உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: 'பாவமன்னிப்பு' படத்தில் முதலில் நடித்தது யார் தெரியுமா?

பிளாஷ்பேக்: 'பாவமன்னிப்பு' படத்தில் முதலில் நடித்தது யார் தெரியுமா?


தமிழ் சினிமாவின் முக்கியமான படங்களில் ஒன்று 'பாவமன்னிப்பு'. சிவாஜியின் கேரியரில் மிக முக்கியமான படம். பீம்சிங்கின் பா வரிசை படங்களில் நம்பர் ஒன் இடத்தில் உள்ள படம்.

இந்துவாகப் பிறந்து, இஸ்லாமியராக வளர்க்கப்பட்டு, ஒரு கிறிஸ்தவப் பெண்ணை மணம் முடிக்கும் ஒரு மனிதரைப் பற்றிய கதைதான் 'பாவமன்னிப்பு'. இந்த கதையை எழுதியது காமெடி நடிகர் சந்திரபாபு. அதை படமாக்கலாம் என்று சந்திரபாபு, பீம்சிங்கிடம் சொன்னபோது அந்த யோசனை அவருக்கு பிடித்திருந்தது. 'அப்துல்லா' என்று டைட்டில் வைக்கப்பட்டு, தனது 'புத்த பிக்சர்ஸ்' சார்பில் படமாக இயக்கினார் பீம்சிங்.

சந்திரபாபு நாயகனாக நடிக்க 2 ஆயிரம் அடி படமாக்கப்பட்டது. ஆனால் எடுத்த வரையில் படத்தை போட்டுப்பார்த்த பீம்சிங்கிற்கு அது திருப்தி தரவில்லை. அழுத்தமான இஸ்லாமியர் கேரக்டரை சந்திரபாபுவால் தாங்க முடியவில்லை. சீரியஸ் குறைந்து அவரது காமெடி முகமே தெரிந்தது.

2 ஆயிரம் அடி படத்தை ஏவிஎம். சரவணனிடம் திரையிட்டுக் காட்டி அவரது கருத்தைக் கேட்டார். கதையை விரும்பிய சரவணன், அதனைத் தனது தந்தையான ஏ.வி.மெய்யப்பனிடம் கூறினார். அவருக்கும் பிடித்துப்போனது. இந்த படத்தை பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கலாம். சிவாஜி நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று கருத்து சொன்னார் ஏவிஎம் செட்டியார். பெரிய பட்ஜெட் என்றதும் பீம்சிங் தயங்கினார். அதனால் ஏவிஎம் நிறுவனம் இணை தயாரிப்பில் இணைவதாக சொன்னது.

'பாவ மன்னிப்பு' என்ற தலைப்பில் திரைக்கதையை மீண்டும் உருவாக்கத் தொடங்கினார் பீம்சிங். எம்.எஸ்.சோலைமலை இப்படத்திற்கான வசனங்களை எழுதினார். சிவாஜியுடன் ஜெமினி கணேசன், எம்.ஆர்.ராதா, வி.நாகய்யா, டி.எஸ்.பாலய்யா, சாவித்ரி, தேவிகா, எம்.வி.ராஜம்மா உள்ளிட்ட பலர் நடித்தனர். இந்த படத்தில் நடிக்க சந்திரபாபு மறுத்துவிட்டார். இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 'மூலக்கதை சந்திரபாபு' என்று போடப்பட்ட டைட்டில் கார்டும் நீக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !