பிளாஷ்பேக் : ஸ்ரீதரின் மனதை நோகடித்த தணிக்கை குழு
தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத ஆளுமை இயக்குனர் ஸ்ரீதர். தூய தமிழ் பேசிக் கொண்டிருந்த சினிமாவை யதார்த்த தமிழுக்கு கொண்டு வந்தவர். வசனம் வழியாக கதை சொன்ன சினிமாவில் காட்சி வழியாக கதை சொன்னவர். அவர் இயக்கியதில் 90 சதவிகித படங்கள் வெற்றி பெற்றன. அப்படிப்பட்ட ஸ்ரீதரையே தணிக்கை குழு படாதபாடு படுத்தியிருக்கிறது.
ஸ்ரீதர் இயக்கிய படங்களில் முக்கியமானது 'மீண்ட சொர்க்கம்'. முக்கோணக் காதல் கதையான இதனை தோளில் சுமந்த கதாபாத்திரம் என்றால் அது பத்மினியுடையதுதான். அந்த அளவுக்கு அவருக்காகவே வடிவமைக்கப்பட்ட பெண் மையப் படமாக அது அமைந்தது. ஜெமினி கணேசன், தங்கவேலு, டி.ஆர்.ராமச்சந்திரன், என்.லலிதா, மனோரமா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இந்தப் படத்தின் கதைப்படி, காதல் தோல்வி தந்த ஏமாற்றத்தில், நாட்டியம் ஆடுவதையே நிறுத்திவிடப்போவதாக முடிவெடுக்கிறார் பத்மினி. கடைசியாக ஒரு முறை ஆடலரசன் நடராஜப் பெருமான் சிலைமுன்பு வெறிபிடித்தவரைப் போன்று நாட்டியமாடுவார். 'ஆடும் அருட்பெருஞ்சோதி' என்ற இந்த பாடல் காட்சியில் தனது நடனத் திறமை அனைத்தையும் கொட்டியிருந்தார் பத்மினி.
பத்மினியின் ஆட்டத்தை கண்டு நடராஜர் கண்ணீர் சிந்துவதுபோல் சிம்பாலிக்காக ஒரு காட்சியை எடுத்திருந்தார் ஸ்ரீதர். அதாவது பத்மினி அதிவேகமாகச் சுழன்று ஆடும்போது அவரது கால் சலங்கையில் இருந்து ஒரு மணி தெறித்துச் சென்று, நடராஜர் சிலை அருகே தொங்கிக் கொண்டிருக்கும் சர விளக்கின்மேல் படுகிறது. அது பட்ட வேகத்தில் விளக்கு அசைந்தாடும்போது அதிலிருந்து விசிறியடிக்கப்படும் எண்ணெய் சொட்டுகளில் ஒன்று, நடராஜர் சிலையின் கண்களில் விழுந்து வழிய, பத்மினிக்காகப் பரதக் கடவுள் கண்ணீர் வடிப்பது போன்ற காட்சியை படமாக்கினார். நடராஜர் கண்ணீர் சிந்த வேண்டும், அது லாஜிக்காகவும் இருக்க வேண்டும் என்கிற ரீதியில் இந்த காட்சியை கம்போஸ் செய்திருந்தார்.
படம் முடிந்து தணிக்கைக் குழுவுக்கு அனுப்பப்பட்டது. படத்தைப் பார்த்த சென்சார் அதிகாரிகள், நடராஜரின் சிலை சிம்பாலிக்காகக் கண்ணீர் வடிப்பதுபோன்ற காட்சியை அனுமதிக்க முடியாது என்று திட்டவட்டமாகக் மறுத்துவிட்டனர். 'மனிதக் காலில் இருந்து புறப்பட்டுச் செல்லும் மணியால் தெய்வத்தின் கண்களில் இருந்து கண்ணீர் வழிவது போன்ற சித்தரிப்பு, தெய்வநிந்தனை' என்று அதற்கு காரணம் சொல்லப்பட்டது.
அந்த காட்சி நீக்கப்பட்டே படம் வெளியானது. இது ஸ்ரீதரின் மனதில் ஆறாத காயத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து பின்னாளில் பேசிய ஸ்ரீதர். 'அந்த பாடல் காட்சியின்போது ரசிகர்கள் அழுதார்கள். அது அந்த இறைவனின் அழுகை' என்று எடுத்துக் கொண்டேன் என்று கூறியிருந்தார்.