பிளாஷ்பேக் : டுவின்சாக நடித்த சாவித்ரி
நடிகையர் திலகம் சாவித்ரி நடிக்காத கதாபாத்திரங்களே இல்லை என்று சொல்லலாம். அந்த வரிசையில் அவர் டுவின்சாக, அதாவது இரட்டை சகோதரியாக நடித்த படம் 'காத்திருந்த கண்கள்'. இதில் அவர் செண்பகம், லலிதா என்ற இரட்டை சகோதரிகளாக நடித்தார். இரட்டையர்களில் ஒருவரை மணந்து கொள்ளும் டாக்டராக ஜெமினி கணேசன் நடித்தார். இவர்கள் தவிர எஸ்.வி.ரங்காராவ், எம்.ஆர்.ராதா, பண்டரிபாய், ராகவன் உள்ளிட்ட பலர் நடித்தனர். டி.பிரகாஷ்ராவ் இயக்கி இருந்தார். விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசை அமைத்திருந்தனர். இந்த படம் வங்கத் திரைப்படமான 'ஸ்மிருதி டுக்கு தக்' என்ற படத்தின் மறுஆக்கம் ஆகும், தெலுங்கில் 'ஆஷா ஜோதி' என்ற பெயரில் வெளியானது.
ஒரு ஏழை தாய்க்கு பிறந்த இரட்டை சகோதரிகள் வறுமையின் காரணமாக பிரிகிறார்கள். அதாவது ஒரு மகளை தாய் வளர்த்துக்கொள்ள இன்னொரு மகளை ஒரு பணக்காரர் ஒருவருக்கு தத்து கொடுத்து விடுகிறார். தாய் இறக்கும் தருவாயில் மகளிடம் இரட்டை சகோதரிகள் பற்றிய ரகசியத்தை சொல்கிறார். மகளும் பணக்காரரிடம் வளரும் தன் சகோதரியை தேடிச் செல்கிறார். அதன்பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை. படம் சாவித்ரியின் நடிப்பிற்காக பேசப்பட்டது. நல்ல வரவேற்பையும் பெற்றது.
காற்று வந்தால் தலைசாயும் நாணல் , கண்படுமே பிறர் கண்படுமே நீ வெளியே வரலாமா ஓடம் நதியினிலே, துள்ளித் திரிந்த பெண்ணொன்று , வா என்றது உருவம் , வளர்ந்த கலை மறந்துவிட்டாள் கேளடா கண்ணா போன்ற புகழ்பெற்ற பாடல்கள் இடம்பெற்ற படம் இது.