திரையுலகின் பன்முக வித்தகர், ‛திரைக்கதை மன்னன்' கே பாக்யராஜ் ஒரு பார்வை
திரைக்கதை மன்னன் என்று என்று பெயர் எடுத்த இயக்குனர் கே.பாக்யராஜ் மாரடைப்பால் திடீரென காலமானார். அவரது மறைவு திரையுலகினர், ரசிகர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இயக்குனர், நடிகர், இசையமைப்பாளர், வசனக்கர்த்தா, திரைக்கதை மன்னன் என திரையுலகில் அவர் கடந்து வந்த பாதையை சற்றே திரும்பி பார்ப்போம்.
1953ம் ஆண்டு ஜனவரி 7ம் தேதி ஈரோடு மாவட்டத்தில் பிறந்தவர் பாக்யராஜ். இவரது தந்தை பெயர் கிருஷ்ணசாமி நாயுடு. தாயார் அமராவதி அம்மாள். சிறு வயதிலிருந்தே சினிமா மீது கொண்ட தீரா காதல் கே பாக்யராஜை தன் சொந்த ஊரை விட்டு சென்னைக்கு இழுத்து வந்தது. பியூசி படிப்பு வரை எட்டிய கே பாக்யராஜ், இயக்குநர் ஜி ராமகிருஷ்ணனிடம் உதவி இயக்குநராக தனது முதல் திரைப்படப்பணியை ஆரம்பித்தார்.
குருநாதர் பாரதிராஜா
அதன்பின் 1977ல் தனது குருநாதரான பாரதிராஜாவின் முதல் படைப்பான 16 வயதினிலே திரைப்படத்தில் உதவியாளராகவும் ஒரு சிறு வேடமும் நடித்தார். பாரதிராஜாவின் அடுத்த படைப்பான கிழக்கே போகும் ரயில் திரைப்படத்தில் உதவி இயக்குநர் அந்தஸ்தையும் ஒரு சிறு கதாபாத்திரமும் ஏற்றும் நடித்திருந்தார். தொடர்ந்து சிகப்பு ரோஜாக்கள் படத்திலும் இவருக்கு ஒரு சிறு வேடம் தந்த பாரதிராஜா அந்த படத்தின் வசனங்களையும்
இவரை வைத்தே எழுத வைத்திருந்தார். படம் மிகப்பெரிய வெற்றி.
ஹீரோ, இயக்குனர் அவதாரம்
தனது அடுத்த படமான புதிய வார்ப்புகள் திரைப்படத்தில் பாக்யராஜை ஹீரோவாக்கி அழகு பார்த்த பாரதிராஜா படத்தின் வசனங்களையும் அவரையே எழுத வைத்தார். இப்படி அடுத்தடுத்த முன்னேற்றங்களின் தொடர்ச்சிதான் இவர் இயக்குநர் அவதாரம் எடுத்த சுவரில்லாத சித்திரங்கள். இதுவே இவர் இயக்கிய முதல் திரைப்படம். இதில் கதாநாயகனாக நடிகர் சுதாகரை நடிக்க வைத்து, இவர் குணசித்திர வேடமேற்று நடித்தார். அதன் பின் இவர் கதாநாயகனாவும், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் மற்றும் தயாரிப்பு என்று அனைத்தையும் ஏற்று வெளிவந்த திரைப்படம் ஒரு கை ஓசை. இதில் வாய் பேச முடியாத ஒரு கதாபாத்திரத்தில் அருமையாக தன் நடிப்பை வெளிப்படுத்தினார். ஆனால் படம் பெரிய அளவில் பேசப்படவில்லை.
திருப்புமுனை தந்த மெளன கீதங்கள்
இயக்குனராக பாக்யராஜிற்கு திருப்புமுனை தந்த படம் மௌன கீதங்கள். இத்திரைப்படத்திற்கு பிறகு இவர் இயக்கிய அத்தனை படங்களும் இவரின் பெயர் சொல்லும் படங்களாகவும் இவருக்கென்று ஒரு தனி முத்திரையை தந்த படங்களாகவும் அமைந்ததோடு மட்டுமின்றி அனைத்தும் வெற்றிப் படங்களாகவும் அமைந்தது. ராஜேஷ் ஹீரோவாக நடித்த 'கன்னிப்பருவத்திலே' படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதி அப்படத்தில் வில்லன் வேடத்திலும் நடித்தார்.
முந்தானை முடிச்சு
ஏசி திருலோகசந்தர், எஸ் பி முத்துராமன் என்று சில ஆஸ்தான இயக்குநர்களையே வைத்து படம் எடுத்துக் கொண்டிருந்த ஏவிஎம் நிறுவனம் முதல் முறையாக கே பாக்யராஜை வைத்து தயாரித்த திரைப்படம் தான் முந்தானை முடிச்சு மிகப் பெரிய வெற்றியை ஈட்டித் தந்த திரைப்படம். இந்த படம் தந்த வெற்றியால் ஒரு விழா நிகழ்ச்சியில் கே பாக்யராஜை தனது கலை வாரிசாக எம்ஜிஆர் அறிவித்தது அன்றைய காலகட்டங்களில் பரபரப்பாக பேசப்பட்ட ஒன்றாகும்.
இரு ஜாம்பவான்களை இயக்கிய பெருமை
நடிகராகவும், இயக்குநராகவும், கதாசிரியராகவும் ஏறக்குறைய 60க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் மக்களை மகிழ்வித்த ஒரு மாபெரும் கலைஞன் பாக்யராஜ். சில படங்களுக்கு இசையும் அமைத்திருக்கிறார் என்பது இவருக்கு கிடைத்த கூடுதல் அங்கீகாரம். நடிகர் திலகம் சிவாஜியையும், தனது குருவான பாரதிராஜாவையும் தனது கதை திரைக்கதை வசனம் இயக்கத்தில் நடிக்க வைத்து தனது நீண்ட நாள் ஆசையையும் தாவணிக் கனவுகள் திரைப்படம் மூலம் தீர்த்துக் கொண்டார்.
இயக்கிய முக்கிய படங்கள்
சுவரில்லாத சித்திரங்கள், ஒரு கை ஓசை, மௌன கீதங்கள், இன்று போய் நாளை வா, அந்த 7 நாட்கள், தூறல் நின்னு போச்சு, பொய் சாட்சி, டார்லிங் டார்லிங் டார்லிங், முந்தானை முடிச்சு, தாவணிக் கனவுகள், சின்ன வீடு, எங்க சின்ன ராசா, ஆராரோ ஆரிரரோ, பவுனு பவுனுதான், ராசுக்குட்டி, அம்மா வந்தாச்சு, சுந்தர காண்டம், வீட்ல விஷேசங்க, சொக்கத்தங்கம். பாக்யராஜ் தான் இயக்கிய அனேக படங்களில் அவரே ஹீரோவாகவும் நடித்தார்.
இசையமைப்பாளர்
‛இது நம்ம ஆளு' படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் அவதாரம் எடுத்த இவர் அதைத் தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்தார்.
பிறமொழி
ஒரு கைதியின் டைரி திரைப்படத்தின் ஹிந்தி பதிப்பில் அமிதாப் பச்சன் கதானாயகனாக நடிக்க அப்படத்தை இயக்குகின்ற பொறுப்பை பாக்யராஜ் ஏற்றார். ஆக்ரி ராஸ்தா என்ற பெயரில் வெளியான அந்தப் படம்தான் பாக்யாராஜ் இயக்கிய முதல் ஹிந்திப் படம். பாக்யராஜின் எண்ணற்ற வெற்றிப் படங்கள் ஹிந்தி மொழியில் தயாரிக்கப் பட்டிருக்கின்றன. தெலுங்கு, கன்னடம், ஒரியா என்று பல மொழிகளில் இவரது கதைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
எழுத்தாளர்
எழுத்துலகிலும் முத்திரையைப் பதித்த இவர் இருபது ஆண்டுகளாக பாக்யா என்ற வார இதழின் ஆசிரியராக இருந்து வருகிறார். வாங்க சினிமாவைப் பற்றி பேசலாம் உள்ளிட்ட சில புத்தகங்களையும் எழுதி உள்ளார்.
விருதுகள்
புதிய வார்ப்புகள், தாய்க்குலமே தாய்க்குலமே ஆகிய படங்களுக்காக தமிழக அரசின் விருது பெற்ற இவர், 'ஒரு கை ஓசை' படத்தில் சிறந்த நடிப்பிற்காக தமிழக அரசின் விருதினைப் பெற்றார். 1983ல் சிறந்த நடிகருக்கான பிலிம் பேர் விருது முந்தானை முடிச்சு திரைப்படத்திற்காக வழங்கப்பட்டது.
குடும்பம்
பாக்யராஜ் உதவி இயக்குனராக இருந்த போது இவருக்கு உதவியவர் பிரவீணா என்ற நடிகை உடன் காதல் மலர 1981ல் அவரை திருமணம் செய்தார். 1983ல் மஞ்சள் காமாலை நோய் காரணமாக பிரவீணா மறைந்தார். இதையடுத்து இவரோடு டார்லிங் டார்லிங் திரைப்படத்தில் நாயகியாக நடித்த பூர்ணிமாவைமணந்தார். இவர்களுக்கு, சரண்யா என்ற மகளும் சாந்தனு என்ற மகனும் உள்ளனர். பாரிஜாதம் படத்தில் மகள் சரண்யாவை நாயகியாக அறிமுகம் செய்தார். அதன்பின் சரண்யா நடிக்கவில்லை. சக்கரக்கட்டி படத்தில் மகன் சாந்தனு கதாநாயகனாக அறிமுகமாகி தொடர்ந்து நடித்து வருகிறார்.
பயோடேட்டா
இயற்பெயர் : கே பாக்யராஜ்
பிறப்பு : 07-ஜனவரி-1953
இறப்பு : 27 ஜூன் 2026
பிறந்த இடம் : வெள்ளக்கோவில், ஈரோடு மாவட்டம்
துணைவியர் : பிரவீணா (இறப்பு) பூர்ணிமா பாக்யராஜ்
குழந்தைகள் : சரண்யா பாக்யராஜ், சாந்தனு பாக்யராஜ்
பெற்றோர் : கிருஷ்ணசாமி - அமராவதி அம்மாள்