கீழ்குந்தாவில் ‘தெவ்வப்பா’ திருவிழா கோலாகலம்
ஊட்டி: கீழ்குந்தா கிராமத்தில் குந்தை சீமை படுகர் இன மக்களின் பாரம்பரிய பண்டிகையான ‘தெவ்வப்பா’ கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில், படுகர் இன மக்கள் அதிகமாக வாழ்ந்து வருகின்றனர். நூற்றாண்டுகளை கடந்து தங்களது வழிபாட்டு முறைகளை கடைப்பிடித்து வரும் படுகர் இன மக்கள் ஆண்டுதோறும் ‘தெவ்வப்பா’ பண்டிகையை கொண்டாடுவது வழக்கம். குந்தை சீமைக்குட்பட்ட கீழ்குந்தா கிராமத்தில் ‘தெவ்வப்பா’ பண்டிகை நடந்தது. துானேரி, பாக்கோரை, மட்டக்கண்டி, மஞ்சூர், முள்ளிகூர் என, 14 கிராமங்களை சேர்ந்த ஏராளமான படுகர் இன மக்கள் ‘தெவ்வப்பா ’பண்டிகையை கொண்டாடினர். பனகுடியில் நடந்த பூஜையில் திரளான படுகரின மக்கள் வரிசையில் நின்று காணிக்கை செலுத்தினர். தொடர்ந்து, விவசாயம் செய்யப்பட்டு அறுவடையான திணையை (கோதுமை) அறுவடை செய்து பக்தியுடன் கோவிலுக்கு வந்தடைந்து ‘அரிகட்டுதல்’ என்னும் நிகழ்ச்சியில் காடெ ஹெத்தையம்மனுக்கு படையலிட்டனர்.
பின், நடந்த சிறப்பு பூஜையில் உலகில் அமைதி நிலவ வேண்டும் மக்கள் நோய் நொடி இல்லாமல் வாழ வேண்டும் விவசாயம் செழிக்க மழை வேண்டி வழிபாடு நடத்தினர். நிகழ்ச்சியில், முள்ளிகூர் தேவர் கவுடர் போஜாகவுடர், குந்தை சீமை பார்ப்பத்தி ராதாகிருஷ்ணன் கவுடர், ஊட்டி எம்.எல்.ஏ., போஜராஜ், குந்தா ரோட்டரி சங்க தலைவர் சரஸ்வதி உட்பட திரளான மக்கள் பங்கேற்றனர்.