2026 அரையாண்டில் வசூலைக் குவித்த இந்தியப் படங்கள் : லாபத்தை விட நஷ்டம் அதிகம்
2026ம் ஆண்டின் அரையாண்டு கடந்து போய்விட்டது. வருடம் ஆரம்பமாகி மிக வேகமாகவே கடந்துவிட்டது. இந்த அரையாண்டில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என முக்கிய இந்திய மொழிகளில் சுமார் 700க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகி உள்ளன.
தமிழ் சினிமாவில் 120க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகி அதில் வெறும் 6 படங்கள் மட்டுமே வசூலைப் பெற்று லாபத்தைத் தந்தது. இந்திய சினிமாவில் 700க்கும் மேற்பட்ட படங்கள் வந்தாலும் அதிலும் மிகவும் குறைவான படங்கள்தான் வசூல் ரீதியாக வெற்றி பெற்றுள்ளன.
முதலிடத்தில் துரந்தர் 2
ஆதித்யா தர் இயக்கத்தில் ரன்வீர் சிங் நாயகனாக நடித்து மார்ச் மாதம் வெளிவந்த 'துரந்தர் - தி ரிவெஞ்ச்' படம்தான் இதுவரையில் வெளிவந்த இந்தியப் படங்களில் அதிக வசூலைக் குவித்த படமாக முதலிடத்தில் இருக்கிறது. அப்படம் 1800 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. இந்த சாதனையை அடுத்த அரையாண்டில் வெளியாகும் வேறு எந்த படங்களாவது முறியடிக்குமா என்பது சந்தேகம்தான்.
இரண்டாவது இடத்தையும் மற்றொரு ஹிந்திப் படமே பிடித்துள்ளது. அனுராக் சிங் இயக்கத்தில் சன்னி தியோல், வருண் தவான் மற்றும் பலர் நடிப்பில் ஜனவரி மாதம் வெளிவந்த 'பார்டர் 2' படம் 450 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.
தென்னிந்திய அளவில் பெத்தி டாப்
புச்சிபாபு சனா இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் ஜுன் மாதம் வெளிவந்த 'பெத்தி' படம் 400 கோடிக்கும் அதிகமாக வசூலித்து, தென்னிந்திய வசூலில் முதலிடத்தைப் படம் என்று விளம்பரப்படுத்தினார்கள். ஆனால், இப்படம் வசூல் ரீதியாக ஒரு தோல்விப் படம், 400 கோடி வசூலித்திருக்குமா என்பதே சந்தேகம்தான் என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.
இந்திய அளவில் கருப்பு நம்பர் 2
ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் மே மாதம் வெளிவந்த 'கருப்பு' படம் 340 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. இப்படம் இந்திய அளவில் அதிக லாபத்தைக் கொடுத்த படங்களில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளதாகச் சொல்கிறார்கள். வசூல் ரீதியாக இரண்டாவது இடத்தில் இருக்கும் ஹிந்திப் படமான 'பார்டர் 2' படம் 450 கோடி வசூலித்திருந்தாலும், அப்படத்தின் பட்ஜெட் மட்டுமே 250 கோடியாம். சுமார் 100 கோடி செலவில் தயாரான 'கருப்பு' 340 கோடியை வசூலித்துள்ளதும், தமிழகத்தில் மட்டுமல்லாது மற்ற தென்னிந்திய மாநிலங்களிலும் லாபத்தைக் கொடுத்துள்ளது என்பதும் பாக்ஸ் ஆபீஸ் தகவல்.
அப்பா - மகன் மூலம் மட்டும் ரூ.700 கோடி வசூல்
அனில் ரவிப்புடி இயக்கத்தில் சிரஞ்சீவி நடித்து ஜனவரி மாதம் வெளிவந்த தெலுங்குப் படம் 'மனஷங்கர வர பிரசாத் காரு'. இப்படம் 300 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. அவ்வளவு வசூல் என்றாலும் படத்தின் பட்ஜெட் மட்டுமே 200 கோடி என்பதால் லாபம் மிகக் குறைவுதான். இருந்தாலும் தெலுங்குத் திரையுலகத்தைப் பொறுத்தவரையில் அப்பா சிரஞ்சீவி, மகன் ராம்சரண் ஆகிய இருவரது படங்கள் மூலம் மட்டுமே 700 கோடியை வசூலித்துள்ளார்கள்.
வெற்றி பாதைக்கு திரும்பிய அக் ஷய்
பிரியதர்ஷன் இயக்கத்தில், அக்ஷய்குமார் நடித்து ஏப்ரல் மாதம் வெளிவந்த ஹிந்திப் படம் 'பூத் பங்களா'. இப்படத்தின் வசூல் 250 கோடியை நெருங்கியுள்ளது. சுமார் 120 கோடி பட்ஜெட்டில் தயாரான இந்தப் படம் அக்ஷய்குமாருக்கு சில பல தொடர் தோல்விகளுக்குப் பிறகு இழந்த வெற்றியை மீட்டெடுத்துக் கொடுத்துள்ளது.
மலையாள படமும் சளைத்தது அல்ல
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் மே மாதம் வெளியான மலையாளத் திரைப்படம் 'திரிஷ்யம் 3'. இப்படத்திற்கான விமர்சனங்கள் இருவிதமாக வந்தாலும் குறிப்பிடத்தக்க வசூலைக் கொடுத்தது. 240 கோடிக்கும் அதிகமாக இப்படம் வசூலித்துள்ளது.
இதற்கடுத்து இடத்தையும் ஒரு மலையாளப் படம்தான் பெற்றுள்ளது. சவின் இயக்கத்தில் ஹஷிர், ஆலன் சிராஜ், அஜின் ஜாய், வினாயக் நடிப்பில் ஏப்ரல் மாதம் வெளிவந்த ‛வாழ 2' படம் 230 கோடியை வசூலித்துள்ளது. சுமார் 10 கோடி பட்ஜெட்டில் தயாரான இந்தப் படம் 20 மடங்கு கூடுதலாக வசூலித்துள்ளது. இப்படத்தின் வசூல் சதவீதம்தான் இந்திய அளவில் நம்பர் 1 இடத்தைப் பிடித்துள்ளது.
பிரபாஸிற்கு மீண்டுமொரு அடி
மாருதி இயக்கத்தில் பிரபாஸ் நடித்து ஜனவரி மாதம் வெளிவந்த தெலுங்குப் படம் 'ராஜா சாப்'. இப்படம் 200 கோடி வசூலைக் கடந்திருந்தாலும் படத்தின் பட்ஜெட் மட்டுமே 400 கோடிக்கும் அதிகம். அதிக பட்ஜெட், அதிக நஷ்டம் என்ற பட்டியலில் இந்தப் படத்திற்குத்தான் முதலிடம்.
அகமத் கான் இயக்கத்தில் அக்ஷய் குமார் நடிப்பில் ஜூன் மாதம் வெளிவந்த ஹிந்திப் படம் 'வெல்கம் டு தி ஜங்கிள்'. தொடர் தோல்விகளால் கடந்த சில வருடங்களாக தடுமாறி வந்த அக்ஷய் குமாருக்கு இந்த வருடம் அடுத்தடுத்து இரண்டு வெற்றிகள் கிடைத்துள்ளது. படம் வெளிவந்து ஒரு வாரம் மட்டுமே ஆகியுள்ள நிலையில் இப்படம் 175 கோடி வசூலைக் கடந்துள்ளது.
இந்திய அளவில் 25 படங்கள் வெற்றி
மேலே குறிப்பிட்டவை இந்திய அளவில் தொகை ரீதியாக அதிக வசூலைக் குவித்த படங்கள். அதே சமயம் 100 கோடி மற்றும் அதற்குக் குறைவான வசூலைப் பெற்று வெற்றி படங்களாக அனைத்து மொழிகளிலும் சில படங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு மொழியிலும் தலா நான்கைந்து படங்கள் அப்படிப்பட்ட வெற்றியைப் பெற்றுள்ளன. மொத்தமாகப் பார்த்தால் 20 முதல் 25 படங்கள் வரை வெற்றி பெற்ற படங்கள் என்று சொல்லலாம்.
எவ்வளவு லாபம், நஷ்டம்
2026 அரையாண்டில் வெளியான 700க்கும் மேற்பட்ட படங்கள் மூலம் சுமார் 6000 கோடி வசூல் கிடைத்திருக்கலாம் என்பது பாக்ஸ் ஆபீஸ் தகவல் மூலம் தெரிகிறது. அவற்றால் லாபம் என்பது 2000 கோடி இருந்தாலும், லாபமும் அல்ல நஷ்டமும் அல்ல என்கிற ரீதியில் உள்ள படங்கள் வசூல் 500 கோடி இருக்கலாம். நஷ்டம் என்பது சுமார் 3500 கோடி இருக்கலாம் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சினிமாவைப் பொறுத்தவரையில் தயாரிப்பாளர்களை விட நடிகர்கள்தான் அதிகம் பயனடைகிறார்கள் என்ற குரல் இந்த வருடத்தில் எழுந்துள்ளது. லாபத்தில் சதவீதப் பங்கு என்ற அடிப்படையில் முன்னணி நடிகர்கள் சம்பளம் வாங்கிக் கொள்ள வேண்டும் என அனைத்து மொழித் திரையுலகத்திலும் பேச ஆரம்பித்துவிட்டார்கள். அது வருங்காலத்தில் நடக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.