வாசகர்கள் கருத்துகள் (1)
‘அரசியலில் கிடைத்த எதிர்பாராத வெற்றி’ என்பதன் பொருள் => “ நீங்களும் இதர கட்சிகளும் எதிர்பாராத விஜயின் வெற்றி” ஆனால் மக்களும், விஜயும் ‘எதிர்பார்த்த வெற்றி’
தமிழ் சினிமாவின் முன்னணி வியாபார நடிகர் விஜய், தீவிர அரசியலில் இறங்குவதற்காக 'ஜனநாயகன்' படத்தைத் தனது கடைசி படம் என அறிவித்தார். படமும் இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக வெளியாக உள்ள படம் என்பதால் அப்போது ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், அறிவிக்கப்பட்ட தேதியான ஜனவரி 9ல் படம் வெளியாகவில்லை. தணிக்கை சான்றிதழ் சிக்கலில் படம் சிக்கியது. அதன்பின் நீதிமன்ற வழக்குகள், வாபஸ், தேர்தல் என அப்படியே ஆறு மாத காலம் ஓடிப் போனது. இடையில் இணையங்களில் வேறு படம் திருட்டுத்தனமாக வெளியானது.
ஒரு வழியாக ஜூலை மாதம் படத்தின் தணிக்கை நடந்து 'ஏ' சான்றிதழ் வழங்கப்பட்டது. ஜூலை 23ல் வெளியான படம் பாசிட்டிவ் விமர்சனங்களை விட நெகட்டிவ் விமர்சனங்களையே அதிகம் பெற்றது.
தெலுங்கில் பாலகிருஷ்ணா நடித்து வெளிவந்து, அந்த ஆண்டிற்கான சிறந்த தெலுங்குப் படம் என தேசிய விருதையும் பெற்றுத் தந்த 'பகவந்த் கேசரி' படத்தின் ரீமேக் தான் இந்த 'ஜனநாயகன்' என்பது உறுதி செய்யப்பட்டது. ஆனால், ஒரிஜினல் கதையை எப்படி எப்படியோ மாற்றி தமிழில் ரீமேக் செய்திருந்தார்கள்.
படத்தின் வசூல் என்ன என்பது பற்றி தயாரிப்பு நிறுவனம் எந்தவிதமான அறிவிப்பையும் இதுவரையிலும் வெளியிடவில்லை. ஆனால், 300 கோடிக்கு மேல் வசூலித்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. அவ்வளவு வசூலைக் கடந்தாலும் இப்படம் மூலம் சுமார் 100 கோடிக்கு மேல் நஷ்டம் வரலாம் என்று சொல்கிறார்கள்.
இப்படம் நாளை ஆகஸ்ட் 21ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இந்த வார இறுதியுடன் படத்தின் தியேட்டர் ஓட்டம் முடிவுக்கு வரலாம்.
விஜய் தமிழக முதல்வராகப் பதவியேற்ற பின் வந்த படம் என்பதால் அவரது ரசிகர்களும், கட்சித் தொண்டர்களும் படத்தைப் பெரிய வெற்றி பெற வைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், விஜய்க்கு அரசியலில் கிடைத்த எதிர்பாராத வெற்றி அவரது கடைசி படமான இந்த 'ஜனநாயகன்' படத்தின் மூலம் கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை.
‘அரசியலில் கிடைத்த எதிர்பாராத வெற்றி’ என்பதன் பொருள் => “ நீங்களும் இதர கட்சிகளும் எதிர்பாராத விஜயின் வெற்றி” ஆனால் மக்களும், விஜயும் ‘எதிர்பார்த்த வெற்றி’