பிளாஷ்பேக் : சென்னையில் முதல் திறந்தவெளி திரையரங்கம்
திரைப்படங்கள் ஆரம்பத்தில் பொது இடத்தில் தற்காலிக திரைகட்டி இரவு நேரத்தில் திரையிடப்பட்டது. பின்னர் நாடகம் நடந்த அரங்கங்கள் டூரிங் டாக்கீசாக மாற்றப்பட்டு திரையிடப்பட்டது. அதன்பிறகு நிரந்தர காங்கீரீட் தியேட்டர்கள் உருவானது. இவற்றில் திறந்த வெளி திரையரங்கம் என்பது முதல் முதலாக கட்டப்பட்டது சென்னையில் உள்ள காங்கிரஸ் மைதானத்தில்.
அன்றைக்கு தயாரிப்பாளராகவும், டெக்னீஷியனாகவும் இருந்த என்.கிருஷ்ணாசாமி இதை செய்து காண்பித்தார். இந்தியாவில் நடந்த முதலாவது சர்வதேச திரைப்பட விழாவின் போது 1953ம் ஆண்டு இந்த திறந்தவெளி தியேட்டரில் 40 அடி நீளத்தில் சற்று வளைவான திரை பயன்படுத்தப்பட்டது. இதற்கு முன் சமமான வடிவம் கொண்ட சதுரவடிவ திரைகளே பயன்படுத்தப்பட்டது. மரத்தடுப்புகள் கொண்டு தியேட்டரின் எல்லை உருவானது.
இதன் திறப்பு விழாவில் அப்போதைய முதல்வர் காமராஜர், இத்தாலியைச் சேர்ந்த டெஸிக்கா, பிராங்க் ஒப்ரா ஆகிய பிரபல இயக்குநர்களும் கலந்து கொண்டனர்.
யூகிகி வாரிஸு (ஜப்பான்), பை சைக்கிள் தீவ்ஸ், கிரேட்டஸ்ட் ஷோ ஆன் எர்த், ஆன் தி சர்க்கஸ் அரெனா ஆகிய வெளிநாட்டுப் படங்களும், நாகிரெட்டியின் பாதாள பைரவி உள்ளிட்ட இந்தியப் படங்களும் திரையிடப்பட்டிருக்கின்றன.
இதற்கு பிறகு நிரந்தர காங்கிரீட் தியேட்டர்கள் நவீன முறையில் கட்டப்பட்டதால் இந்த தியேட்டர் கைவிடப்பட்டது. இந்த தியேட்டர் அமைந்த இடத்தில்தான் காமராஜர் அரங்கம் கட்டப்பட்டது.
எம்ஜிஆர் மதுரையில் உலகத் தமிழ் மாநாடு நடத்தியபோது அரசரடி மைதானத்தில் திறந்த வெளி திரையரங்கம் அமைத்தார் என்.கிருஷ்ணசாமி. தற்போதும் திறந்தவெளி தியேட்டர்கள் உள்ளன. அவை 'டிரைவ் இன்' தியேட்டர்கள் என்று அழைக்கப்படுகிறது.
என்.கிருஷ்ணசாமி சினிமா டெக்னீஷியன் சங்கத் தலைவராக பல ஆண்டுகள் இருந்தவர். நட்சத்திர கிரிக்கெட் போட்டிகளையும், சர்வதேச திரைப்பட விழாக்களையும் நடத்தியவர். 'படிக்காத மேதை' உள்ளிட்ட சில படங்களையும் தயாரித்தவர்.