உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சூர்யா படத்தை இயக்குங்கள் : பிரபல இயக்குனருக்கு மனைவி கட்டளை

சூர்யா படத்தை இயக்குங்கள் : பிரபல இயக்குனருக்கு மனைவி கட்டளை


நடிகர் சூர்யாவின் கவனம் சமீப காலமாக தெலுங்கு மற்றும் மலையாளத் திரை உலகில் வெற்றி பெற்ற இயக்குனர்களின் பக்கம் திரும்பி உள்ளது. அந்த வகையில் சமீபத்தில் வெளியாகி வெற்றிபெற்ற 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்தை தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கி இருந்தார். அடுத்ததாக சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படத்தை மலையாள இயக்குனர் ஜித்து மாதவன் இயக்குகிறார். இதனைத் தொடர்ந்து தமிழில் சில இளம் இயக்குனர்களுடன் சூர்யா பணியாற்ற உள்ளார்.

அதே சமயம், தெலுங்கில் பிரபல இயக்குனராக இருக்கும் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் சூர்யாவின் படத்தை இயக்க வேண்டும் என்கிற தனது ஆசையை சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்ற விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் வெற்றி விழாவின்போது வெளிப்படையாகவே கூறியுள்ளார். இதில் முக்கியமான விஷயம், திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸின் மனைவி சவுஜன்யா, 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர்.

இந்நிகழ்வில் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் பேசும்போது, இந்தியாவில் வயது பின்னோக்கிச் செல்வது போலத் தோன்றும் வெகு சில நடிகர்களில் சூர்யாவும் மகேஷ்பாபுவும் முக்கியமானவர்கள். 'கஜினி' படத்தை பாலிவுட்டில் அமீர்கான் நடித்த போது கூட சூர்யாவின் நடிப்பை அவரால் ஈடுகட்ட முடியவில்லை. விரைவில் சூர்யாவை வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. அதுமட்டுமல்ல, என் மனைவியும் சூர்யாவின் தீவிர ரசிகை. சூர்யாவை வைத்து படம் இயக்குமாறு என்னிடம் கோரிக்கை மட்டுமல்ல, அதை ஒரு கட்டளையாகவே அவர் பிறப்பித்துள்ளார் என்று நகைச்சுவையாக குறிப்பிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !