தொடக்கம் (மலையாளம்)
தயாரிப்பு : ஆசீர்வாத் சினிமாஸ்
இயக்கம் : ஜூட் ஆண்டனி ஜோசப்
நடிப்பு : மோகன்லால், விஸ்மயா மோகன்லால், மனோஜ் கே.ஜெயன், ஆசிஷ் ஜோ ஆண்டனி, சாய்குமார், கோட்டயம் ரமேஷ், சிப்பி ரஞ்சித், ஜாபர் இடுக்கி
இசை : ஜேக்ஸ் பிஜாய்
ஒளிப்பதிவு : ஜோமோன் டி. ஜான் மற்றும் அகில் ஜார்ஜ்
வெளியீடு : 7 ஆகஸ்ட் 2026
ரன்னிங் டைம் : 2 மணிநேரம் 19 நிமிடம்
ரேட்டிங் - 2.75/5
மோகன்லாலின் மகள் விஸ்மயா கதாநாயகியாக அறிமுகமாகியிருக்கும் படம் இது.
வி.ஏ.ஓவாக பணியாற்றும் மாற்றுத்திறனாளி தந்தை சாய்குமார். அவரது மகள் விஸ்மயா. ஒரு நாள் வங்கித் தேர்வு எழுதச் சென்ற விஸ்மயா வீடு திரும்பாததால் போலீசில் புகார் கொடுக்கிறார் சாய்குமார். இரவோடு இரவாக இன்ஸ்பெக்டர் மனோஜ் கே.ஜெயன் தலைமையில் ஒரு பக்கம் போலீஸ் தீவிர விசாரணையில் ஈடுபட, எதிர்பாராத விதமாக வீடு வந்து சேர்கிறார் விஸ்மயா. பின்னர் தான் தெரிகிறது வரும் வழியில் ஒரு பிரச்னையை சந்தித்து சமாளித்து அவர் தப்பி வந்திருகிறார் என்று. அப்போதைக்கு பெருமூச்சு விட்டாலும், பிரச்னை பின் தொடர்ந்து வந்து அன்றிரவே அவர் வீட்டுக்கதவை தட்டுகிறது. அது என்ன பிரச்னை ? அதில் எப்படி விஸ்மயா சிக்கினார் ? தேடி வந்த பிரச்னையை அவர் எப்படி எதிர்கொண்டார் என்பது மீதிக்கதை.
கதாநாயகியாக இது முதல் படம் என்றாலும், அதுபோன்ற எந்தத் தயக்கமும் இன்றி இயல்பாக நடித்துள்ள விஸ்மயா, முதல் படத்திலேயே ஆக்ஷனிலும் கலக்கியிருக்கிறார். இன்டர்வெல்லில் அவரது கதாபாத்திர ட்விஸ்ட் எதிர்பாராத ஒன்று. டூயட் பாடும் படங்களை விட கதை அம்சம் கொண்ட படங்களில் கவனம் செலுத்தினால் தனக்கென ஒரு தனி இடத்தை பிடிப்பார்.
வில்லனாக மிரட்டும் ஆசிஷ் ஜோ ஆண்டனி படம் முழுவதும் பயமுறுத்துகிறார். பாந்தமான இன்ஸ்பெக்டராக மனோஜ் கே.ஜெயனும், பக்குவமான கான்ஸ்டபிளாக ஜாபர் இடுக்கியும் மனதில் நிற்கும் விதமாக, விஸ்மயாவைத் தேடும் இவர்களின் தேடல் இடைவேளை வரை பரபரப்பாகச் செல்கிறது. அப்பாவாக சாய்குமார், அம்மாவாக சிப்பி ரஞ்சித், பக்கத்து வீட்டு நண்பராக கோட்டயம் ரமேஷ் என மற்றவர்களும் பொருத்தமான தேர்வு. மகள் படம் என்றாலும் ஒரு அத்தியாவசியமான சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கும் மோகன்லால், தன் பங்கிற்கு ஒரு சண்டைக் காட்சியிலும் அசத்துகிறார்.
ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசையும், ஜோமோன் டி. ஜான் மற்றும் அகில் ஜார்ஜின் திகில் கலந்த ஒளிப்பதிவும் ரசிகர்களுக்கு பதைபதைப்பை ஏற்படுத்துவதில் போட்டிபோட்டு இருக்கின்றன.. சமன் சாக்கோவின் படத்தொகுப்பும் ரசிகர்களைக் கட்டிப்போடுவதில் ஓரளவு வெற்றிகரமாகச் செயல்பட்டுள்ளது.
கேரளாவின் மழை வெள்ளப் பாதிப்பை மையப்படுத்தி '2018' என்கிற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப், இப்படத்தில் பெண்களின் தற்காப்பை மையமாக வைத்து விறுவிறுப்பான திரைக்கதையுடன் இயக்கியுள்ளார். திக் திக் ரக இடைவேளைக் காட்சியும், நகம் கடிக்க வைக்கும் கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியும் சிறப்பு. இரண்டாம் பாதியில் சிறிய தொய்வு இருந்தாலும், பெண்களின் தற்காப்பை அழுத்தமாகச் சொன்னதற்காக இயக்குநரை தாராளமாகப் பாராட்டலாம்.
தொடக்கம் - பிளாஸ்ட்