உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: வங்காள மொழி திரைக்கலைஞரை வளமான தமிழ் திரையுலகிற்கு வரவழைத்த இருவர்

பிளாஷ்பேக்: வங்காள மொழி திரைக்கலைஞரை வளமான தமிழ் திரையுலகிற்கு வரவழைத்த இருவர்


தமிழ் திரையுலகிலிருந்து சோவியத் யூனியனுக்குச் சென்ற முதல் திரைக்கலைஞர்கள் என்றால் அது மறைந்த நடிகர் என் எஸ் கிருஷ்ணனும், இயக்குநர் கே சுப்ரமணியமும் ஆவர். ரஷ்ய - இந்திய கலாச்சார பரிவர்த்தனையின் அடிப்படையில் 1951ம் ஆண்டு சோவியத் யூனியன் சென்ற இவர்கள், அப்போது ரஷ்யாவில் பெரும் பரபரப்பாக ஓடிக் கொண்டிருந்த ஒரு இந்தியத் திரைப்படத்தைப் பார்க்கும் ஓர் நல்வாய்ப்பு கிடைக்கப் பெற்றனர். அது ஒரு வங்காள மொழி திரைப்படம். திரைப்படத்தின் பெயர் “சின்னமூல்”. 'பிடுங்கி எறியப்பட்டவர்கள்' என்ற பொருள் தரக் கூடிய இத்திரைப்படத்தை இயக்கியவரின் பெயர் நிமாய் கோஷ்.

இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் தனி நாடாக பிரிக்கப்பட்ட பின்னர், வங்க மண்ணில் ஏற்பட்ட பிளவின் காரணமாக மக்கள் அங்கே அகதிகளாக்கப்பட, அவர்களின் நிலை, வலி ஆகியவற்றை உணர்த்தும் ஒரு யதார்த்தவாத சினிமாவாக உருவாக்கப்பட்டதுதான் இந்த “சின்னமூல்”. ஒளிப்பதிவுத் துறையில் நன்கு தேர்ச்சி பெற்றிருந்த வங்காள இளைஞரான நிமாய் கோஷ் 1948ம் ஆண்டு இயக்கி, தயாரித்த இத்திரைப்படம் சோவியத் யூனியன் சென்றதே ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு.

உலக சினிமாவின் மிகச் சிறந்த இயக்குனர்களில் ஒருவரான ரஷ்ய இயக்குநர் புடாவ்கின் இயக்கிய திரைப்படங்களைப் பார்த்தும், திரைக்கலை குறித்த அவரது கட்டுரைகளை படித்தும் சினிமா துறைக்கு வந்தவர்தான் நிமாய் கோஷ். கலை வடிவம் பெறுவதற்கு முக்கிய காரணமே மக்கள்தான். எனவே கலைஞர்கள் மக்களைத்தான் நாடிச் செல்ல வேண்டும். அவர்களே நமக்கு கற்றுத் தந்து, ஒரு உண்மையான கலை பிறக்க வழிவகை செய்வர் என்ற சோவியத் இயக்குநர் புடாவ்கின் கருத்துக்களை மனதில் சுமந்து, வங்க அகதிகளிடம் தனது கேமராவைத் தூக்கிக் கொண்டு படம் பிடிக்கச் சென்றார் நிமாய் கோஷ்.

1950ம் ஆண்டு சோவியத் திரைப்படக் கலைஞர்கள் குழு இந்தியாவிற்கு வருகை தந்திருந்தபோது அதன் தலைவராக வந்திருந்தவர் இயக்குநர் புடாவ்கின். அப்போது இந்தியத் திரைப்படங்களைப் பார்த்த இயக்குநர் புடாவ்கின், இந்தியத் திரைப்படங்கள் ஹாலிவுட்டையும், லண்டனையும் பிரதிபலிப்பது போலத்தான் இருக்கின்றன. நிஜமான இந்தியப் படங்கள் ஒன்றும் இல்லையே என்று அவர் கூறியதைக் கேட்ட ஒருவர், நிமாய் கோஷ் இயக்கியிருந்த “சின்னமூல்” திரைப்படத்தைப் பற்றிக் கூறி, அதை பார்க்க ஏற்பாடும் செய்ய, படத்தைப் பார்த்த சோவியத் இயக்குநர் புடாவ்கின் நிமாய் கோஷை ஆரத் தழுவி, முதல் முறையாக ஒரு இந்தியப் படத்தைப் பார்க்கிறேன் என்று மனதார பாராட்டினார்.

இயக்குநர் புடாவ்கின் ஏற்பாட்டின் பேரில் “சின்னமூல்” என்ற அந்த வங்காள மொழி திரைப்படம், சோவியத் யூனியனில் திரையிடப்பட்டது. நிமாய் கோஷூம் சோவியத் யூனியனுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அப்போது அங்கே சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த தமிழ் திரைப்பட இயக்குநர் கே சுப்ரமணியமும், நடிகர் என் எஸ் கிருஷ்ணனும் “சின்னமூல்” திரைப்படத்தைப் பார்த்து, அவர்களும் நிமாய் கோஷை பாராட்டியதோடு, ''சென்னைக்கு வாருங்கள். தென்னிந்திய திரைப்படத்துறை கன்னி நிலம். பயிர் செய்ய பக்குவமான மண்; வாருங்கள்'' என்று நடிகர் என் எஸ் கிருஷ்ணன் நிமாய் கோஷை வரவேற்றார்.

அதன் பயனாக, “இன்ஸ்பெக்டர்”, “பொன்வயல்”, “ரத்தபாசம்”, “கோமதியின் காதலன்”, “மாமன் மகள்”, “அவன் அமரன்”, “நாலு வேலி நிலம்”, “பனித்திரை”, “நீர்க்குமிழி”, “பூஜைக்கு வந்த மலர்”, “யாருக்காக அழுதான்”, “அனுபவி ராஜா அனுபவி”, “பத்தாம் பசலி”, “என்ன முதலாளி சௌக்கியமா” போன்ற திரைப்படங்களுக்கு ஒரு ஒளிப்பதிவாளராக தனது பங்களிப்பை சிறப்பாக செய்திருந்ததோடு, 1960ம் ஆண்டு இயக்குநர் கே விஜயன், எல் விஜயலட்சுமி நடித்திருந்த “பாதை தெரியுது பார்” என்ற திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்து, படத்தையும் இயக்கியிருந்தார் நிமாய் கோஷ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !