காதல் பிரிவு குறித்த வதந்திகளுக்குப் பதிலளித்த அனுபமா பரமேஸ்வரன்!
கடந்த சில வாரங்களாக சமூக வலைதளங்களில் பரவி வந்த தனது காதல் பிரிவு குறித்த வதந்திகளுக்கு நடிகை அனுபமா பரமேஸ்வரன் ஒரு விளக்கம் அளித்துள்ளார். யாரைப் பற்றியும் நேரடியாகப் பெயரைக் குறிப்பிடாமல் பேசிய அவர், கடந்த ஆண்டு உணர்ச்சிப்பூர்வமாகத் தனக்கு மிகவும் சவாலானதாக இருந்தது என்றும், ஒரு கட்டத்தில் தன்னைத் தானே தொலைத்து விட்டது போன்ற உணர்வு ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
நடிகர் துருவ் விக்ரமுடன் ‛பைசன் காளமாடன்' படத்தில் இணைந்து நடித்ததைத் தொடர்ந்து, இருவருக்கும் இடையே காதல் இருப்பதாக வதந்திகள் பரவின. அதைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஒருவரையொருவர் அன்பாலோ செய்ததும், அனுபமா பதிவிட்ட சில உணர்ச்சிப்பூர்வமான பதிவுகளும் இந்த வதந்திகளை மேலும் வலுப்படுத்தின.
இந்த நிலையில்தான், கடந்த ஆண்டு, தான் கடந்து வந்த அந்த கடினமான நேரத்தைப் பற்றிப் பேசிய அனுபமா, ‛‛அந்தக் காலகட்டம் எனக்குள் என்னை முதன்மைப்படுத்துவதன் முக்கியத்துவத்தைப் புரிய வைத்தது'' எனக் கூறியுள்ளார். அதோடு, ‛‛வாழ்வின் பெரும்பாலான நாட்களை மற்றவர்களுக்காகவே வாழ்ந்த பிறகு, இப்போது என் வாழ்க்கையின் முழுக் கட்டுப்பாட்டையும் நான் என் கைக்கு எடுத்துள்ளேன். தற்போது என் மனதில் நிம்மதியும் மகிழ்ச்சியும் நிறைந்த ஒரு நல்ல கட்டத்தில் இருக்கிறேன். கடந்த காலத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, எதிர்காலத்தை நோக்கி நகர்ந்து செல்வதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன். எனது தனிப்பட்ட வாழ்க்கையின் ஒவ்வொரு விஷயத்தையும் அனைவருக்கும் விளக்க வேண்டிய அவசியம் இல்லை. சில அனுபவங்களை அமைதியாக தனிப்பட்ட முறையில் வைப்பதே சிறந்தது என்று நம்புகிறேன்'' எனக் கூறியுள்ளார் அனுபமா.