30வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார் சூர்யா: தீபாவளிக்கு ஜீத்து மாதவன் படம் ரிலீஸ்?
மணிரத்னம் தயாரிப்பில், வசந்த் இயக்கத்தில் உருவான படம் 'நேருக்கு நேர்'. 1997ம் ஆண்டு வெளியான இந்த படத்தில்தான் சூர்யா நடிகராக அறிமுகம் ஆனார். இரண்டு ஹீரோ சப்ஜெக்ட் இது. முதலில் விஜய், அஜித் நடித்தனர். சில பிரச்னைகளால் சில நாட்கள் நடித்த அஜித் விலக, ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்த நடிகர் சிவகுமார் மகன் சரவணனை ஹீரோ ஆக்கினார் வசந்த். அப்போது 'பருத்திவீரன்' சரவணன் பிஸியாக இருந்ததால், இவர் பெயர் சூர்யா ஆனது. தேவா இசையமைத்தார். இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடி சிம்ரன். விஜய்க்கு ஜோடி கவுசல்யா.
'அவள் வருவாளா', 'மனம் விரும்புதே', 'எங்கெங்கே எங்கெங்கே', 'அகிலா அகிலா', துடிக்கின்ற காதல் ' என அனைத்துப் பாடல்களும் தேவா இசையமைத்த பாடல்களில் ஆகச் சிறந்தவை என்று சொல்லலாம். 'ஆசை' படத்துக்கும் தேவா மிகச் சிறந்த பாடல்களை வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கே.வி.ஆனந்த் ஒளிப்பதிவு செய்தார். மீண்டும் வசந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கவில்லை. ஆனால், படத்தை தயாரித்த மணிரத்னம் இயக்கிய 'ஆயுத எழுத்து' படத்திலும், படத்துக்கு ஒளிப்பதிவு செய்த கே.வி.ஆனந்த் இயக்கிய 'அயன், காப்பான்' படங்களிலும் நடித்தார்.
பிற்காலத்தில் சூர்யாவும், சிம்ரனும் இணைந்து நடித்த 'வாரணம் ஆயிரம்' பெரிய வெற்றி பெற்றது. முதலில் இந்த படத்துக்கு மனசுக்குள் வரலாமா என தலைப்பு இருந்தது. அதை மாற்றியவர் தயாரிப்பாளராக இருந்த மணிரத்னம். அதேபோல் சரவணன் என்ற பெயரை, தளபதி படத்தில் வரும் தனக்குபிடித்த சூர்யா என்ற பெயராக மாற்றினார். முதல் படம் என்பதால் படப்பிடிப்பில், டான்ஸ், சண்டைக்காட்சிகளில் நிறையவே கஷ்டப்பட்டு இருக்கிறார். அவமானப்பட்டு இருக்கிறார் சூர்யா. நான் இந்த படத்துக்குபின் டெக்ஸ்டைல் பிஸினஸ் பண்ணப்போகிறேன் என சொல்லியிருக்கிறார்.
அந்த சமயத்தில் ரயிலில் ஒரு நிகழ்ச்சிக்காக செல்லும்போது சூர்யா துாங்கிக்கொண்டிருக்க, 'டேய்...என்னடா சாதிச்சுட்டே நீ... உனக்குலாம் எப்படிரா இவ்ளோ சீக்கிரம் தூக்கம் வருது?' என்று நடிகர் ரகுவரன் கேட்ட கேள்வி, சூர்யாவை பாதித்து இருக்கிறது. என்னை பல நாட்கள் இந்த படம் தூங்கவிடவில்லை. அது ஒரு வெறியை உண்டு பண்ணியது என சூர்யா பிற்காலத்தில் சொல்லியிருக்கிறார். இந்த ஆண்டு சூர்யா நடித்த 'கருப்பு வெற்றி பெற்று 350 கோடியையும், 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' வெற்றி பெற்று 250 கோடியை தாண்டி உள்ளது. ஜீத்துமாதவன் இயக்கத்தில் அவர் நடித்த பெயரிடப்படாத படம் தீபாவளிக்கு வர உள்ளதாக தகவல். சூர்யாவின் 49வது படத்தை எச்.வினோத்தும், 50வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளனர். 50வது படத்தில் கார்த்தி கவுரவ வேடத்தில் நடிக்கப்போகிறார் என்றும் தகவல்.