ஷாருக்கானின் 'கிங்' படத்தின் பட்ஜெட் ரூ. 450 கோடியாக உயர்ந்தது!
'ஜவான், பதான்' படங்களின் வெற்றிக்குப் பிறகு, சுமார் 3 ஆண்டுகள் கழித்து ஷாருக்கான் நடித்து வரும் படம் 'கிங்'. சித்தார்த் ஆனந்த் இயக்கும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 2025ம் ஆண்டு மே மாதம் தொடங்கப்பட்ட நிலையில், 2026 ஆகஸ்ட் மாதத்திற்குள் முழுமையாக நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 1 வருடம் 3 மாத காலத்தில், கிங் படக்குழுவினர் உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளில் சுமார் 150 நாட்களுக்கும் மேலாக, உலகின் மிகச்சிறந்த ஸ்டன்ட் கலைஞர்களை கொண்டு தீவிரமாக படப்பிடிப்பை நடத்தியுள்ளனர்.
இப்படத்தின் ஆக்ஷன் காட்சிகளுக்கு உலகத்தரம் வாய்ந்த விஎப்எக்ஸ் தொழில்நுட்பம் தேவைப்படுவதால், அந்தப் பணிகளை ஷாருக்கானின் சொந்த நிறுவனமான ரெட் சில்லீஸ் என்டர்டெய்ன்மென்ட் மேற்கொண்டு வருகிறது. இப்படம் 2026 டிசம்பர் 26ல் வெளியாக உள்ள நிலையில், ஷாருக்கானின் திரைப்பயணத்திலேயே மிக அதிக செலவில் கிங் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாலிவுட் வட்டாரங்களில் வெளியாகியுள்ள செய்தியில்,
''கிங் படம் ஆரம்பத்தில் ஒரு ஆக்ஷன் திரில்லராகத் தான் தொடங்கப்பட்டது. ஆனால் ஷாருக்கான் மற்றும் இயக்குநர் சித்தார்த்தின் பெரிய லட்சியத்தால், இது இந்திய சினிமா இதுவரை கண்டிராத பிரம்மாண்ட ஆக்ஷன் காட்சிகளைக் கொண்ட ஒரு மெகா பட்ஜெட் படமாக உருவாகியுள்ளது. மேலும், ஷாருக்கானின் சம்பளம் மற்றும் படத்தின் விளம்பரச் செலவுகள் சேர்க்கப்படாமல், கிங் படத்தின் தயாரிப்புச் செலவு மட்டுமே சுமார் ரூ. 450 கோடி என்கிறார்கள். இதற்கு முன்பு வெளியான ஷாருக்கானின் ஜவான் படம் சுமார் ரூ.400 கோடி பட்ஜெட்டிலும், பதான் படம் ரூ. 350 கோடி பட்ஜெட்டிலும் உருவானது. கிங் படத்தின் மூலம் இந்திய சினிமாவின் ஆக்ஷன் தரத்தை ஷாருக்கான் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவுள்ளார்.
இப்படத்தில் ஷாரூக்கானுடன் சுகானா கான், அபிஷேக் பச்சன், தீபிகா படுகோனே, அனில் கபூர், ஜாக்கி ஷராப் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். அனிருத், சச்சின் ஜிஹர் ஆகியோர் இசையமைக்கின்றனர்.