'அரசன்' படப்பிடிப்பில் மீண்டும் தாமதம் ?
வெற்றிமாறன் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில், சிலம்பரசன், விஜய் சேதுபதி மற்றும் பலர் நடித்து வரும் படம் 'அரசன்'. இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாவதற்கு முன்பிருந்தே படம் பற்றிய நெகட்டிவ் தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வந்தன.
படப்பிடிப்பு ஆரம்பமான பின்பும், படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது, படப்பிடிப்பில் சிக்கல் என்று செய்திகள் வர ஆரம்பித்தன. அப்படி ஒவ்வொரு முறை வரும் போதும் தயாரிப்பு தரப்பிலிருந்து பிஆர்ஓ மூலமாக விளக்கம் கொடுத்து வந்தார்கள்.
தற்போது மீண்டும் ஒரு செய்தி வந்துள்ளது. 'அரசன்' படப்பிடிப்பு தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இப்படத்தின் அடுத்த கட்டப் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு ஆரம்பமாக வேண்டுமாம். இத்துடன் படப்பிடிப்பை முடிக்க வேண்டும் என்று திட்டமிட்டார்களாம்.
ஆனால், சிம்பு துபாயில் இருந்து வர வேண்டும், மணிரத்னம் இயக்கம் படத்தில் நடிக்க விஜய் சேதுபதி போய்விட்டார், தயாரிப்பாளர் தரப்பில் பண நெருக்கடி என்று பேச ஆரம்பித்துள்ளார்கள். இதனால், படப்பிடிப்பு மீண்டும் தாமதமாகியுள்ளதாகச் சொல்கிறார்கள். இது உண்மையா அல்லது பரவிவிடப்படும் செய்தியா என்பது தயாரிப்பு நிறுவனம் கொடுக்கும் விளக்கத்தில் தெரிந்துவிடும்.