உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சவுகார் ஜானகி மறைவுக்கு முதல்வர் விஜய், கமல் இரங்கல்

சவுகார் ஜானகி மறைவுக்கு முதல்வர் விஜய், கமல் இரங்கல்

பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி சென்னையில் காலமானார். 400 படங்களில் நடித்துள்ள அவரது திரைப்பயணம் அளப்பறியது. அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். திரைத்துறையில் இருந்து வந்து இன்று தமிழக முதல்வராக உள்ள முதல்வர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், ‛‛பழம்பெரும் திரைப்பட நடிகையும், தனது தனித்துவமான நடிப்பால் பல தலைமுறை ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவருமான சவுகார் ஜானகி உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

திரைத்துறையில் 70 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயணித்து, எண்ணற்ற கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டிய அவரது கலைப்பணி என்றும் போற்றத்தக்கது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி போன்ற பல்வேறு மொழிப் படங்களில் நடித்து சாதனை படைத்துள்ளதோடு, பத்மஸ்ரீ விருது, கலைமாமணி விருது, நந்தி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள அவரின் மறைவு திரையுலகத்திற்கு பேரிழப்பாகும்.

அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், திரைத்துறையினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது ஆன்மா இறைவன் திருவடிகளில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்''.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.


நடிகர் கமல் இரங்கல்
'பார்த்தால் பசி தீரும்' படம் தொடங்கி நாற்பதாண்டு காலப்பரப்பில் பல படங்கள் இணைந்து பணியாற்றியுள்ளோம். அவர் அம்மா, நான் பிள்ளை. தென்னிந்தியத் திரையின் தவிர்க்கவியலாத நடிப்புக் கலைஞர் சவுகார் ஜானகி. அன்றைய கதாநாயகர்கள் அத்தனை பேரோடும் நடித்தவர். என் ஆசிரியர் கே.பாலசந்தரின் விருப்பத் தேர்வாக இருந்தவர். மறைந்துவிட்டார். அன்னை பிம்பம் ஒன்று விடைபெற்றது. கண்ணீரோடு வழியனுப்புகிறேன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !