உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கலையுலகின் போக்கை மாற்றிய ‛காவிய வித்தகர்' கே பாக்யராஜ்

கலையுலகின் போக்கை மாற்றிய ‛காவிய வித்தகர்' கே பாக்யராஜ்

சினிமாவில் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒவ்வொரு விதமான ஆளுமைகள் வந்தனர். அந்தவகையில் கலையுலகின் திரைக்கதையில் அழுத்தமான படைப்புகளை தந்து அதை வெகுஜன மக்களும் ரசிக்கும்படி செய்தவர் பாக்யராஜ். அவரின் திடீர் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது. அவரைப்பற்றிய சில சுவாரஸ்யங்களை பார்க்கலாம்.

ஹீரோ பிம்பத்தை உடைத்தவர்
வசீகரமான வீரத்துடன் கூடிய ஆக்ரோஷமான முகபாவனை கொண்டவர்களையே நாயகர்களாக பார்த்து பழக்கபட்டு வந்த நம் தமிழ் திரை ரசிகர்களின் ரசனையை மடை மாற்றம் செய்து, மூக்கு கண்ணாடி, அப்பாவித்தனமான முகபாவனை என்ற இந்த இரண்டையும் தனது தனித்துவமிக்க அடையாளமாக்கி, அதுவரை இருந்து வந்த கதாநாயகனுக்கான இலக்கணத்தை உடைத்து, ஒரு புது பரிமாணத்தைக் காட்டியவர்தான் பாக்யராஜ்.

கொடூர வில்லன் முகம்
இந்த ஏமாளி முகபாவனையில் எல்லோரது புருவமும் உயரும் வண்ணம் ஒரு கொடூர வில்லனாகவும் தன்னை அடையாளப்படுத்திக் காட்ட முடியும் என்று நிரூபித்து, இவர் தந்த கலை படைப்புகள்தான் பிவி பாலகுரு இயக்கத்தில் வெளிவந்த “கன்னிப் பருவத்திலே” திரைப்படமும், இவரே இயக்கியிருந்த “விடியும் வரை காத்திரு” என்ற திரைப்படமும்.

வசனங்களால் ஈர்த்தவர்
படத்தின் நாயகனுக்கு கிடைக்காத வரவேற்பு, இயக்குநருக்கு இல்லாத ஒரு வரவேற்பு, அந்தப் படத்தின் வசனகர்த்தாவான இவருக்கு பலமுறை கிடைத்திருக்கின்றன. இவரது வசனங்களுக்காகவே திரையரங்குகளில் ரசிகர்கள் விசில் அடித்து ஆரவாரம் செய்த நிகழ்வுகளும் உண்டு. குறிப்பாக பிற இயக்குனர்களின் திரைப்படங்களில் இடம் பெற்றிருக்கும் இவரது வசனங்களை அவ்வளவு எளிதில் யாரும் மறக்க இயலாது. இயக்குநர் பிவி பாலகுரு இயக்கத்தில் வெளிவந்த “கன்னிப் பருவத்திலே” திரைப்படத்தில் நடிகை வடிவுக்கரசியை மானபங்கம் செய்ய முயல்வது போன்ற ஒரு காட்சியில் பாக்யராஜ் தானே எழுதி, பேசி நடித்திருக்கும் காட்சியும், இவரது குருநாதரான சமீபத்தில் மறைந்த பாரதிராஜாவின் “ஒரு கைதியின் டைரி” திரைப்படத்தில் நடிகர் விஜயனை, நடிகர் கமல்ஹாசன் கொலை செய்யும் முன்பு அவரிடம் பரீட்சித் மகாராஜா கதையைச் சொல்லி பேசும் இவரது வசனமாகட்டும் இன்றும் தமிழ் திரை ரசிகர்களால் கொண்டாடி தீர்த்த வசனங்கள் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருப்பதற்கு வாய்ப்பே இல்லை.

ஹிந்தி நடிகர்கள் ஆர்வம்
தமிழ் திரையுலகம் மட்டுமின்றி, பாலிவுட் திரையுலகிலும் தனது தனித்துவமிக்க கலை வித்தையால் தமிழ் திரையுலகிற்கே பெருமை சேர்த்தவர் பாக்யராஜ். ஹிந்தி சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சன், அனில்கபூர் போன்ற முன்னணி நாயகர்கள் இவரது இயக்கத்தில் நடிக்க பெரும் ஆர்வம் காட்டி வந்தனர். “ஆக்ரி ராஸ்தா”, “பாப்பா தி கிரேட்”, “மிஸ்டர் பச்சாரா” என மூன்று திரைப்படங்களை ஹிந்தியில் இயக்கியிருக்கின்றார் கே பாக்யராஜ். மேலும் இவரது பல திரைக்கதைகளை சினிமாவாக எடுத்து, அவற்றில் நாயகனாக நடித்து ஒரு ஸ்டார் அந்தஸ்தைப் பெற்றவர்தான் நடிகர் அணில்கபூர்.

எழுத்தாளர் முகம்
வெகுஜன மக்களோடு சினிமா என்ற ஊடகத்தின் மூலமாக தனது எண்ணங்களை தனது வசனங்கள் வாயிலாக பரிமாறிக் கொண்டிருந்த பாக்யராஜ், இலக்கியம் சார்ந்த மக்களையும் ஓர் ஈர்ப்போடு தன்னுடன் பயணிக்க அவர் ஆரம்பித்த வார பத்திரிகைதான் “பாக்யா”. இவ்வாறு தனது வாழ்நாள் முழுதும் எழுத்துப் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட ஓர் அற்புதமான எழுத்தாளராகவும் பரிமளித்தவர்தான் கே பாக்யராஜ்.

அனாதை வசனமும்... கண்ணீரும்...
இவர் நாயகனாக அறிமுகமான “புதிய வார்ப்புகள்” திரைப்படத்தில் ஒரு காட்சியில் 'உங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகலையா' என ஒரு பெண் இவரிடம் கேட்பார். 'நான் அனாதைங்க எனக்கு அம்மா, அப்பா இல்லை' என வசனம் பேசுவார் பாக்யராஜ். இந்தக் காட்சி எடுப்பதற்கு 10 நாட்களுக்கு முன்புதான் பாக்யராஜின் அம்மா இறந்திருந்தார். பின்னர் இந்தப் படத்தைப் பார்க்கும் ஒவ்வொரு தருணமும், இந்தக் காட்சியின் போது பாக்யராஜின் கண்களில் கண்ணீர் கசியும் என அவரே கூறியிருக்கின்றார்.

எம்ஜிஆருக்கு பிடித்த படம்
மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் மீது அளவு கடந்த மரியாதையும், பாசமும் வைத்திருந்தவர்தான் கே பாக்யராஜ். இரண்டு ஆள் உயர குத்து விளக்குகளை பாக்யராஜின் திருமண பரிசாக வழங்கி, அவரது திருமண வரவேற்பிற்கு நேரில் சென்று வாழ்த்தியவர் எம்ஜிஆர். இன்றும் பாக்யராஜின் வீட்டுப் பூஜை அறையை அலங்கரித்திருப்பது எம்ஜிஆர் வழங்கிய குத்து விளக்குகள்தான். ஒரு விழாவில் பாக்யராஜ்தான் என் கலை வாரிசு என்று பகீரங்கமாக அறிவித்து எம்ஜிஆர் பேசியது அன்று அரசியலில் பெரும் அதிர்வலைகளை உண்டுபண்ணியது. எம்ஜிஆருக்கு பாக்யராஜின் திரைப்படங்களில் மிகவும் பிடித்த திரைப்படம் “தூரல் நின்னு போச்சு”.

ராஜ்கபூரை கவர்ந்த டார்லிங் டார்லிங்
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரும், ஹிந்தி திரைப்படத் தயாரிப்பாளருமான போனி கபூர், ஒரு முறை கே பாக்யராஜை ஹிந்தி திரையுலகின் பழம்பெரும் நடிகரும், ஜாம்பவானுமான ராஜ்கபூரிடம் அறிமுகம் செய்து வைக்க, உடனே உன்னை எனக்கு நன்றாகத் தெரியுமே! உன்னுடைய “டார்லிங் டார்லிங் டார்லிங்” படத்தைப் பார்த்திருக்கின்றேன். சூப்பர்! என அவர் கூறியதும் நெகிழ்ந்திருக்கின்றார் கே பாக்யராஜ்.

நிறைவேறாத ஆசை
நடிகர் சிவாஜியையும், தனது குருநாதர் பாரதிராஜாவையும் தனது இயக்கத்தில் நடிக்க வைத்துவிட வேண்டும் என்றிருந்த கே பாக்யராஜிற்கு தனது “தாவணிக் கனவுகள்” திரைப்படம் மூலம் அது நிறைவேறியிருந்தது போலவே, சினிமாவில் தனது நெருங்கிய நண்பரான நடிகர் ரஜினிகாந்தையும் தனது இயக்கத்தில் நடிக்க வைத்துவிட வேண்டும் என்ற ஆசையும் அவருக்கு இருந்தது.

கருமாரி அம்மன் மீது பக்தி
கடவுள் நம்பிக்கை உண்டு என்றாலும், கோவிலுக்குச் சென்று வழிபடும் வழக்கம் இல்லாதவரான கே பாக்யராஜ், அவரது ஒவ்வொரு திருமண நாளன்றும்
தவறாமல் கருமாரி அம்மன் கோவிலுக்குச் சென்று வழிபடும் வழக்கத்தை கொண்டிருந்தார்.

50 ஆண்டு சாதனை
திரையுலகில் 50 ஆண்டுகளை கடந்து சாதனை படைத்தவர்கள் வெகு சிலரே. அவர்களில் பாக்யராஜூம் ஒருவர். சமீபத்தில் இவரின் 50வது ஆண்டு திரையுலக பயணத்திற்காக விழா நடந்தது. இதில் ரஜினி, இளையராஜா, மோகன்பாபு உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் பங்கேற்று வாழ்த்தினர்.

அரசியல் பயணம்
சினிமாவை தாண்டி அரசியலிலும் கால் பதித்த பாக்யராஜ், ‛எம்.ஜி.ஆர் மக்கள் முன்னேற்றக் கழகம்' என்ற கட்சியை துவக்கினார். ஆனால் அரசியலில் அவரால் சோபிக்க முடியவில்லை. இதனால் கட்சியை கலைத்துவிட்டு அதிமுக.,வில் இணைந்தார். பின்னர் அந்த கட்சியிலும் கருத்து வேறுபாடு ஏற்பட திமுக.,வில் இணைந்தார்.

பாக்யராஜ் திரைப்பட பட்டியல்

1.16 வயதினிலே - துணை நடிகர்
2.கிழக்கே போகும் ரயில் - துணை நடிகர் - உதவி இயக்குநர்
3.சிகப்பு ரோஜாக்கள் - துணை நடிகர் - வசனம்
4.புதிய வார்ப்புகள் - கதாநாயகன் - வசனம்
5.கன்னிப் பருவத்திலே - துணை நடிகர் - வசனம்
6.சுவரில்லாத சித்திரங்கள் - துணை நடிகர் - கதை - திரைக்கதை - வசனம் - இயக்கம்
7.பாமா ருக்மணி - கதாநாயகன் - கதை - திரைக்கதை - வசனம்
8.ஒரு கை ஓசை - கதாநாயகன் - கதை - திரைக்கதை - வசனம் - இயக்கம் - தயாரிப்பு
9.குமரிப் பெண்ணின் உள்ளத்திலே - கதாநாயகன்
10.மௌன கீதங்கள் - கதாநாயகன் - கதை - திரைக்கதை - வசனம் - இயக்கம்
11.இன்று போய் நாளை வா - கதாநாயகன் - கதை - திரைக்கதை - வசனம் - இயக்கம்
12.விடியும் வரை காத்திரு - கதாநாயகன் - கதை - திரைக்கதை - வசனம் - இயக்கம்
13.அந்த 7 நாட்கள் - கதாநாயகன் - கதை - திரைக்கதை - வசனம் - இயக்கம்
14.தூறல் நின்னு போச்சு - கதாநாயகன் - கதை - திரைக்கதை - வசனம் - இயக்கம்
15.பொய் சாட்சி - கதாநாயகன் - கதை - திரைக்கதை - வசனம் - இயக்கம்
16.டார்லிங் டார்லிங் டார்லிங் - கதாநாயகன் - கதை - திரைக்கதை - வசனம் - இயக்கம்
17.முந்தானை முடிச்சு - கதாநாயகன் - கதை - திரைக்கதை - வசனம் - இயக்கம்
18.சாட்டை இல்லாத பம்பரம் - கதை
19.விதி - துணை நடிகர்
20.அன்புள்ள ரஜினிகாந்த் - துணை நடிகர்
21.தாவணிக் கனவுகள் - கதாநாயகன் - கதை - திரைக்கதை - வசனம் - இயக்கம் - தயாரிப்பு
22.ஒரு கைதியின் டைரி - கதை - வசனம்
23.நான் சிகப்பு மனிதன் - துணை நடிகர்
24.சின்ன வீடு - கதாநாயகன் - கதை - திரைக்கதை - வசனம் - இயக்கம்
25.கண்ணத் தொறக்கனும் சாமி - திரைக்கதை - வசனம்
26.எங்க சின்ன ராசா - கதாநாயகன் - கதை - திரைக்கதை - வசனம் - இயக்கம்
27.சின்னக்குயில் பாடுது - துணை நடிகர்
28.இது நம்ம ஆளு - கதாநாயகன் - கதை - திரைக்கதை - வசனம் - இசை
29.என் ரத்தத்தின் ரத்தமே - கதாநாயகன்
30.ஆராரோ ஆரிரரோ - கதாநாயகன் - கதை - திரைக்கதை - வசனம் - இயக்கம் - இசை - தயாரிப்பு
31.அவசர போலீஸ் 100 - கதாநாயகன் - கதை - திரைக்கதை - வசனம் - இயக்கம்
32.பவுனு பவுனுதான் - கதாநாயகன் - கதை - திரைக்கதை - வசனம் - இயக்கம் - இசை
33.ருத்ரா - கதாநாயகன்
34.ராசுக்குட்டி - கதாநாயகன் - கதை - திரைக்கதை - வசனம் - இயக்கம்
35.அம்மா வந்தாச்சு - கதாநாயகன்
36.சுந்தர காண்டம் - கதாநாயகன் - கதை - திரைக்கதை - வசனம் - இயக்கம் - தயாரிப்பு
37.வீட்ல விஷேசங்க - கதாநாயகன் - கதை - திரைக்கதை - வசனம் - இயக்கம்
38.தாய்க்குலமே தாய்க்குலமே - கதை
39.ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி - கதாநாயகன் - கதை - திரைக்கதை - வசனம் - இயக்கம்
40.ஞானப்பழம் - கதாநாயகன் - இசை
41.வேட்டிய மடிச்சு கட்டு - கதாநாயகன் - கதை - திரைக்கதை - வசனம் - இயக்கம் - தயாரிப்பு
42.கபடி கபடி - கதை - திரைக்கதை - வசனம்
43.12பி - வசனம்
44.சொக்கத்தங்கம் - கதை - திரைக்கதை - வசனம் - இயக்கம்
45.பாரிஜாதம் - துணை நடிகர் - கதை - திரைக்கதை - வசனம் - இயக்கம்
46.சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் - துணை நடிகர்
47.ரெண்டு - துணை நடிகர்
48.நினைத்தாலே இனிக்கும் - துணை நடிகர்
49.உத்தமபுத்திரன் - துணை நடிகர்
50.சித்து ப்ளஸ்2 - துணை நடிகர் - கதை - திரைக்கதை - வசனம் - இயக்கம் - தயாரிப்பு
51.வாகை சூடவா - துணை நடிகர்
52.நினைத்தது யாரோ - துணை நடிகர்
53.துணை முதல்வர் - கதாநாயகன் - கதை - திரைக்கதை - வசனம்
54.கணிதன் - துணை நடிகர்
55.வாய்மை - துணை நடிகர்
56.துப்பறிவாளன் - துணை நடிகர்
57.பொன்மகள் வந்தாள் - துணை நடிகர்
58. பிடி சார் - துணை நடிகர்

பிற மொழி திரைப்படங்கள்
1.ஏக் ஹி பூல் (ஹிந்தி) - கதை - திரைக்கதை
2.ராதா கல்யாணம் (தெலுங்கு) - கதை - திரைக்கதை
3.மூடு முல்லு (தெலுங்கு) - கதை - திரைக்கதை
4.வோ சாத் தின் (ஹிந்தி) - கதை - திரைக்கதை
5.மாஸ்டர்ஜீ (ஹிந்தி) - கதை - திரைக்கதை
6.ஆக்ரி ராஸ்தா (ஹிந்தி) - கதை - திரைக்கதை - இயக்கம்
7.சம்சாரட குட்டு (கன்னடம்) - கதை - திரைக்கதை
8.லவ் மாடி நோடு (கன்னடம்) - கதை - திரைக்கதை
9.சப்பல சென்னிங்கரயா (கன்னடம்) - கதை - திரைக்கதை
10.ஹல்லி மேஷ்ட்ரு (கன்னடம்) - கதை - திரைக்கதை
11.பேட்டா (ஹிந்தி) - கதை - திரைக்கதை
12.சுந்தரகாண்டா (தெலுங்கு) - கதை - திரைக்கதை
13.மனே தேவ்ரு (கன்னடம்) - கதை - திரைக்கதை
14.அன்னயா (கன்னடம்) - கதை - திரைக்கதை
15.கோபி கிஷன் (ஹிந்தி) - கதை - திரைக்கதை
16.ராஜா பாபு (ஹிந்தி) - கதை - திரைக்கதை
17.அந்தாஸ் (ஹிந்தி) - கதை - திரைக்கதை
18.மிஸ்டர் பேச்சரா (ஹிந்தி) - கதை - திரைக்கதை - இயக்கம்
19.ஜகத் கில்லாடி (கன்னடம்) - கதை - திரைக்கதை
20.படெல்லா (கன்னடம்) - கதை - திரைக்கதை
21.நானு நன்ன ஹெந்திரு (கன்னடம்) - கதை - திரைக்கதை
22.பா பா தி கிரேட் (ஹிந்தி) - கதை - திரைக்கதை - இயக்கம்
23.ரவி சாஸ்திரி (கன்னடம்) - கதை - திரைக்கதை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !