அறங்காவலர்களை தேர்வு செய்ய 214 கோவில்களில் நடவடிக்கை
சென்னை: ஹிந்து சமய அறநிலையத்துறை கீழ் இயங்கும், 214 கோவில்களில், அறங்காவலர் குழுக்களை தேர்வு செய்வதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
ஹிந்து சமய அறநிலையத்துறையின் கீழ் 43,723 கோவில்கள், 45 மடங்கள், 22 சமண கோவில்கள், 2,393 அறக்கட்டளைகள் உள்ளன. கோவில்களில் துாய்மை, பாதுகாப்பு, புனரமைப்பு, கும்பாபிேஷகம் போன்ற பணிகள், துறை வாயிலாக மேற்கொள்ளப்படுகின்றன. கோவில்களுக்கு வரும் பக்தர்களுக்கு, தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்படுகின்றன. இப்பணிகளை, துறை அலுவலர்களுடன் இணைந்து, சிறப்பாக செய்ய, அறங்காவலர் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. தி.மு.க., ஆட்சியில் பல கோவில்களில் அறங்காவலர் குழு நியமிக்கப்படவில்லை. தமிழக வெற்றிக் கழகம் அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், 214 கோவில்களில் அறங்காவலர் குழுக்களை தேர்வு செய்வதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக, ஹிந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை: துறை கட்டுப்பாட்டில் உள்ள 214 கோவில்களுக்கு, பரம்பரை முறைவழிசாரா அறங்காவலர்கள் நியமிக்க, தகுதியுள்ள நபர்களிடம் இருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அறங்காவலர் நியமன அறிவிப்பு, அறங்காவலர் நியமனம் செய்யப்பட உள்ள கோவில்கள் விபரம், தகுதிகள், விண்ணப்ப படிவம் ஆகியவை www.hrce.tn.gov.in இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. விண்ணப்பங்களை இணையவழியில் பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, ஜூலை 22ம் தேதி மாலை 5:45 மணிக்குள் அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.