தஞ்சாவூர் பெரியகோவிலில் வாராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா கணபதி ஹோமத்துடன் துவக்கம்
தஞ்சாவூர்; உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரியகோவிலில் மஹாவாராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா மஹாகணபதி ஹோமத்துடன் தொடங்கியது, ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
தஞ்சாவூர் பெரியகோவில் என்றழைக்கப்படும் பெருவுடையார் திருக்கோயிலில் தனிசன்னதியாக உள்ள மஹாவாராஹி அம்மனுக்கு ஆண்டுதோறும் ஆஷாட நவராத்திரி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆஷாட நவராத்திரி விழா தஞ்சை பெரியகோவிலில் உள்ள மஹாவாராகி அம்மனுக்கு மட்டுமே நடைபெறும், வேறெங்கும் நடைபெறுவது இல்லை, இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆஷாட நவராத்திரி விழா தஞ்சை பெரியகோவிலில் மஹாகணபதி ஹோமத்துடன் சிறப்பாக இன்று தொடங்கியது, 10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் இனிப்பு அலங்காரம், குங்குமம் அலங்காரம், மஞ்சள் அலங்காரம், சந்தனம் அலங்காரம், மாதுளை அலங்காரம் என பல்வேறு அலங்காரங்கள் மாலையில் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற உள்ளது, மேலும் அதனைத்தொடர்ந்து மாலை கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது, ஆஷாட நவராத்திரியை முன்னிட்டு பக்தர்கள் மாலை அணிந்து விரதம் துவங்கினர். இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு மஹா வாராஹி அம்மனை வழிபட்டனர்.