ஐ ஆம் கேம்
தயாரிப்பு : வே பாரர் பிலிம்ஸ்
இயக்கம் : நகாஸ் ஹிதாயத்
நடிப்பு : துல்கர் சல்மான், கயாடு லோகர், மிஷ்கின், கதிர், ஆண்டனி வர்கீஸ், யோகி பாபு, சம்யுக்தா விஸ்வநாதன்
இசை : ஜேக்ஸ் பிஜாய்
ஒளிப்பதிவு : ஜிம்சி காலித் & ஜோமோன் டி ஜான்
வெளியான தேதி : செப்டம்பர் 3 2026
ரன்னிங் டைம் : 2 மணி 54 நிமிடங்கள்
ரேட்டிங் : 3 / 5
கோடீஸ்வர வீட்டுப் பிள்ளையான துல்கர் சல்மான் சூதாட்டமே பொழுதுபோக்கு என கோடிகளைத் தொலைக்கிறார். சூதாட்ட விடுதியில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் இருந்து காரில் தப்பிக்கும் போது விபத்துக்குள்ளாகி துல்கர் சல்மானின் வலது கை துண்டாகிறது. உடனடியாக அவருக்கு கைமாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. கொஞ்ச நாளிலேயே அந்த வலது கை துல்கர் சல்மானின் மூளையின் உத்தரவுக்கு கட்டுப்படாமல் தன்னிச்சையாக சில விஷயங்களைச் செய்கிறது. அதேசமயம் அதன் மூலம் அவருக்கு சில நல்ல விஷயங்கள் நடக்க, "தனக்கு நல்லது செய்வதற்காகத் தான் அந்த கை எனக்கு கிடைத்திருக்கிறது" என குஷியாகிறார். ஆனால் எதிர்பாராத விதமாக ஒரு நாள் தனது கட்டுப்பாட்டை மீறி சூதாட்ட விடுதிக்கு வரும் பிரபல கிரிக்கெட் லீக் டீம் ஒன்றின் முதலாளியான மிஷ்கினையே தாக்கி கொலை செய்ய முயற்சிக்கிறது. இதனைத் தொடர்ந்து, அந்த கை யாருடையது? எதற்காக மிஷ்கினைப் பழிவாங்கத் துடிக்கிறது? என்கிற விவரங்கள் தெரியவரும் போது அதிர்ச்சியாகிறார் துல்கர் சல்மான். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது விறுவிறுப்பான மீதி கதை.
அடிதடி மற்றும் பழிவாங்கல் காட்சிகளுக்குப் பெயர்பெற்ற ஆர்.டி.எக்ஸ். படத்தை இயக்கிய நகாஸ் ஹிதாயத் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
ஆரம்பத்தில் துல்கர் சல்மான் பிளேபாய் போல தோன்றினாலும், அவருக்கு கைமாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பிறகு அவர் ஆடும் ஆட்டம் அதிரடி. குறிப்பாக ஒன் மேன் ஷோ போல தனது வலது கையைச் சமாளிக்க முடியாமல் தானே சித்திரவதை அனுபவிக்கும் காட்சிகளில் மிகச் சிறந்த நடிப்பைக் கொடுத்திருக்கிறார். நீண்ட நாளைக்குப் பிறகு துல்கர் சல்மானுக்கு சொல்லிக் கொள்ளும்படியான ஆக்ஷன் காட்சிகள், அதிலும் வெளுத்து வாங்குகிறார். கயாடு லோகர் உடனான காதல் காட்சிகளிலும் கலாட்டா செய்திருக்கிறார்.
நாயகனுக்கு உதவியாக ஆரம்பத்தில் அவரை குணப்படுத்தும் மருத்துவராகவும், பின்னர் அவரது லட்சியத்துக்குத் துணை நிற்கும் காதலியாகவும் தனது பங்கை சிறப்பாகச் செய்திருக்கிறார் வெள்ளை தேவதை கயாடு லோகர்.
மீண்டும் ஒரு ஆர்ப்பாட்டமான வில்லன் கதாபாத்திரத்தில் மிஷ்கின். வெளி பார்வைக்கு கிரிக்கெட் டீம் ஓனர், உள்ளுக்குள்ளே ரவுடிசம் என ஒரு தெலுங்கு பட வில்லனுக்குரிய அத்தனை அம்சங்களையும் பிரதிபலித்திருக்கிறார். ஆனால் ஆண்டனி வர்கீஸ் மற்றும் துல்கர் சல்மான் இருவரிடமும் அடிவாங்கும் போது மட்டும் அவரை பார்க்கும் போது பரிதாபமாக இருக்கிறது.
இடைவேளைக்குப் பிறகு பிளாஷ்பேக்கில் கொஞ்ச நேரமே வந்தாலும் கதையைத் தாங்கிப் பிடிக்கும் முக்கிய கதாபாத்திரமாக ஆண்டனி வர்கீஸ். கிரிக்கெட் வீரராகப் பொருத்தமான தேர்வு. என்பதால் மிஷ்கினை எதிர்த்து அவர் ஆடும் அந்த ருத்ரதாண்டவம் சபாஷ் போட வைக்கிறது. முடிவு கண்கலங்க வைக்கிறது. அவருக்கு ஏற்ற பொருத்தமான ஜோடியாக சம்யுக்தா விஸ்வநாதன். ஆண்டனி மற்றும் துல்கர் சல்மான் கதாபாத்திரங்களை இணைக்கும் பாலமாகச் சிறப்பான நடிப்பு.
கிரிக்கெட் கேப்டனாக முக்கியமான நெகட்டிவ் கதாபாத்திரத்தில் கதிர் கதையோடு பயணிக்கும் பாத்திரம் என்பதால் முக்கியத்துவம் பெறுகிறது. துல்கரின் அம்மாவாக ஜெயசுதா, நண்பனாக வினய் போர்ட், முதல் கடைசி கிளைமாக்ஸ் காட்சியில் போகிற போக்கில் என்ட்ரி கொடுக்கும் யோகி பாபு என பலரும் பொருத்தமான தேர்வுதான்.
சூதாட்டக் காட்சிகள், சேசிங் காட்சிகள், ஆக்ஷன் காட்சிகள் என எல்லாவற்றிலும் ஒரு பரபரப்புடன் சுழன்றிருக்கிறது ஜிம்சி காலித் மற்றும் ஜோ மோன் டி ஜானின் ஒளிப்பதிவு. படத்தின் விறுவிறுப்புக்கு இவர்கள் பக்கபலமாக நிற்கிறார்கள். ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசை ஆக்ஷன் காட்சிகளில் உசுப்பேற்றுகிறது.
ஒரு பேய் படத்தை பேன்டசி கலந்து ஒரு ஜனரஞ்சகமான கமர்சியல் படமாகக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் நகாஸ் ஹிதாயத். வழக்கமாக ஆவியாக அல்லது ஒரு காராக ஒரு பொம்மையாக இப்படி பழிவாங்கிக் கொண்டிருந்த காலம் போய், ஒரு கை பழிவாங்குகிறது என்கிற கான்செப்ட் உண்மையிலேயே புதிதுதான். படத்தின் ஆரம்பத்தில் கிட்டத்தட்ட 20 நிமிடம் சூதாட்டக் காட்சிகளே பிரதானமாகக் காட்டப்படுவதால், அதை நோக்கித்தான் கதை நகருகிறது என்பது போல ரசிகர்களைத் தயார்படுத்தி பின்பு வேறு ஒரு ரூட்டுக்கு மாறுவது கொஞ்சம் அலுப்பைத் தருகிறது. அந்த காட்சிகளின் நீளத்தைத் தாராளமாகக் குறைத்திருக்கலாம். அதேபோல ஆண்டனி வர்கீஸ் மற்றும் துல்கர் சல்மான் ஆகியோருடன் மிஷ்கின் மற்றும் அவரது ஆட்கள் மோதும் சண்டைக் காட்சிகளின் நீளத்தையும் இன்னும் கொஞ்சம் குறைத்திருக்கலாம். இது மலையாளத்தில் உருவான படம் என்றால் யாரும் நம்பப் போவதில்லை. அந்த வகையில் அனைத்து மொழி ரசிகர்களையும் திருப்திப்படுத்தும் ஒரு கமர்சியல் படமாக இதைக் கொடுத்திருக்கிறார்கள். தாராளமாக ஒரு முறை இந்தப் படத்தை பார்க்கலாம்.
ஐ ஆம் கேம் - தமிழ், தெலுங்கு ரசிகர்களுக்காக மலையாளத்தில் உருவாக்கப்பட்ட படம்.