பிளாஷ்பேக்: எம் ஜி ஆரின் முழுமையான இறுதித் திரைப்படமே, அவர் இயக்கிய முதல் தோல்வித் திரைப்படம்
ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரையுலகில் ஒரு முடிசூடா மன்னனாக வாழ்ந்து மறைந்தவர் மக்கள் திலகம் எம் ஜி ஆர். ஒரு துணை நடிகராக தனது கலைப் பணியை ஆரம்பித்து, பின் நாயகனாக உயர்ந்து, தனக்கென ஒரு பாணியை உருவாக்கி, அதிலிருந்து சிறிதும் விலகாமல், தன் ரசிகர்களின் நாடித் துடிப்பறிந்து திரைப்படங்களைத் தந்து, வெற்றி என்ற இலக்கை எளிதாய் பிடித்துவிடும் வித்தை அறிந்தவர் எம் ஜி ஆர்.
நடிப்பையும் தாண்டி, திரைத்துறையின் அத்தனை தொழில்நுட்பங்களும் நன்கறிந்த ஒரு தலைசிறந்த திரை ஆளுமையான இவர் நடித்த மொத்த திரைப்படங்களின் எண்ணிக்கை 136. இவற்றில் இவரது இயக்கத்தில் வெளிவந்த “நாடோடி மன்னன்”, “உலகம் சுற்றும் வாலிபன்” என்ற இந்த இரண்டு வெள்ளி விழா திரைப்படங்களைத் தொடர்ந்து, இவர் இயக்கிய இறுதித் திரைப்படம்தான் “மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்”.
எம் ஜி ஆர் தனது கனவு கலைப்படைப்பாக தானே தயாரித்து, இயக்கி, நடிக்க நினைத்திருந்த ஒரு திரைப்படம்தான் கல்கியின் “பொன்னியின் செல்வன்”. இந்த நாவலின் உரிமையை வாங்கி வைத்திருந்த இவர், வந்தியத் தேவன் என்ற கதாபாத்திரத்திலும் நடிப்பதாக முடிவு செய்து வைத்திருந்த நிலையில், இறுதிவரை அத்திட்டம் அவருக்கு கை கூடாமலே போனது. பின்னர் 1974ம் ஆண்டு பிரபல தயாரிப்பாளரும், இயக்குநருமான பி ஆர் பந்துலு, எம் ஜி ஆரை கதையின் நாயகனாக நடிக்க வைத்து, தானே தயாரித்து இயக்க திட்டமிட்டு, அவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட ஒரு திரைப்படம்தான் இந்த “மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்”.
அன்றைய பிரபல தமிழ் இதழ் ஒன்றில் தொடராக வெளிவந்து கொண்டிருந்த அகிலனின் “கயல்விழி” என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டு வந்த இத்திரைப்படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநருமான பி ஆர் பந்துலு திடீரென மரணமடைய, படத்தை இயக்கும் பொறுப்பினை எம் ஜி ஆரே ஏற்று படத்தின் இயக்குநரானார். “சோலீஸ்வர் கம்பைன்ஸ்” என்ற தயாரிப்புப் பதாகையின் கீழ், சொக்கையா மற்றும் சுப்ரமணி அய்யர் ஆகிய இருவரும் தயாரிப்புப் பொறுப்பை ஏற்க முன்வந்ததால், படப்பிடிப்பு வேகமாக வளரவும் ஆரம்பித்தது.
அப்போதைய தேர்தல் அரசியல் களத்திலும் அதிதீவிரம் காட்டி வந்த எம் ஜி ஆர், ஒரு முழுநேர அரசியல்வாதியாக செயல்பட்டு, தேர்தலை சந்தித்து வெற்றி பெற்று, தமிழக முதல்வராகவும் ஆன நிலையில், படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடையாத நிலையில் இருந்ததால், அன்றைய தமிழக கவர்னரிடம் முறையான அனுமதி பெற்று, சில நாட்களிலேயே படம் முழுவதையும் முடித்துக் கொடுத்திருந்தார் எம் ஜி ஆர். அவர் நடித்து, வெளிவந்த முழுமையான அவரது இறுதித் திரைப்படமான இத்திரைப்படம் 1978ம் ஆண்டு பொங்கல் திருநாளன்று வெளியானது.
குறிப்பு: ஜேப்பியார் மற்றும் எம்.கண்ணன் இயக்கத்தில் எம்ஜிஆர் நடிப்பில் ஒரு படம் தயாராகிக்கொண்டிருந்தது. அதில் குறைவான காட்சிகளே எம்ஜிஆர் நடித்திருந்தார். அதற்குள் அரசியல் பிரவேசம், முதல்வராக பொறுப்பேற்பு, இறப்பு என ஆகிவிட்டதால், அவரது சில காட்சிகளை மட்டும் வைத்து திரைக்கதையை மாற்றி 1991ல் 'நல்லதை நாடு கேட்கும்' என்ற திரைப்படமாக வெளியிட்டனர். எனவே அவர் நடித்து கடைசியாக வந்த படம் 'நல்லதை நாடு கேட்கும்' என இருந்தாலும், அவர் முழுமையாக நடித்த கடைசி படம் 'மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்' தான்.
சுந்தரபாண்டியனாக எம் ஜி ஆர், கயல்விழியாக லதா, இளவரசி பாமினியாக பத்மப்ரியா, ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, மேலும் எம் என் நம்பியார், பி எஸ் வீரப்பா, எஸ் வி சகஸ்ரநாமம், எஸ் வி சுப்பையா, வி எஸ் ராகவன், தேங்காய் சீனிவாசன், ஐசரி வேலன், என்னத்தே கன்னையா, கே கண்ணன் என பெரும் நட்சத்திரத் திரளே நடித்திருக்க, படத்திற்கு இசையமைத்திருந்தார் எம் எஸ் விஸ்வநாதன்.
“தென்றலில் ஆடும் கூந்தலைக் கண்டேன்”, “அமுதோ தமிழில் எழுதும் கவிதை”, “வீரமகன் போராட”, “தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை” என படத்தின் பாடல்கள் அனைத்தும் நன்றாக அமைந்திருந்தும், படம் வசூல் ரீதியாக எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை. எம் ஜி ஆரின் இறுதித் திரைப்படம் என்ற எந்த ஒரு விளம்பரமுமின்றி வெளிவந்த இத்திரைப்படம், எம் ஜி ஆர் நடித்த முழுமை பெற்ற அவரது இறுதித் திரைப்படமாக அமைந்திருந்ததோடு மட்டுமின்றி அவரது இயக்கத்தில் வெளிவந்து தோல்வியை சந்தித்த முதல் திரைப்படமாகவும் அமைந்திருந்ததுதான் இந்த “மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்”.