பிராம்பனன் கோவிலில் வழிப்பட்டது பெரும் பாக்கியம்.. நான் அதிர்ஷ்டசாலி; பிரதமர் மோடி பெருமிதம்
ஜகர்த்தா: ‘நறுமணம் வீசும் கலாசார பாரம்பரியம் தான், நம் இரு நாடுகளையும் ஒன்றிணைக்கிறது,’’ என்று பிரசித்தி பெற்ற பிராம்பனன் கோவிலில் வழிபாடு நடத்திய பிரதமர் மோடி தெரிவித்தார்.
இந்தோனேஷியாவின் புகழ்பெற்ற ஹிந்து கோவிலான பிராம்பனன் கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார். பிறகு நிருபர்களிடம் பிரதமர் மோடி கூறியதாவது: சிவபெருமானுடன் தொடர்பு கொள்வதற்கான வாய்ப்பு எனக்கு அடிக்கடி கிடைப்பது எனது நற்பேறு. நான் குஜராத் மாநிலம் வத்நகரில் பிறந்தேன். ஹட்கேஷ்வர் மகாதேவர் கோவில் ஒரு மிக முக்கியமான புனிதத் தலமாகும். குஜராத் மண்ணில் அமைந்துள்ள சோமநாதர் கோவில், பன்னிரு ஜோதிர்லிங்கங்களில் முதலாவதாகத் திகழ்கிறது. காசி விஸ்வநாதரின் ஆசிகள் எப்போதும் என்னுடன் உள்ளன. இன்று இங்கு வந்து ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஹிந்து கோவிலான பிராம்பனன் கோவிலில் வழிப்பட்டதை நான் பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன். மிகவும் அதிர்ஷ்டசாலியாகக் கருதுகிறேன். இது மிகவும் மகிழ்ச்சியான ஒரு அனுபவமாக அமைந்துள்ளது. நான் இங்கு வந்து மூன்று நாட்கள் ஆகின்றன.
இந்நாட்டு மக்களின் வாழ்க்கை முறை, உரையாடல் மற்றும் சூழலில் ஒரு கலாசார நறுமணம் கமழ்வதை உணர முடிகிறது. இந்தியாவில் நாம் ஒவ்வொரு கணமும் உணரும் அதே நறுமணம் இது. கலாசாரப் பாரம்பரியத்தின் இந்த நறுமணம் நம்மை ஒருவருக்கொருவர் இணைக்கிறது. இந்தப் பாரம்பரியத்தை அவர்கள் பாதுகாத்து வைத்திருக்கும் விதத்திற்காக நான் இங்குள்ள மக்களுக்கு நன்றி கூறுகிறேன். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். நமது நிருபர்