உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 4 மொழிகள், 60 ஆண்டுகள், 620 படங்கள் : வெண்ணிற ஆடை மூர்த்திக்கு 90வது பிறந்தநாள்

4 மொழிகள், 60 ஆண்டுகள், 620 படங்கள் : வெண்ணிற ஆடை மூர்த்திக்கு 90வது பிறந்தநாள்

தமிழ் சினிமாவில் மூத்த நடிகர் என வெண்ணிற ஆடை மூர்த்தியை அழைக்கலாம். இன்று அவர் தனது 90வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தியில் 620 படங்களில் நடித்திருக்கிறார். 60 ஆண்டுகளாக சினிமாவில் இருக்கிறார். இந்த சாதனையை மற்றவர்கள் வீழ்த்துவது கடினம்.

90வது பிறந்தநாளையொட்டி தன்னை தொடர்பு கொண்டவர்களிடம், ‛‛காட் பிளஸ் யூ, என்னை வாழ்த்தியதற்கு நன்றி. என் ரசிகர்களுக்கு நன்றி. என்னை வாழ வைத்த தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், சக நடிகர்கள், திரைக்கலைஞர்களுக்கு நன்றி'' என்றார்.

காதல் கல்யாணம்
சென்னையில் பாதி, அமெரிக்காவில் மீதி என சில ஆண்டுகளாக வசிக்கிறார் வெண்ணிற ஆடை மூர்த்தி. காரணம், அவரின் ஒரே மகன் அமெரிக்காவில் ஒரு பெரிய கம்பெனியில் உயர்ந்த பொறுப்பில் இருக்கிறார். அதனால், ஆண்டில் சில மாதங்கள் மகன், மருமகள், பேரனை பார்க்க அங்கே பறந்துவிடுவார். சென்னை கோட்டூர்புரத்தில் வசிக்கும் வெண்ணிற ஆடை மூர்த்தியின் மனைவியும் நடிகைதான். பல படங்களில் நடித்த அவர் பெயர் மணிமாலா. அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் நடித்து இருக்கிறார். சிந்து பைரவி படத்தில் சுகாசினி அம்மாவாக வருவார்.



ஆரம்பத்தில் இருவரும் இணைந்து பல படங்களில் நடித்து இருக்கிறார்கள். ஒருவரை ஒருவர் விரும்பி இருக்கிறார்கள். ஆனால், காதலை சொல்லவில்லை. மதுரையில் கிரிக்கெட் போட்டி நடந்தபோது பக்கத்து அறையில் தங்கியிருக்கிறார்கள். அப்போது பேசி காதல் வளர்க்க அது திருமணத்தில் முடிந்துள்ளது. இவர்களுக்கு மனோ என்ற ஒரே மகன். இப்போது மணிமாலா, வெண்ணிற ஆடை மூர்த்தி இருவருமே நடிக்கவில்லை. கடந்த 8 ஆண்டுகளுக்குமுன்பு இட்லி என்ற படத்தில் நடித்தார் வெண்ணிற ஆடை மூர்த்தி. பின்னர் நடிப்தை தவிர்த்துவிட்டு ஓய்வெடுத்து வருகிறார். சினிமா விழாக்களிலும் அதிகம் கலந்துகொள்வது இல்லை.

வக்கீல்
ஸ்ரீதர் இயக்கிய வெண்ணிற ஆடை படத்தில் அறிமுகம் ஆனதால் வெண்ணிற ஆடை அடைமொழி அவர் பெயருடன் ஒட்டிக்கொண்டது. 1965ல் வந்த அந்த படத்தில் தான் மறைந்த முதல்வர் ஜெயலலிதா, வெண்ணிற ஆடை நிர்மலா போன்றவர்களும் அறிமுகம் ஆனார்கள். அடிப்படையில் மூர்த்தி ஒரு வக்கீல். கடலுார் மாவட்டத்தை சேர்ந்தவர். அவரின் இயற்பெயர் கிருஷ்ணமூர்த்தி. சிதம்பரம் கே.ஆர். நடராஜ சாஸ்திரி, திருவாடுதுறை சிவகாமி ஆகியோரின் ஏழு குழந்தைகளில் இளையவர். தந்தை ஒரு குற்றவியல் வழக்கறிஞர். தனது தந்தையின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி சட்டம் பயின்றார், ஆனால் இறுதியில் ஒருபோதும் வழக்கறிஞராக ஆகவில்லை.



தனது பி.எல். படிப்பை முடித்த பிறகு, அவர் ரெமிங்டன் ராண்ட் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக வேலைக்கு சேர்ந்தார் . அதிகப்படியான சுற்றுப்பயணங்கள் இருந்ததால் மூர்த்தி அந்த வேலையை விட்டு விலகினார், மேலும் ஒரு புதிய வேலையைக் கண்டுபிடிப்பதில் சிரமப்பட்டார். சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள ஏ.எம்.ஜெய்ன் கல்லூரியில் ஆங்கிலத் துறையில் ஆசிரியராக சிறிது காலம் பணியாற்றினார். பின்னர், சினிமாவுக்கு வந்துவிட்டார்

ஜோதிடர்
ஆரம்பத்தில் ஒரு ஜோதிடர், நீங்க வக்கீலுக்கு படிப்பீங்க என, அந்த தொழிலை செய்யமாட்டீங்க என சொல்லியிருக்கிறார். நிஜத்திலும் அதுவே நடந்தது. அதனால், பிற்காலத்தில் வெண்ணிற ஆடை மூர்த்தி ஜோதிடம் படித்து, சிறந்த ஜோதிடராக மாறினார். நண்பர்கள், தெரிந்தவர்களுக்கு மட்டும் ஜோதிடம் பார்ப்பார். தவிர பத்திரிகையில் உதவி ஆசிரியர் ஆக பணியாற்றி இருக்கிறார். சி.வி.ராஜேந்திரன் இயக்கத்தில் கமல்ஹாசன் ஹீரோவாக அறிமுகமான 'மாலை சூடவா' படத்துக்கு இவர்தான் கதை, வசனம். வெண்ணிற ஆடை மூர்த்தி 'இந்து மதம் சில தேன் துளிகள்' என்ற நூலை எழுதி சிங்கப்பூரில் வெளியிட்டார். இதற்குக் காஞ்சி மகாபெரியவர் அணிந்துரை வழங்கியிருந்தார். இவை தவிர, ஜோக்ஸ் டைரி, 'சூப்பர் மார்க்கெட்', 'சிரிக்க சிந்திக்க சில வரிகள்', 'பழமொழியும் புதுமொழியும்', 'நமக்கு அல்வா கொடுத்தது யாரு', 'சும்மாவா சொன்னாங்க' உட்பட 8 நூல்களையும் எழுதி இருக்கிறார்.



கலைமாமணி', 'கலைவாணர் விருது' போன்ற பல விருதுகளைப் பெற்றிருக்கிறார். பிலிம் சர்ட்டிபிகேஷன் போர்டில் ஆலோசனை உறுப்பினராகவும், சிறிய பட்ஜெட் திரைப்படங்களுக்கு நிதி உதவி அளிக்கும் போர்டின் ஆலோசனைக் குழு உறுப்பினராகவும், பிலிம் அவார்ட் கமிட்டியின் மாநிலக் குழுவின் ஆலோசனை உறுப்பினராகவும் இருந்திருக்கிறார்.

டயலாக் டெலிவரி
வெண்ணிற ஆடை மூர்த்தியின் சிறப்பு அம்சமே அவரின் டபுள் மீனிங் டயலாக், அதை ஏற்ற இறக்கங்களுடன் சொல்லும் விதம், பாடிலாங்குவேஜ், டைமிங் காமெடி. கறுப்பு வெள்ளை சினிமாவில் ஆரம்பித்து, டிவி வரை நடித்து இருக்கிறார். இவருடன் நடிக்காத காமெடியன்களே இல்லை எனலாம். அதேபோல் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து இருக்கிறார். குறிப்பாக, ராம.நாராயணன், டி.ராஜேந்தர், அர்ஜூன் படங்களில் கண்டிப்பாக இருப்பார்.



ஆரம்பத்தில் அவர் காமெடியில் டபுள் மீனிங் கிடையாது. பிற்காலத்தில் அது சேர்ந்துவிட்டது. சில படங்களில் அது வொர்க் அவுட் ஆக, அதுவே அவர் பாணி ஆனது. வெண்ணிற ஆடை மூர்த்தி நிஜத்திலும் டைமிங் காமெடி அடிப்பதில் வல்லவர். அவர் இருந்தால் செட்டே கலகலப்பாகும். குறிப்பாக, வாத்தியார், போலீஸ்காரர், பாடகர், உதவியாளர் கேரக்டரில் பின்னி எடுப்பார்

நடிப்புக்கு முழுக்கு ஏன்
நீங்கள் ஏன் நடிப்பதை நிறுத்திவிட்டீர்கள் என கேட்க, அதற்கு வெண்ணிற ஆடை மூர்த்தி ஒரு பேட்டியில், ‛‛ஒருத்தங்களுடைய வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது உணவு, உடை, உறக்கம் தான். அதில் உறக்கம் என்பது நாமாக தேடிக்கொள்வது.. நம்முடைய உடம்பு தேடும் போது அதை எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் உணவும், உடையும் எப்போதுமே அவசியமாக இருக்கிறது. அதில் உடை (அதாவது வெண்ணிற ஆடை மூர்த்தி) என்னுடைய பெயரிலேயே அந்த ஆடை இருக்கிறது. அதுபோல உணவு இப்போது நான் கடைசியாக நடித்திருக்கும் இட்லி என்ற படத்தில் இருக்கிறது. இந்த படத்தோடு நான் என்னுடைய நடிப்பை முடித்துக் கொள்கிறேன். என்னுடைய பெயரில் இருக்கும் ஆடையும் நான் கடைசியாக உணவு தலைப்பில் உள்ள இட்லி படத்தில் நடித்திருக்கிறேன். இதுவே எனக்கு போதும் என்று சொல்லியிருக்கிறார்.



மேலும் அவர் பல பேட்டிகளில் ஒரு மனிதனுக்கு பணம் என்பது மிக முக்கியமானது. அது போதுமான அளவுக்கு இருந்தால் நம்மிடம் இருக்கும் 70 சதவீத பிரச்னைகள் காணாமல் போகும். மீதியை குறைத்துக்கொள்ளலாம். ஆகவே, பணத்தை சேர்க்க உழையுங்கள். அதை சேமித்து வையுங்கள் என்று சொல்லியிருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !