பிளாஷ்பேக்: சண்டை கலைஞர்களுக்கு சங்கம் அமைத்துக் கொடுத்த எம்ஜிஆர்
மக்கள் திலகம் எம்ஜிஆரை புரட்சி நடிகராகவும், தலைவராகவும் ஆக்கியது, அவர் நடித்த சண்டை காட்சிகள்தான். டூப் போடாமல் அவர் நடித்த படங்களால் மக்கள் அந்த சண்டை காட்சிக்கு மயங்கி கிடந்தனர். இதனால் சண்டை காட்சிகளில் தன்னோடு பணியாற்றும் சண்டை கலைஞர்கள் மீது அவர் எப்போதும் அக்கறை செலுத்தி வந்தார்.
ஒரு முறை ஒரு படத்தில் நடித்து முடித்த பிறகு தன்னுடன் பணியாற்றிய சண்டை கலைஞர்களுக்கு சம்பளம் தராமல் இழுத்தடித்தார் தயாரிப்பாளர். சண்டை கலைஞர்கள் எம்ஜிஆரிடம் முறையிட்டனர். இதை கேட்டு ஆத்திரமடைந்த எம்ஜிஆர் அந்த தயாரிப்பாளருக்கு போன் செய்து “உயிரைக் கொடுத்து உழைத்துவர்களுக்கு சம்பளம் தர மாட்டீர்களா. என் உதவியாளரை அனுப்பி வைக்கிறேன். அவரிடம் அனைத்து பணத்தையும் கொடுத்து விடுங்கள், இல்லாவிட்டால் நானே கொடுத்து விடுவேன். இனி உங்கள் தயாரிப்பில் நடிக்க மாட்டேன், நான் நடிக்கா விட்டால் யாரும் நடிக்க மாட்டார்கள்” என்று கோபமாக கூறி போனை வைத்து விட்டார்.
பதறிப்போன அந்த தயாரிப்பாளர் பணத்தை எடுத்துக் கொண்டு எம்ஜிஆர் வீட்டுக்கே வந்து விட்டார். ஊழியர்களுக்கான சம்பளத்தை பிரித்து கொடுத்தார். அப்போதுதான் எம்ஜிஆருக்கு சண்டை கலைஞர்களுக்கு பாதுகாப்பற்ற ஒரு நிலை இருப்பதை உணர்ந்து, 'தென்னிந்திய சண்டை கலைஞர்கள் சங்கத்தை' உருவாக்கினார். பின்னர் அந்த சங்கம் 'தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி சண்டை இயக்குனர்கள் மற்றும் சண்டை கலைஞர்கள் சங்கம்' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
1967ம் ஆண்டு உருவான இந்த சங்கத்தில் உறுப்பினர்கள் பணியாற்றினால் அவர்களது சம்பளம் சங்கத்தில் செலுத்தப்பட வேண்டும். அவர்கள் அதில் ஒரு பகுதியை சண்டை கலைஞரின் எதிர்கால பாதுகாப்பிற்கு பிடித்தம் செய்து கொண்டு மீதியை வழங்குவார்கள். அதேபோல சண்டை கலைஞர்களுக்கு சங்கத்தின் சார்பில் காப்பீடு செய்ய வேண்டும் என்ற பல விதிமுறைகளையும் வகுத்து கொடுத்தார்.
இதற்கெல்லாம் சிகரம் வைத்த மாதிரி தன் வாழ் நாள் முழுவதும் 50க்கும் மேற்பட்ட சண்டை கலைஞர்களுக்கு தனது சொந்த பணத்தில் இருந்து மாதாந்திர உதவி தொகை வழங்கி வந்தார்.