உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விளையாட்டுத்துறைக்கு முக்கியத்துவம் அளிக்கும் முதல்வர் விஜய்க்கு வாழ்த்துகள்: நடிகர் அஜித்குமார்

விளையாட்டுத்துறைக்கு முக்கியத்துவம் அளிக்கும் முதல்வர் விஜய்க்கு வாழ்த்துகள்: நடிகர் அஜித்குமார்

'' விளையாட்டுத்துறைக்கு முதல்வர் விஜய் முக்கியத்துவம் அளிக்கிறார். அவரின் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்,'' என நடிகர் அஜித்குமார் தெரிவித்துள்ளார்.

சட்டசபையில் இன்று 110வது விதியின் கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்ட முதல்வர் விஜய், தமிழகத்தில் உலக அளவிலான கார் பந்தய விளையாட்டு போட்டிகளுக்கான கார் உற்பத்தி ஆலைகளையும், அதற்கு தேவையான உப தொழிற்சாலைகளையும் அமைக்க தேவையான சூழல் உள்ளது. உலகத் தரம் வாய்ந்த மோட்டார் வாகன கார் பந்தய அரங்குகளை அமைப்பதன் வாயிலாக சுறறுலா, சிறப்பு வாகன உற்பத்தித் தொழிற்சாலைகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம் மேம்பட வாய்ப்புகள் உள்ளன. விளையாட்டு சுற்றுலாவை மேம்படுத்தவும், தமிழக இளைஞர்கள் இடையே மோட்டார் ஸ்டோர்ட்ஸ் மீதான ஆர்வத்தை ஊக்குவித்து பயிற்சிகள் வழங்கவும், புதிய மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் உருவாக்கப்படும். இந்த நகரத்தில் சர்வதேச தரத்திலான மோட்டார் ஸ்போர்ட்ஸ் பந்தயத்தடம், அதற்கான நவீன உட்கட்டமைப்பு வசதிகள், பயிற்சி வசதிகள் ஏற்படுத்தப்பட்டு பார்முலா 1 முதல் பார்முலா 4 வரையிலான சர்வதேச போட்டிகள் நடத்த கட்டமைப்புகள் உருவாக்கப்படும் எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில், கார் ரேஸில் ஈடுபட்டு வரும் நடிகர் அஜித்குமார் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழகத்தின் இளைஞர்களை விளையாட்டுத் துறையின் பக்கம் ஈர்த்து, அவர்களிடம் உள்ள திறமைகளைக் கண்டறிந்து, அவற்றை முறையாக வளர்த்தெடுப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் தமிழக அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு முன்னெடுப்புகள் மிகுந்த பாராட்டுக்குரியவை. ​குறிப்பாக, தமிழகத்தில் பிரத்யேகமான மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. ​

தற்போது மோட்டார் ஸ்போர்ட்ஸில் ஈடுபட்டு வரும் ஒருவராக, விண்வெளி வீரர் திரு. நீல் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் புகழ்பெற்ற வார்த்தைகளை சற்றே மாற்றி இவ்வாறு கூற விரும்புகிறேன்:​'One small step by the Tamil Nadu Government, one giant leap for Indian motorsports(தமிழக அரசின் ஒரு சிறிய அடி, இந்தியாவில் மோட்டார் பந்தயத்திற்கு ஒரு மாபெரும் பாய்ச்சல்!).' முதல்வர் விஜயின் அனைத்து முயற்சிகளும் பெரும் வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ​மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி உள்ளிட்ட தமிழக அரசின் அனைத்து விளையாட்டு முன்னெடுப்புகளும் மாபெரும் வெற்றி பெறட்டும்.​நன்றியும் வாழ்த்துகளும். இவ்வாறு அந்த அறிக்கையில் அஜித்குமார் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !