உள்ளூர் செய்திகள்

ரூம் பாய்

தயாரிப்பு: ஏசிஎம் சினிமாஸ்
இயக்கம்: ஜெகன் ராயன்
நடிப்பு: நிகில், ஹர்ஷா, அருண்ராஜா
ஒளிப்பதிவு: பாரதிராஜன்
இசை: வேலன் சகாதேவன்
வெளியான தேதி: ஏப்ரல் 17, 2026
நேரம்: 2 மணி 14 நிமிடங்கள்
ரேட்டிங்: 2 / 5

ஏலகிரியில் இருக்கும் ஓட்டல் ஒன்றில் ரூம்பாய் ஆக இருக்கும் ஹீரோ நிகில், அந்த ஓட்டல் மானேஜரை கொடூரமாக கொல்கிறார். அவரை வில்லன் கும்பல் தேடுகிறது. ஒரு கூர்நோக்கு இல்லத்தின் காப்பாளர் காணாமல் போகிறார். அந்த வழக்கிலும் நிகிலை போலீஸ் தேடுகிறது. ஓட்டலில் என்ன நடந்தது? காப்பாளர் எப்படி காணாமல் போனார். ஹீரோ நிகில் யார்? அவர் பிடிபட்டாரா? இதுதான் ரூம்பாய் படத்தின் கதை. இதை குடும்ப சென்டிமென்ட், தங்கச்சி பாசம், காதல், கள்ளக்காதல், ரவுடியிசம் என பல விஷயங்களை கலந்து, இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில் கொடுத்து இருக்கிறார் இயக்குனர் ஜெகன் ராயன்.

ஹீரோவாக நடித்த நிகில் ஸ்மார்ட் ஆக இருக்கிறார். ஓட்டலில் வேலை, அங்கு தங்கும் ஹர்ஷாவுடன் காதல், நண்பர்களுடன் காமெடி என சிறப்பாக நடித்து இருக்கிறார். பாடல்காட்சிகளிலும் அழகாக இருக்கிறார். ஓட்டல் அறைகளில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது, ஏதோ தவறு நடக்கிறது என்பதை கண்டுபிடிக்க, கதை இன்னும் சூடுபிடிக்கிறது. அந்த ரகசிய கட்டுப்பாட்டுஅறைக்கு சென்று சில வீடியோக்களை ஹீரோ பார்க்கும்போது தனது குடும்பமும் பாதிக்கப்பட்டு இருப்பதை அறிந்து, ஓட்டல் மானேஜரை கொல்கிறார். இந்த தவறை செய்து பணம் பறிக்கும் வில்லன் கும்பல் இவரை தேட, இதற்கிடையில் காணாமல் போன தனது தந்தையை ஒரு இளம் பெண் தேட, இரண்டு கதைகளும் ஒரு இடத்தில் கனெக்ட் ஆகிறது. அடுத்து என்ன நடக்கிறது என்ற ரீதியில் விறுவிறுப்பாக திரைக்கதையை அமைத்துள்ளார் இயக்குனர். கொஞ்சம் இளம் வயதாக இருந்தாலும் ஹீரோ நடிப்பு,ஆக் ஷன் ஓகே. என்ன அந்த காதல் காட்சிகள் செட்டாகவில்லை.

முதற்பாதியில் காமெடி, காதல், குடும்பம் என மெதுவாக நகரும் கதை, அடுத்த பாதியில் வேகம் எடுக்கிறது. ஓட்டல் அறையில் கேமரா, பாதிக்கப்படும் ஜோடிகள், பணம் பறிக்கும் கும்பல், இன்னொரு கதையாக இரண்டு குடும்பம், கள்ளக்காதல், சதி என திருப்பங்களும் வருகின்றன. வில்லன்கள் பின்னணி புதுமையாக இருந்தாலும், அனைவரும் நடித்து தள்ளியிருக்கிறார்கள். அது எரிச்சல் அடைய வைக்கிறது. போலீஸ் விசாரணையிலும் சீரியஸ் தன்மை இல்லை. இரண்டாம் பாதியில் வரும் இரண்டு குடும்பங்கள் சம்பந்தப்பட்ட கதையில், இப்படியெல்லாம் கள்ளக்காதல்களா? என்று சலிப்பு ஏற்படுகிறது. அதில் காண்பிக்கப்படும் கரைம், திட்டங்கள் கொடூரமானது.

ஏலகிரியின் அழகை அழகாக காண்பித்து இருக்கிறார்கள். ஓட்டல் சம்பந்தப்பட்டகாட்சிகளிலும் கலர்புல். காதல் பாட்டு ஓகே. சம்பந்தம் இல்லாத கவர்ச்சி பாடல் படத்துக்கு தடை. இரண்டு கதைகளையும், பல்வேறு சம்பவங்களை கிளைமாக்சில் இணைத்து இருப்பது பிளஸ். புதுமுகங்கள் அதிகம் நடித்து இருப்பதும், அவர்களின் நாடகத்தனமான நடிப்பும், முதற்பாதி கதையோட்டமும் படத்துக்கு ஸ்பீடுபிரேக்கர்.

இனி ஓட்டலில் தங்குமுன்பு எங்கேயாவது ரகசிய கேமரா இருக்குதானு செக் பண்ணுங்க. கண்ட, கண்ட இடத்தில் கேமரா வைத்து உங்கள் அந்தரங்கங்களை வீடியோ எடுக்கலாம். உங்களை மிரட்டலாம். உஷாராக இருங்க என்ற விழிப்புணர்வு கருத்து வரவேற்கப்பட வேண்டியது. இதை பட்ஜெட் காரணமாக, புதுமுகங்களை வைத்து சொன்னதாலும், திரைக்கதையில் பல இடங்களில் தவறு செய்தாலும் முழுமையாக ரசிக்க முடியலை.

ரூம்பாய் - ரூமில் ஜாய் ஆக இருப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கை மணி



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !