பிளாஷ்பேக் : இரண்டு வேடங்களில் நடித்த ராஜசுலோச்சனா
1960 காலகட்டங்களில் கதாநாயகிகள் இரண்டு வேடங்களில் நடிப்பது மிகவும் அபூர்வம். அந்த வகையில் ராஜசுலோச்சனா இரண்டு வேடத்தில் நடித்த படம் 'கவிதா'. இதில் நம்பியார் நாயகனாகவும், எம்.ஆர்.ராதா எதிர் நாயகனாகவும் நடித்தனர். இவர்களுடன் டி.எஸ்.பாலய்யா, பண்டரிபாய் உள்ளிட்ட பலர் நடித்தனர். மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்தை டி.ஆர்.ரகுநாத் இயக்கியுள்ளார். கே.வி.மகாதேவன் இசை அமைத்துள்ளார்.
படத்தின் கதைப்படி கதையின் நாயகி கவிதா (ராஜசுலோச்சனா) ஒரு செல்வந்தர் வீட்டு மகள். கவிதா ஓவிய கலைஞரான நம்பியாரை காதலிப்பார். ஆனால் சொந்த அத்தை மகன் எம்.ஆர்.ராதாவை வலுக்கட்டமாய திருமணம் செய்ய வேண்டிய நிலை. எம்.ஆர் ராதா குடிகாரர், பணத்தாசை பிடித்தவர். அவர் கவிதாவை கொடுமைப்படுத்துகிறார். அவரது தந்தையிடம் பணம் வாங்கி வரச் சொல்கிறார். அதற்கு அவர் மறுக்கிறார்.
கவிதாவை போன்ற தோற்றம் கொண்ட பொன்னம்மா (ராஜசுலோச்சனா) என்ற பெண்ணை கண்டுபிடித்து அவளை கவிதாவாக மாற்றி மாமனாரிடம் பணம் பறிக்கிறார். கவிதாவிற்கு பைத்தியக்கார பட்டம் கட்டி மருத்துவமனையில் சேர்க்கிறார். கவிதா அங்கே உயிரிழக்கிறார். இதை அறியும் கவிதாவின் காதலன் உண்மையை கண்டுபிடிக்க புறப்படுகிறார் அதன் பிறகு நடப்பது மீதி கதை.