஎஸ் வீடியோ மூலம் தெரிவித்துள்ளது. இந்தப் படத்தை ஹிந்தியில் வெளியான தல்வார் மற்றும் ராஸி ஆகிய படங்களை இயக்கிய மேக்னா குல்ஜார் இயக்கி உள்ளார்.