சர்ச்சை, எதிர்ப்புகளை சந்தித்த பயோபிக் படங்கள்
திரைப்படங்கள் என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்லாமல், பல நேரங்களில் சமூகத்தில் விவாதங்களையும் புயலையும் கிளப்பும் ஆயுதமாகவும் மாறுகின்றன. குறிப்பாக, உண்மையான மனிதர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படங்கள் (Biopic Movies) வெளியாகும் போதோ அல்லது தயாரிப்பிலோ பெரும் சர்ச்சைகளையும், எதிர்ப்புகளையும் சந்திப்பது வழக்கமான ஒன்று தான். அவ்வாறு தமிழ் மற்றும் இந்திய அளவில் பெரும் புயலைக் கிளப்பிய சில முக்கியமான பயோபிக் படங்கள் இதோ...
தி டர்ட்டி பிக்சர் (The Dirty Picture - 2011)
மறைந்த பிரபல கிளாமர் நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம் இது. சில்க் ஸ்மிதாவின் குடும்பத்தினர் இந்தப்படத்திற்குப் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவருடைய அனுமதியோ அல்லது குடும்பத்தினரின் அனுமதியோ இன்றி, அவரது வாழ்க்கையைத் தவறான கோணத்தில் சித்தரிப்பதாகக் கூறி நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. படத்தின் கிளாமர் காட்சிகள் மற்றும் விளம்பரப் படங்கள் பல அமைப்புகளால் எதிர்க்கப்பட்டன.
800 (2023)
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை பற்றிய படம் இது. ஆரம்பத்தில் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தமானார். இலங்கை உள்நாட்டுப் போரின் போது தமிழ் மக்களுக்கு எதிராக முரளிதரன் கருத்து தெரிவித்தார் என்று கூறி, தமிழ்நாட்டில் கொந்தளிப்பு ஏற்பட்டது. சமூக வலைதளங்களில் #ShameOnVijaySethupathi போன்ற ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டாயின. அரசியல் தலைவர்கள் மற்றும் தமிழ் அமைப்புகளின் தீவிர எதிர்ப்பால், விஜய் சேதுபதி இந்தத் திரைப்படத்திலிருந்து விலகினார். பின்னர் மதுர் மிட்டல் நடிப்பில் படம் வெளியானது.
தலைவி (Thalaivii - 2021)
தமிழக முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் வாழ்க்கையை பற்றிய படம் ‛தலைவி'. ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, குடும்பத்தினரின் அனுமதி பெறாமல் இப்படத்தை எடுக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். படத்தில் அஇஅதிமுக மற்றும் எம்.ஜி.ஆர் தொடர்பான சில அரசியல் காட்சிகள் உண்மைக்கு மாறாக இருப்பதாக சில அரசியல் தரப்புகளிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பின.
சஞ்சு (Sanju - 2018)
பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்க்கை படம் இது. சஞ்சய் தத்தின் வாழ்க்கையில் இருந்த குற்றச்சாட்டுகள், சட்டவிரோத ஆயுத வழக்கு மற்றும் அவரது தவறான பழக்க வழக்கங்களை மறைத்து, அவரை ஒரு பாதிக்கப்பட்ட அப்பாவி போலப் புனிதப்படுத்த இந்த படம் முயன்றதாக விமர்சகர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
எம்.எஸ்.தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி (M.S. Dhoni: The Untold Story - 2016)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை பற்றிய படம். இந்திய அணியில் இருந்த மூத்த வீரர்களைத் தோனி நீக்கியதாக வரும் காட்சிகள் கிரிக்கெட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தின. மேலும், தோனியின் நிஜ வாழ்க்கையில் மிக முக்கியமான நபராக இருந்த அவரது அண்ணன் நரேந்திர சிங் தோனி பற்றிய எந்தக் குறிப்பும் படத்தில் அறவே இல்லாதது பெரிய கேள்வியையும் சர்ச்சையையும் உருவாக்கியது.
மேரி கோம் (Mary Kom - 2014)
ஒலிம்பிக் பதக்கம் வென்ற மணிப்பூர் பாக்ஸிங் வீராங்கனை மேரி கோம் பற்றிய படம். வடகிழக்கு இந்தியாவைச் சேர்ந்த ஒரு வீராங்கனையின் கதாபாத்திரத்தில் நடிக்க, அதே பிராந்தியத்தைச் சேர்ந்த நடிகையைப் பயன்படுத்தாமல், வட இந்திய நடிகையான பிரியங்கா சோப்ராவை நடிக்க வைத்தது இன ரீதியான பாரபட்சம் என்று பெரும் எதிர்ப்பு எழுந்தது.
அமரன் (Amaran - 2024)
இந்திய ராணுவத்தின் உயரிய 'அசோக சக்ரா' விருது பெற்ற மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் பற்றிய படம். படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற போதிலும், காஷ்மீர் மக்களின் போராட்டங்கள் மற்றும் அங்குள்ள அரசியல் சூழல் ஒருதலைப்பட்சமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளதாகச் சில அமைப்புகளும் விமர்சகர்களும் கருத்து தெரிவித்தனர். மேஜர் முகுந்த் வரதராஜனின் சாதி அடையாளத்தை படத்தில் மறைத்துவிட்டதாகச் சில சமூக அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன.
பெரியார் (Periyar - 2007)
திராவிட இயக்கத்தின் தந்தை தந்தை ஈ.வெ.ராமசாமியின் வாழ்க்கை பற்றிய படம். ஈ.வெ.ரா.,வின் கடவுள் மறுப்புக் கொள்கைகள், மூடநம்பிக்கை எதிர்ப்புப் பிரசாரங்கள் மற்றும் இந்து மதச் சடங்குகளைப் விமர்சிக்கும் காட்சிகள் படத்தில் இடம்பெற்றிருந்ததால், சில இந்துத்துவ அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. படத்தின் சுவரொட்டிகள் கிழிக்கப்பட்டதோடு, திரையரங்குகள் முன்பும் போராட்டங்கள் நடைபெற்றன.
பிஎம் நரேந்திர மோடி (PM Narendra Modi - 2019)
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கையை மையப்படுத்திய படம். 2019 லோக்சபா தேர்தல் சமயத்தில் இத்திரைப்படம் ரிலீஸாக இருந்ததால், இது தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது என்றும், வாக்காளர்களைக் கவரச் செய்யப்பட்ட அரசியல் பிரசாரப் படம் என்றும் எதிர்க்கட்சிகள், உச்சநீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தை அணுகின. இதன் காரணமாகத் தேர்தல் முடியும் வரை படத்தின் வெளியீட்டுத் தேதி ஒத்திவைக்கப்பட்டது.
பண்டிட் குயின் (Bandit Queen - 1994)
உத்தரப் பிரதேசத்தின் கொள்ளைக்காரியாக மாறி, பின்னர் எம்.பி-யான பூலான் தேவி (Phoolan Devi) பற்றிய படம். பூலான் தேவியின் அனுமதியின்றி அவரது நிஜ வாழ்க்கையில் நடந்த மிகக் கொடூரமான பாலியல் வன்கொடுமைக் காட்சிகளை அப்படியே படமாக்கியதாக அவரே இப்படத்திற்கு எதிராகத் டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்தியாவில் இத்திரைப்படம் சில காலம் தணிக்கைக் குழுவால் தடைசெய்யப்பட்டு, பின்னர் சில வெட்டுகளுடன் வெளியானது.
எமர்ஜென்சி (Emergency - 2025)
இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா மற்றும் 1975-1977 காலகட்டத்தில் இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட அவசரநிலை காலம் பற்றிய படம். படத்தில் சீக்கிய சமூகத்தினரையும், வரலாற்று நிகழ்வுகளையும் தவறாக மற்றும் எதிர்மறையாகச் சித்தரித்துள்ளதாக ஷிரோமணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டி (SGPC) உள்ளிட்ட பல சீக்கிய அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. எதிர்ப்புகள் மற்றும் சட்டப் போராட்டங்கள் காரணமாக இந்தியத் தணிக்கை வாரியம் (CBFC) இப்படத்திற்குச் சான்றிதழ் வழங்க தாமதப்படுத்தியது. இதனால் திட்டமிட்ட தேதியில் படத்தை வெளியிட முடியாமல் போனது.
கங்கனா ரணாவத் பா.ஜ., எம்பியாக இருப்பதால், இத்திரைப்படம் காங்கிரஸ் கட்சியையும், இந்திராவையும் முற்றிலும் தவறாகக் காட்டுவதற்காக எடுக்கப்பட்ட அரசியல் பிரசாரப் படம் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. நீதிமன்ற வழக்குகள் மற்றும் தணிக்கை வாரியத்தின் சில மாற்றங்களுக்குப் பிறகே இத்திரைப்படம் ரிலீஸ் செய்யப்பட்டது.
பயோபிக் படங்களைப் பொறுத்தவரை, வரலாற்று உண்மைகள் மறைக்கப்படுவதாகவோ அல்லது தனிநபர் சுதந்திரம் பாதிக்கப்படுவதாகவோ எழும் குற்றச்சாட்டுகளே பெரும்பாலான சர்ச்சைகளுக்கு முக்கியக் காரணமாக அமைகின்றன.