உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணியில் ஆடி கிருத்திகை விழா வசதிகள் ஏற்படுத்த நகராட்சி தீர்மானம்

திருத்தணியில் ஆடி கிருத்திகை விழா வசதிகள் ஏற்படுத்த நகராட்சி தீர்மானம்

திருத்தணி: திருத்தணி நகராட்சி கூட்டத்தில், ஆடி கிருத்திகையை முன்னிட்டு முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தருவது என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருத்தணி நகராட்சியில், கவுன்சிலர்களின் சாதாரண கூட்டம், நேற்று நகராட்சி தலைவர் சரஸ்வதி தலைமையில் நடந்தது. துணை தலைவர் சாமிராஜ் முன்னிலை வகித்தார். கமிஷனர் கன்னியப்பன் வரவேற்றார். கூட்டத்தில், 17 தி.மு.க., 2 அ.தி.மு.க., ஒரு சுயேட்சை என, மொத்தம் 20 கவுன்சிலர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில், வரவு – செலவு கணக்கு சரிபார்க்கப்பட்டது.

தொடர்ந்து, முருகன் கோவிலில் அடுத்த மாதம் 4ம் தேதி முதல் 8ம் தேதி வரை நடைபெறும் ஆடிக்கிருத்திகை விழாவுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தருவது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதோடு, 21 வார்டுகளில் மழைநீர் வடிகால்வாய், சேதமடைந்த சாலைகளை சீரமைத்தல் போன்ற வளர்ச்சி பணிகளை, 70 லட்சம் ரூபாயில் மேற்கொள்வது குறித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக, 5, 8 மற்றும் 15வது வார்டுகளில், வளர்ச்சி பணிகள் மேற்கொள்வதில் பாரபட்சம் காட்டப்படுவதாக கூறி, மூன்று தி.மு.க., கவுன்சிலர்கள் கூட்டத்தில் இருந்து வெளியேறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !