சைப் அலிகான் மீதான தாக்குதல் : குறைந்தபட்ச தண்டனை வழங்குமாறு குற்றவாளி மனு தாக்கல்
கடந்த 2025-ஆம் ஆண்டு ஜனவரி 16-ஆம் தேதி அதிகாலையில், மும்பை பாந்திராவில் உள்ள நடிகர் சைப் அலிகான் வீட்டுக்குள் மர்ம நபர் ஒருவன் புகுந்தான். அப்போது அந்த நபரைப் பிடிக்க முற்பட்டபோது, அவன் கத்தியால் சைப் அலிகானைத் தாக்கிவிட்டுத் தப்பினான். அந்தத் தாக்குதலில் சைப் அலிகானின் முதுகு மற்றும் கைகளில் ஆறு இடங்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டன.
இதனைத் தொடர்ந்து, மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஐந்து நாள் சிகிச்சைக்குப் பிறகு அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அதன்பின், சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் இரண்டு நாட்களில் அந்த மர்ம நபரை மும்பை போலீசார் கைது செய்தனர்.
அந்த நபரிடம் நடத்திய விசாரணையில், அவன் பெயர் முகமது ஷரீபுல் இஸ்லாம் ஷேக் என்பதும், வங்காள தேசத்தைச் சேர்ந்தவன் என்பதும் தெரியவந்தது. அவன் மீது பயங்கர ஆயுதங்களுடன் கொள்ளையடிக்க முயற்சி செய்தல், அத்துமீறி நுழைதல் மற்றும் வெளிநாட்டவர் சட்டத்தின் கீழ் கடுமையான பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டான்.
இந்த வழக்கின் திடீர் திருப்பமாக, சில தினங்களுக்கு முன்பு மும்பை செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றவாளி ஷரீபுல் இஸ்லாம் தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டதோடு, தனக்குக் குறைந்தபட்ச தண்டனை வழங்குமாறு மனு தாக்கல் செய்துள்ளான். இந்த மனு மீதான விசாரணை தற்போது நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை விரைவில் நடைபெறவுள்ளது.