பிளாஷ்பேக் : 'அந்திமந்தாரை'யில் நடிக்க மறுத்த சிவாஜி
'அன்னக்கிளி' செல்வராஜ் எழுதிய கதை அந்திமந்தாரை. பென்சனுக்காக போராடும் ஒரு சுதந்திர போராட்ட தியாகியின் கதை. திருமணம் செய்து கொள்ளாத கந்தசாமி என்ற அந்த தியாகி, அண்ணன் மகன் வீட்டில் வசிப்பார். வருமானத்துக்கு வழி இல்லாத அவர், அந்தக் குடும்பத்துக்கு ஒரு சுமையாகத் தெரிவார். இதனால் பென்சன் வாங்க கூடாது என்ற உறுதியோடு இருக்கும் அந்த தியாகி தனது உறுதியை மாற்றிக் கொண்டு பென்சனுக்கு மனு செய்வார். ஆனாலும் பென்சன் வராது.
இந்த நேரத்தில் சென்னைக்கு ஜனாதிபதி வருவார். 'சுதந்திரப் போராட்டத்தின்போது ஜனாதிபதியும் ஒரே சிறையில் தண்டனை அனுபவித்தவர்கள். இதனால் ஜனாதிபதியைச் சந்தித்து தியாகி பென்ஷனுக்கு உதவி கேட்கலாம் என்று அவரை சந்திக்க செல்வார்.
ஜனாதிபதியும் அவரை வரவேற்று உபசரிப்பார். பேச்சின் ஊடே நிறைய பேர் சுதந்திற்கு போராடினோம் என்று பென்சன் கேட்கிறார்கள். ஆனால் அந்த லிஸ்டில் உன் பேர் இல்லை. தியாகத்திற்காக நீ பணத்தை எதிர்பார்க்க மாட்டாய் என்பது எனக்குத் தெரியும் உன்னை நினைத்தால் எனக்கு பெருமையாக இருக்கிறது என்று கூறுவார். இதனால் பென்சன் உதவி கேட்காமலேயே திரும்பி விடுவார் தியாகி.
மீண்டும் குடும்பத்தினரால் புறக்கணிக்கப்பட அவர் சுதந்திர போராட்டத்தின் போது காதலித்த காதலியை தேடிச் செல்வார். கடைசியில் சாலையோரத்தில் உள்ள குப்பைமேட்டில் தியாகி இறந்து கிடப்பதோடு படம் முடியும்.
இந்த தியாகி கேரக்டரில் சிவாஜி நடிக்க வேண்டும் என்று அவரை சந்தித்து கதை சொன்னார் பாரதிராஜா. கதையை கேட்கும்போதே பலமுறை அழுத சிவாஜி “ஏன்ப்பா என்னையே இப்படி அழ வைக்குதே, நான் நடிச்சா ஆடியன்ஸ் எல்லாரும் படம் முழுக்க அழுதுகிட்டே இருப்பாங்க வேண்டாம்பா என்னை விட்டுரு” என்று சொல்லி படத்தில் நடிக்க மறுத்து விட்டார். பின்னர் அந்த கேரக்டரில் விஜயகுமார் நடித்தார். படம் பல விருதுகளை பெற்றாலும், வணிக ரீதியாக தோல்வி அடைந்தது.