காளையார்குறிச்சி சுண்ணாம்பு பாறை குடைவரை கோயில் சிலை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்த எதிர்பார்ப்பு
சிவகாசி: சிவகாசி அருகே களையார்குறிச்சி அர்ஜுனா நதிக்கரையில் சுண்ணாம்பு பாறை குடைவரைக் கோயிலை ரூ.66 லட்சத்தில் தொல்லியல் துறை புனரமைத்தும் பூட்டிக் கிடப்பதால் வரலாற்று ஆர்வலர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
கோயிலில் சிலை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்த தொல்லியல், அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
சிவகாசி அருகே காளையார்குறிச்சயில் அர்ஜுனா நதிக்கரையில் பூமிக்கு அடியில் சுண்ணாம்பு பாறையை குடைந்து அமைக்கப்பட்ட குடைவரைக் கோயில் உள்ளதை கிராம மக்கள் 2020ம் ஆண்டில் கண்டறிந்தனர். சுற்றிலும் புதர்மண்டி கோயில் இருப்பதே தெரியாத நிலையில் இருந்தது. அப்பகுதி மக்கள், தொல்லியல் ஆர்வலர்கள் உதவியுடன் புதர் அகற்றப்பட்டு அப்பகுதி சுத்தப்படுத்தப்பட்டது. இக்கோயிலின் முகப்பு மண்டபத்தில் இருந்து இடதுபுறமாக பக்கவாட்டுக்குச் சென்றால், பாதாளச் சுரங்கமாக திருச்சுற்று பிரகாரம் ஆரம்பித்து, வலதுபுறமாக மீண்டும் முகப்பு மண்டபத்திற்கு வருவது போலவும் இரு பிரகாரங்கள் உடன் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் கருவறையைச் சுற்றி வருவதற்கு சுரங்கப்பாதை போன்ற அமைப்பு உள்ளது தெரியவந்தது.
இது குறித்து தொல்லியல் ஆய்வாளர் சாந்தலிங்கம் ஆய்வு செய்து தமிழக தொல்லியல் துறைக்கு அறிக்கை அளித்தார். அதன்பின் இந்த குடைவரை கோயில் ஆவணப்படுத்தப்பட்டு தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது.
விருதுநகர் மாவட்டம் உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கரைக்கு மேலே உள்ள கற் பாறைகளை குடைந்து அமைக்கப்பட்ட குடைவரை கோயில்களே உள்ள நிலையில், சுண்ணாம்பு பாறையில் பூமிக்கடியில் அமைக்கப்பட்ட இந்த குடைவரை கோயில் மிகவும் அபூர்வமானது என தொல்லியல் ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
2024ல் இக்கோயிலை பழமை மாறாமல் புதுப்பித்து, பாதுகாப்பு வேலி மற்றும் காப்பாளர் அறை அமைப்பது உள்ளிட்ட பணிகளுக்காக ரூ.65 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. புனரமைப்பு பணிகள் முடிந்த நிலையில் கோயில் பூட்டி வைக்கப்பட்டுள்ளதால் வரலாற்று ஆர்வலர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். கோயிலை மக்கள் மற்றும் மாணவர்கள் பார்வையிட அனுமதி வழங்குவதுடன்,
கருவறையில் சிலை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்த தொல்லியல் துறை, அறநிலையத்துறை இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.