நடிகர் திலகம் சிவாஜி 1956ம் ஆண்டு சிவாஜி புரொடக்ஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். ஆரம்பத்தில் சினிமா விநியோகத்தில் ஈடுபட்ட இந்த நிறுவனம் அதன் பிறகு படத் தயாரிப்பிலும் இறங்கியது. 'புதிய பார்வை, தெய்வ மகன், வியட்நாம் வீடு, தங்கபதக்கம், அண்ணன் ஒரு கோவில், திரிசூலம், சந்திப்பு, சந்திரமுகி, அசல்' உள்ளிட்ட பல படங்களை தயாரித்தது.
இந்த நிறுவனத்தின் லோகோ தனித்துவமானது. அது வெறும் லோகோ மட்டுமல்ல; நடிகர் திலகத்தின் கலை வாழ்க்கைக்கு அஸ்திவாரமாக அமைந்த அவரது தாயாரின் மீதான பக்தியையும், குடும்ப விழுமியங்களையும் பறைசாற்றும் ஒரு உணர்வுப்பூர்வமான அடையாளமாக இருந்தது. பல தலைமுறை ரசிகர்களுக்கு அது வெறும் தொடக்கக் காட்சி அல்ல, ஒரு கலாச்சார அடையாளம். சிவாஜி தன் தாயுடன் அமர்ந்து பூஜை செய்யும் காட்சி பார்க்கும் போதெல்லாம் ரசிகர்களை பரவசமடையவைத்தது.
இந்த லோகோ தற்போது பல படங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வண்ணப்படங்களில் இருந்து. 'சிவாஜி கணேசன் வழங்கும்' என்பதாக அந்த டைட்டில் லோகோவை மாற்றி இருக்கிறார்கள். ஒரு வேளை படத்தின் உரிமம் கைமாறி இருக்கலாம். புதிதாக வாங்கியவர்கள் அதை நீக்கி இருக்கலாம் என்கிறார்கள். புதிதாக யார் வாங்கியிருந்தாலும் படத்தின் உள்ளடக்கத்தில் அவர்கள் எந்த மாற்றமும் செய்ய முடியாது என்பதே விதிமுறை. இந்த லோகா நீக்கத்தால் சிவாஜி ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.