25 வருடங்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் ரவீனா டாண்டன்
ஹிந்தித் திரையுலகத்தில் 90களின் துவக்கத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் ரவீனா டாண்டன். 1991ல் வெளிவந்த 'பட்ஹர் கே பூல்' என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி கவனத்தை ஈர்த்தவர். தொடர்ந்து 'தில்வாலே, மொஹ்ரா, கிலாடியோன் கா கிலாடி, ஜித்தி, துல்ஹே ராஜா, படா மியான் சோட்டே மியான்' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.
2001ல் வெளிவந்த 'டமான்' படத்திற்காக சிறந்த நடிகைகக்கான தேசிய விருதையும் பெற்றவர் ரவீனா.
1994ல் அர்ஜுன் நாயகனகா நடித்து வெளிவந்த 'சாது' படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். ஆனால், அந்தப் படம் தோல்வியடைந்தது. அதற்குப் பின் தமிழில் 2001ல் வெளிவந்த கமல்ஹாசன் நடித்த 'ஆளவந்தான்' படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்தார்.
அதற்குப் பின் கடந்த 25 வருடங்களாக எந்த ஒரு தமிழ்ப் படத்திலும் அவர் நடிக்கவில்லை. நேற்று வெளியான 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் அவர் நடித்துள்ளார். படத்தின் நாயகன் சூர்யாவுக்கு தக்க சமயத்தில் ஆலோசனை சொல்லும் அவரது காட்சி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளது.